ஆளாளுக்கு டாக்டர் ஆகறாங்க!

ழ்வார்பேட்டை ஆறுமுகத்துக்கு அடைமழைக் காலம் தொடங்கி விட்டாலே, அவஸ்தைதான். போதாக்குறைக்கு அடுத்துவரும் பனிக்காலமும் சேர்ந்துகொள்வதால், நீர் கோர்த்த வீங்கிய முகத்துடன் மூக்கால்தான் பேசித்திரிவார். பொதுவாகவே அலோபதி ட்ரீட்மென்ட் என்றால், சகல மாத்திரை வைத்தியமும் செய்து பார்த்துவிடுவார். பக்கத்து வீட்டு பத்மநாபன்தான் அவசரத்துக்கு ஆலோசனை சொல்வார். அவர் சொன்ன சித்தா டாக்டரைப் பார்த்தார். எல்லாவற்ரையும் கேட்டுவிட்டு நிறையப் பொடிகளும் பொட்டலம் பொட்டலமாக 144 பொட்டலங்களையும் கொடுத்தார். அவருக்குக் கிடைத்த மேலும் பல நண்பர்கள் மற்றும் டாக்டர்கள் மூலம் கிடைத்த டிப்ஸ்கள் வாசகர்களுக்கு உபயோகமாக இருக்குமே என்று இங்கே தருகிறோம். ஆனால் நோய் சரியாகுமா என்பதற்கெல்லாம் உத்தரவாதம் தர முடியாது.

சீரகத்தை நல்லா வறுத்து சுடு தண்ணியில போட்டுக் குடிங்க. எல்லாம் சரியாகிடும். அப்புறம் எப்போ குடிச்சாலும் சுக்கு காப்பி குடிங்க. எந்தப் பிரச்னையும் இருக்காது. (உடம்பு சூடாகிப்போய் பட்ட பாட்டை யாரிடம் சொல்வது?)

நைட்ல ஃபேன் போடாம வெறும் பாயில தலையணை வெச்சுக்காம தூங்கிப்பாருங்க. ( விடிய விடிய தூங்காமல் அன்னிக்கி சிவராத்திரிதான்!)

கோதுமையில செஞ்சதெல்லாம் சாப்பிடாதீங்க. நம்ம ஊர் இட்லி, தோசை சாப்பிடுங்க. ஃப்ரிட்ஜில வைச்ச எதையும் சாப்பிடாதீங்க. ஐஸ்க்ரீம், சின்ன வெங்காயம், முள்ளங்கி, சுரைக்காய், செளசெள, சேர்த்துக்காதீங்க. பஜ்ஜி, போண்டா, முறுக்கு, பொரிச்சது, எதையும் சாப்பிடாதீங்க. (‘தெனாலி’ கமல் ஹாசன் மாதிரி எந்த தின்பண்டத்தைப் பார்த்தாலும் பயம்தான்!) 

மிலிட்ரி ரம் வாங்கி வெச்சுக்கங்க சார். ரெகுலரா 90 எம்எல் எடுத்துக்குங்க. எந்தப் பிரச்னையும் இருக்காது. மில்ட்ரில எல்லாம் அதை சாப்புட்டுதான் தெம்பா இருக்காங்க. இல்லைனா காஷ்மீர் பனியைத் தாங்க முடியுமா? (மச்சி ஓப்பன் தி பாட்டில்!)

சார், காலை நேரத்துல வேகமா 45 நிமிசம் நடந்து போங்க. அப்படியே யூ டர்ன் அடிச்சுத் திரும்பி வாங்க, சரியாகிடும். (நைட்ல தூங்குறதே ராத்திரி 12 மணி. இதுல காலையில எங்க வாக்கிங் போறது?)

சென்னையிலயா இருக்கீங்க? விஷப்பனி, வாகனப் புகை, போதாக்குறைக்கு டிரெய்னேஜ் ப்ராப்ளம்.  நீங்க செங்கல்பட்டைத் தாண்டிட்டினீங்கனாலே நெஞ்செல்லாம் அடைச்சுக்கும். பேசாம என்னை மாதிரி காஞ்சிபுரம் பக்கம் வந்துடுங்க. டெய்லி ட்ரெயின்ல போயிடுலாம். (காஞ்சிபுரத்துல ரியல் எஸ்டேட் பண்றாரோ?)

அட்வைஸ்கள் எல்லாப் பக்கங்களில் இருந்தும் ஆறுமுகத்துக்குக் கிடைத்தன. ஆனால் சைனஸ்தான் விட்டபாடில்லை. புதிதாக வேலைக்குச் சேர்ந்த பையனுக்கும் சைனஸ் ப்ராப்ளம். ‘என்ன செய்யலாம் சார்?’ என்று வந்தான். விடுவாரா? ஆறுமுகமும் டாக்டராகி விட்டார்!

-எஸ்.கதிரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick