யாருய்யா அந்த முன்னோர்கள்?

மீபகாலமாக யாரிடம் பேசினாலும் ஆ வூன்னா, ‘இதைத்தான் நம் முன்னோர்கள் அந்தக் காலத்துலேயே...’ என்று ஆரம்பித்து விடுகிறார்கள்.

முன்பெல்லாம் சில ஆன்மிகவாதிகள், எழுத்தாளர்கள், வீட்டுப் பெரியவர்கள்தான் இப்படி ஆரம்பித்தார்கள். இப்போ சக நண்பர்கள் முதல், முகம் பார்க்காத இணைய நண்பர்களும் ஆளாளுக்கு முன்னோர்கள் சொன்னார்கள் என்று கலந்து கட்டி அடிக்கிறார்கள்.

சமீபத்தில் கொட்டித் தீர்த்த மழை, வெள்ள பாதிப்புகளை 3,000 வருடங்களுக்கு முன்பே நம் முன்னோர்கள் எழுதி வைத்துள்ளார்கள் என்றும் அதிலும் குறிப்பாக சென்னை மிகவும் பாதிக்கப்படும் என்று எழுதி வைத்துள்ளதாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் ஒரு புத்தகப் பக்கத்தைக் காட்டி பரப்பிக்கொண்டிருந்தார்கள். அதை உன்னிப்பாகக் கவனித்தால் இந்த வருடம் பிரின்ட் செய்த புத்தகமாக உள்ளது. சரி அப்படியே எழுதி வைத்தவர்கள் அதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று ஏன் குறிப்பிடவில்லை, நம் மீது அவ்வளவு கோபமா முன்னோர்களுக்கு?

இதில் எனக்கு வந்த சந்தேகம், சென்னையை எப்படிக் குறிப்பிட்டார்கள் என்பதுதான். காரணம், 300 ஆண்டுகள் வரை மதராஸ், மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்த ஊருக்கு 15 வருடங்களுக்கு முன்புதான் சென்னை என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக வைத்தார்கள். இந்தப் பெயர் எப்படி 300 ஆண்டுகளுக்கு முன்பு கணித்தவர்களுக்குத் தெரியும்? முன்னோர்களுக்குத் தெரியாததா என்று இதற்கும் ஒரு விளக்கம் சொன்னாலும் சொல்வார்கள்.

நண்பரோடு டீ சாப்பிடச் சென்றது என் குத்தமா பாஸ்? அவர், லெமன் டீக்கு ஆர்டர் சொன்னார், ‘‘ஏன் சாதா டீ சாப்பிட மாட்டீர்களா?’’ என்று தெரியாமல் கேட்டுவிட்டேன். ‘‘நண்பா, நம் முன்னோர்கள் பால் கலந்த டீ சாப்பிடுவது உடலுக்குக் கேடு என்று சொல்லியிருக்கிறார்கள். கொதிக்க வைத்த தேயிலைத் தண்ணீரில் தேன் அல்லது எலுமிச்சை சாறு விட்டு சாப்பிட்டால் ஆயுள் விருத்தியாகும் என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள்’’ என்று ஒரு லெக்சர். எனக்கு ஒரு சந்தேகம். ‘‘ஏம்பா, தேயிலையே வெளிநாட்டுக்காரன் நம்ம ஊருக்குக் கொண்டு வந்தது. அதைப்பற்றி முன்னோர்களுக்கு எப்படித் தெரியும்’’ என்று கேட்டுத் தொலைத்தேன். ‘‘ஏய் முன்னோர்கள்  என்ன சாதரணமானவர்களா, சித்தர்களாக வாழ்ந்தவர்கள். கூடு விட்டு கூடு பாயறது மாதிரி நாடு விட்டு நாடு பாய்ந்து, அங்குள்ள தாவரங்கள் என்னென்ன, எதுவெல்லாம் நமக்கு ஒத்து வராதென்று எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்கள்’’ என்றான். இதற்கு மேல் நான் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை.

இதாவது பரவாயில்லை, வேலைக்குப் போன இடத்தில் பைக்கை சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டுச் சென்றதைப் பார்த்த நண்பன், ‘‘டேய், மழை நேரம் சென்டர் ஸ்டாண்ட் போடு’’ என்று சொல்லியிருந்தால், அவனைக் கொண்டாடி இருப்பேன். ‘‘நம் முன்னோர்கள் இதற்காகத்தான் நடந்தே சென்று வந்தார்கள். இது போன்ற வாகனங்களால் சூழல் மாசுபடுகிறது, காசு காலியாகிறது, உடலில் கொழுப்புகூடி சீக்கிரமே மனித வாழ்வு முடிகிறது’’ என்றான். ‘‘சைடு ஸ்டாண்ட், சென்டர் ஸ்டாண்ட் போடுறதுக்கும் முன்னோருக்கும் என்னடா சம்பந்தம்?’’ என்று கேட்டேன். அதெல்லாம் எனக்குத் தெரியாது என்று கண்டுகொள்ளாமல் போய்விட்டான்.

ஹோட்டலுக்கு சென்று ஃபுல் கட்டு கட்டினாலும் வெளியில் வந்து பெட்டிக்கடையில் எதையாவது வாங்கித் தின்பது மற்றொரு நண்பனின் வழக்கம். அன்று அப்படித்தான். சாப்பிட்டுவிட்டு கடலை மிட்டாய் வாங்கினான். எனக்குக் கொடுத்ததை வேண்டாமென்று சொல்லி விட்டேன், அவ்வளவுதான், ‘‘உணவு சாப்பிட்டபின் கடலை மிட்டாய் சாப்பிடுறது உடலுக்கு நல்லதுடா, நம் முன்னோர்கள் பல்லாயிரம் வருசத்துக்கு முன்னாலே கடலை மிட்டாய் சாப்பிட்டு வந்ததால்தான் ஆரோக்கியமாக இருந்திருக்கிறார்கள்’’ என்றவனைப் பார்த்து செம கடுப்பு. ‘‘பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேர்க்கடலைக்கும் நம் முன்னோருக்கும் என்னடா தொடர்பு? அது மட்டுமில்லாமல், 50 வருடத்துக்கு முன்னால் கோவில்பட்டிக்காரர் உருவாக்கியதுதான் கடலை மிட்டாய். இதுக்கும் ஒரு பண்பாட்டு பூச்சைப் பூசுறியே’’ என்றேன். நாலைந்து கடலை மிட்டாய்களை வாய்க்குள் அதக்கியிருந்தவன் ஏதோ சொன்னான். எனக்குப் புரியவில்லை.

பாரீஸில் வெடிகுண்டு வெடித்தது, ரஷ்ய விமானம் வெடித்தது, மலேஷியா விமானம் காணாமல் போனது, பீகாரில் பா.ஜ.க தோற்றது, ‘தூங்காவனம்’ படம் பிரச்னை இல்லாமல் ரீலிஸானது, சேவாக் ஓய்வு பெற்றது, அத்தாச்சி பிள்ளை பெற்றதையெல்லாம் குறிப்பிட்டு இது முன்பே முன்னோர்கள் சொன்னதுதான் என்று எழுதித் தள்ளுகிறார்கள். இன்னும் என்னவெல்லாம் சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை.

ஒரு காலத்தில் இப்படியெல்லாம் கிண்டலடிப்பார்கள் என்று முன்பே முன்னோர்கள் சொல்லி இருப்பார்களோ?

-செ.சல்மான்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick