இங்கே இல்லை சூப்பர் ஹீரோ!

‘அது என்ன... ஹாலிவுட்டில் மட்டுமே சூப்பர் ஹீரோக்கள் படங்கள் எடுக்கிறாய்ங்க. நம்ம ஊர்ல எடுக்க மாட்றாய்ங்க’னு உங்க மனசுல நீங்க நினைக்கிறது என் கண்ணுக்கு கண்ணாடி மாதிரி அப்படியே தெரியுது. என்ன பண்றது நம் ஊரில் சூப்பர் ஹீரோக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் கிடையாது பாஸ். எப்படி சொல்றேன்னா...

நம் ஊர் வெயில் அப்படி. சூப்பர் ஹீரோக்கள் டிரெஸ் போட்டோம்னா, அடிக்கிற வெயிலில் உடம்பு அவிஞ்சு வாயில இருந்து புகை வர ஆரம்பிச்சுடும்.

ஸ்பைடர் மேன் நம் ஊரில் இருந்தால் பெரும் சிக்கலை அனுபவிப்பார். வலையை விட்டு கட்டடத்துக்குக் கட்டடம் தாவி போக எல்லா இடங்களிலும் உயரமான கட்டடங்கள் கிடையாது. அதையும் மீறி வலை விட்டு அந்தரத்தில் பயணித்துக்கொண்டிருந்தார் என்றால், நம் ஊர் சிறுவர்கள் விடும் காத்தாடியின் மாஞ்சா நூல் வலையை அறுத்துவிடும். அப்புறம் ஸ்பைடர் மேனை அந்தரத்தில் பார்க்க முடியாது, ஆஸ்பத்திரியில்தான் பார்க்க முடியும். நம் ஊர் ஸ்பைடர் மேனுக்கு ஆன்ட்டிகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும். துணி காயப் போட கயிறு அறுந்து போனால், ஸ்பைடர் மேனைத்தான் தேடுவார்கள். அதே போல் மேல் வீட்டில் குடியிருப்பவர்கள் கீழே இறங்காமல் பால் பாக்கெட் வாங்க, ஸ்பைடர் மேனின் வலையில் மஞ்சள் பையை ஃபிக்ஸ் செய்து விடுவார்கள். இதுக்கும் மேல் நம் ஊரில் ஸ்பைடர் மேனை உருவாகவே விட மாட்டார்கள். கையில் சிலந்தி கடித்தால் உடனே மஞ்சள் பொடியைத் தேங்காய் எண்ணையில் குழைத்து கடித்த இடத்தில் அப்பி விடுவார்கள். ஒண்ணும் நடக்காது.

சூப்பர்மேனை கலாய்த்தே அழ வைப்பார்கள். ‘ஏழு கழுதை வயசாகிடுச்சு. இன்னும் ஜட்டி எப்படி போடணும்னு தெரியலையா?’ எனக் கேட்டு தர்மசங்கடத்தில் ஆளாக்குவார்கள்.

சூப்பர் மேனின் விசேஷ சக்தியைப் பார்த்து ‘கடவுள்தான் மறு அவதாரம் எடுத்திருக்கிறார்’ என சூப்பர் மேனானந்தா எனப் பெயர் மாற்றி கூடிய சீக்கிரத்தில் ஆசிரமம் ஆரம்பிக்க வைத்துவிடுவார்கள்.

‘வௌவால் குடும்பத்துக்கு கெட்டது’ எனப் புரளியைக் கிளப்பி பேட்மேனைக் காணும்போதெல்லாம் கல்லால் அடிப்பார்கள்.  தோர் சுத்தியலை, தோரைத் தவிர யாரும் தூக்க முடியாது என்பது நம்பிக்கை. ஆனால், நமது ஆட்கள் தரையோடு பெயர்த்து எடுத்து போய் காயலாங்கடையில் போட்டுவிடுவார்கள்.

முக்கியமாக, சூப்பர் மேன் ஆபாச உடை அணிவதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் என ஒரு கூட்டம் கிளம்பும். இப்போ சொல்லுங்க நம்ம ஊருக்கு சூப்பர் ஹீரோக்கள் தேவையா? சொல்லப்போனால், அவங்களைக் காப்பாத்தவே ஓர் ஆள் வேணும். ஆங்...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick