பேய்களுக்கே போர் அடிச்சிருக்கும்யா!

ன்னும் ஐந்து வருடங்களுக்குப் பேய் பட சீசன்தான் போல. ஆனால், இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் நம் ஊர் பேய் படங்களில்...

பெண் பேய்களின் அட்டகாசம்தான் அதிகமாக இருக்கும். காதலன் ஏமாற்றியதால் விஷ டப்பாவைக் காலி செய்த காதலிகளும், அல்லது மான் மீது புலி பாயும் ஓவியம் குறியீடாகக் காட்டும் சம்பவம்தான் கண்டிப்பாக காரணமாக இருக்கும்.

பெரும்பாலும் நட்டநடு ராத்திரியில், பாத்ரூம் குழாயை ஓப்பன் செய்துதான் பேய்கள் ‘டர்’ கிளப்பும். இல்லையேல் நாம் திரும்பும்போது திடீர் என நம் முகத்துக்கும் முன்னால் நின்று திக்குமுக்காட வைக்கும்.

  ஊஞ்சல் என்றால் பேய்களுக்கு ரொம்பப் பிடிக்கும் போல. அடிக்கடி ஊஞ்சலை அந்தரத்தில் ஆட வைத்து ஆடியன்ஸ் பல்ஸை எகிறவைப்பார்கள். வீட்டில் ஊஞ்சல் இல்லை என்றால் பீரோவின் மேல் குத்தவைத்து அமர்ந்திருப்பார்கள்.

படத்துக்குப் படம் காமெடி நடிகர்கள்தான் பேய்களிடம் மரண அடி வாங்குவார்கள். ஹீரோ ஒரு அடி வாங்கினாலே சுருண்டு விழுவார், ஆனால் காமெடியன்களோ விடிய விடிய அடி வாங்கினாலும் தெம்பாய் நிற்பார்கள். அப்போ வெஞ்சன கிண்ணம் காமெடியன்களுக்குதான்.

இரண்டாம் பாதியில் ஒரு மந்திரவாதி வருவார். தண்ணீரை டானிக் பாட்டிலில் நிரப்பி ‘இது தெய்வ சக்தி கொண்ட நீர்’ என்பார். அதைப் பேய்கள் மீது தெளித்து, ஃப்ளாஷ்பேக்கைக் கேட்டு வாங்குவார்.

பேய் இருக்குனு ஹீரோயினுக்கு மட்டும் டக்குனு தெரிஞ்சுடும். வீட்ல இருக்கிற வேற எந்தப் பக்கியும் அதை நம்பவே நம்பாது. ஒரு நல்ல நாளா பார்த்து பேய்கிட்ட செமத்தியா அடி வாங்கினதுக்குப் பிறகுதான் நம்புவாய்ங்க.

பேய்கிட்ட இருந்து தப்பிச்சு காரில் ஏறி, காரை ஸ்டார்ட் செய்வார்கள். கார் ஸ்டார்ட் ஆகாது. சொந்தக்காரய்ங்களுக்கு போன் போட்டாலும் போகாது. எல்லாம் பேயோட விளையாட்டுதான்.

யாராவது கண்ணாடியைப் பார்த்து தலைவாரிக்கொண்டிருப்பார்கள். அப்போது சீப்பு தவறிவிழும். அதைக் குனிந்து எடுக்கும் இடைவெளியில், கண்ணாடியில் பேய் தெரியும். சீப்பை வெச்சு ச்சீப்பா முடிக்கிறாங்களாம்.

கடைசியில் ஆத்மாவை ஆசுவாசப்படுத்தி மேலோகத்துக்கு அனுப்பி வெச்சுட்டு, வீட்டைக் காலி பண்ணி மூட்டை முடிச்சோடு கிளம்புவாய்ங்க. ஆனால், பேய் மறுபடியும் பால்கனியில் நின்னு எட்டிப்பார்க்கும்.

மியூஸிக் டைரக்டர்கள் மட்டும் இல்லைனா, நம் ஊர் பேய் படங்களைப் பக்கத்து சீட்டில் பேயை வைத்துக் கொண்டு பார்த்தாலும் கொட்டாவிதான் வரும்.

இன்னும் இதே மாதிரி எடுத்துட்டு இருந்தீங்க, உண்மையாவே பேயைக் கிளப்பி விட்ருவேன்...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick