யாரோட லைக்ஸ்?

ஃபேஸ்புக் நாடி ஜோஸியம் பார்க்கிறீங்களா பாஸ்? விழுற லைக்ஸை வெச்சே ஒருத்தர் யார்னு கண்டுபிடிக்கலாம். அப்படியே அதுக்கான பரிகாரத்தையும் சொல்லி இருக்கேன். (இது என்னோட டைம்லைன்ல நாள்பூரா உட்கார்ந்து நானா கண்டுபிடிச்ச சித்தர் வாக்குன்னு சொன்னா நம்பவா போறீங்க?)

3 லைக்ஸ்  புதுசாய் முகநூல் பக்கத்தை முத்தமிடும் நபர். இவருக்கான பரிகாரம் ஒழுங்கா டீ-ஆக்டிவேட் பண்ணுவதுதான்.  இல்லை என்றால் இந்த லைக் அரிப்பு நிற்காமல் தரதரவென இழுத்து வந்து போராளியாகவோ இன்ஸ்டன்ட் சினிமா விமர்சக அக்கப்போராளியாகவோ கொண்டு வந்துவிடும்.

14 லைக்ஸ்  மியூச்சுவல் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் நிறைய வி.ஐ.பி-க்களை வைத்துக்கொண்டு முகநூலில் வெறும் வார்ம்-அப்பில் இருக்கும் யூத்து! குணப்படுத்துவது கடினம். கொஞ்சம் மெனக்கெட்டால் ஃபேஸ்புக் பிரபலம் ஆகலாம். அல்லது நண்பர்கள் மத்தியில் சீன் போட உதவலாம்.

56 லைக்ஸ்  கருத்து சொல்ல ஆரம்பித்திருக்கும், புரொஃபைலில் போட்டோ எடிட்டிங் வேலையை நன்கு காட்டத் தெரிந்த ஆண்கள் இவர்கள். தலைகீழாக நின்று தண்ணி குடித்தாலும் மூன்று இலக்கங்களைத் தொட மூன்று மாமாங்கம் ஆகும். தடாலடியாக ‘சாட்டையடி பதிவு தோழி’, ‘வாழ்த்துங்கள் ஃப்ரெண்ச்’, ‘நான் கருப்பா இருக்கேன். அதனால லைக் கிடைப்பது கடினம்தான்’ போன்ற நெஞ்சை உருக்கும் ஸ்டேட்டஸ்கள் போட்டுப் பார்த்தால் மூன்று இலக்கம் என்ன நான்கு இலக்கம் ஐந்து இலக்கம் லைக்ஸ்கள் தாராளமாகக் கிடைக்கும்.

113 லைக்ஸ்  கொஞ்சம் வளர்ந்த கிடாக்கள் அல்லது சும்மானாச்சுக்கும் தினமும் டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் போல காலை வணக்கம், மதிய வணக்கம், இரவு வணக்கம் உறவுகளே மட்டும் போடும் பெண்கள். ‘நீங்க அழகா இருக்கீங்க’ ‘தோழி தலைவாழை விருந்துக்கு வரலாமா?’ என வரம்பு மீறும் கிடாக்களைக் கலாய்த்துப் பதில் போடுவதிலும்,  அடிக்கடி புரொஃபைல் படங்களை மாற்றுவதன் மூலமும் லைக்ஸை கணிசமாக ஏற்றலாம். ஃபார்வர்டு ஜோக்குகளையும் சேர்த்துவிட்டால் லைக்ஸ் ஏறுவது கச்சிதமாக நடக்கும். வாழ்த்துகள்.

225 லைக்ஸ்  நடுநிலைவாதிகள் அல்லது ட்விட்டரிலிருந்து ஃபேஸ்புக் பக்கம் எழுத வந்த ஆண்கள் அல்லது பெண்கள். காலையில்  கருத்து சொல்லாவிட்டால் தோல் அலர்ஜியாகிவிடும். அதனால் எதையாவது காட்டமாக எழுதுவார்கள். சமயங்களில் பார்த்திபன் போல ஒன் லைனர்களில் சிரிக்க வைத்து இந்த லைக்ஸ் வாங்குவார்கள். பெண்களில் ‘மீன் குழம்பு சாப்பிட வர்றீங்களா ஃப்ரெண்ச்?’ என்ற குழம்பு சட்டியின் போட்டோவோடு முகத்தை க்ளோஸ்-அப்பில் போட்டால் போதும். கமென்ட்களில் ‘ஒரு மீன் மீன் சமைக்கிறதே அடடே ஆச்சர்யக்குறி’ என்ற மொக்கை கமென்ட் கட்டாயம் இருக்கும். கொஞ்சம் மெனக்கெட்டால் முகநூல் பிரபலம் ஆகலாம். 

323 லைக்ஸ்  ஃபேஸ்புக் உலகின் முன்னாள் தாதா. அவுட் ஆஃப் ஃபார்மில் இருந்தாலும், நேரில் பார்க்காத அந்த ரெகுலர் 200 பேர் எப்படியாவது லைக் போட்டு விடுவார்கள். அடிக்கடி கலைஞரை வம்புக்கு இழுப்பார்கள். கெட்டவார்த்தையோடு ஸ்டேட்டஸ் போடுவார்கள். பெண்களில் இந்த லைக்ஸை சராசரியாக வாங்கும் நபர்கள் ஊடக நட்பாக இருப்பார்கள். தக்காளிச் சட்னி தெறிக்க வைப்பார்கள் கவனம்.

592 லைக்ஸ்  புரொஃபைல் படங்களில் தெறிக்கவிடும் பெண்கள்தான் அதிகம் இருப்பார்கள். அதில் பாதிக்கும் மேல் ஃபேக் ஐ.டி-க்கள் தான். ஆனாலும், ‘உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா தோழி?’ என சுயம்வரம் ரேஞ்சுக்கு டீல் செய்வார்கள். ஆண்களில் இந்த லைக்ஸ் வாங்கும் நபர்கள் நிச்சயம் முகநூலில் பெரிய தாதாவாகத்தான் இருப்பார்கள். சீக்கிரம் சினிமாவுக்குத் தாவும் ஆளாகவோ அல்லது சினிமாவிலிருந்து ரிட்டையர்டு ஆன ஆளாகவோ சமயங்களில் இருப்பார்கள். ஒருவித கெத்தோடு இருக்கும் இவர்களுக்கு ‘கெத்து’ படம் டிக்கெட் அனுப்பினால் சரியாவார்கள்.

1026 லைக்ஸ்  கண்டிப்பாக தமிழ் சினிமா செலிப்ரெட்டியாக இருப்பார்கள். அல்லது மலையாள ‘பிரேமம்’ படத்தில் லைட்பாயாக வேலை பார்த்தவராகக்கூட இருக்கலாம். ‘வாவ்... சூப்பர்’, ‘அடிப்பொலி’ போன்ற கமென்ட்டுகள் நிச்சயம். லைக்ஸ் போடாமல் கடந்து போவது அவர்களது வளர்ச்சிக்கு நல்லது.

3212 லைக்ஸ்
  நடிகைகளின் புரொஃபைலாக இருக்கும். லட்சுமி மேனன் என்றால் பாதிக்கும் மேல் நெகட்டிவ் கமென்ட்டில் கழுவிக்கழுவி ஊற்றுவார்கள். ஆழ்ந்த நன்றிகள்.

23,435 லைக்ஸ்
  கண்டிப்பாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகராகத்தான் இருக்கும். நியூயார்க் கச்சேரிக்குப் போகிறேன் என விமானத்தில் இருந்து சென்னையை எடுத்த புகைப்படமாகவோ அல்லது ‘ஜெய்ஹோ’ என அஜ்மீர் தர்ஹாவில் நின்றபடி குழந்தை சிரிப்புப் படமாகவோ இருக்கும். ஜெய்ஹோ சொல்லிவிட்டு சைன் அவுட் பண்ணுங்கள்!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick