இதுக்குப் பேர்தான் பாடி லாங்குவேஜா?

சினிமாவில் வரும் சில ஸ்டைலீஷ் வெற்றிக் குறியீடுகள் படத்தின் வெற்றியையோ அல்லது பாடல் குறித்த கவன ஈர்ப்பையோ எளிதில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து விடுகின்றன. அப்படி ஹிட்டான படத்துக்குப் பின் இருக்கும் சில வெற்றிக் குறியீடுகளைப் பற்றிய அலசல்.

வேதாளம்: ‘தல’ என்னும் ஒற்றை சொல்லுக்கு ‘வேதாளம்’ திரைப்படத்தில் சரியாகப் பொருந்தியிருந்தார் அஜித். தன் தங்கை லட்சுமி மேனன் எதிராளிகளிடம் மாட்டிக்கொண்டிருக்கும்போது, தனி ஒருவனாகச் சென்று மீட்டு வருகையில் ஒரே நேரத்தில் இரண்டு விதமான ரசங்களை முகத்தில் காட்டுவதாகட்டும் திரும்பிச் செல்கையில் நடுவிரல், மோதிர விரலைக் கட்டை விரலுடன் இணைத்து சுட்டு விரலால் சுட்டிக்காட்டி கை விரல்களிலேயே துப்பாக்கி ஏந்தியிருக்கும் எதிராளிகளை அதட்டும் தோரணையாகட்டும் தியேட்டரில் செம மாஸ். அந்தச் சுட்டு விரல், சுண்டு விரல் வைத்து நீங்கள் காட்டிய சீன் ராகிங் ஸ்டைலீஷ் குறியீடு தல!

பிரேமம்: மலையாளத்தில் வெளி யாகி தமிழ்நாட்டையும் கலக்கிய காதல் திரைப்படம். ‘நேரம்’ படத்திலேயே துறுதுறுவென இயல்பான நடிப்பைக் காட்டி கவனம் ஈர்த்தவர் நிவின் பாலி. ‘பிரேமம்’ படத்தில் என்ன செய்யக் காத்திருக்கிறார் என நினைத்துதான் பெரும்பாலான ரசிகர்கள் தியேட்டருக்குப் படையெடுத்தனர். ‘ஆலுவா புழையிடே தீரத்து, யாரோரும் இல்லா நேரத்து’ இந்தப் பாடலில் ஜார்ஜ் முதலில் ரோட்டில் மேரியைப் பார்த்தவுடன் ஒருவித பூரிப்புடன் கடப்பதாகட்டும், மேரியை ஃபாலோ பண்ணும்போது, சிறு வயது செலின், மேரியிடம் ஜார்ஜினைப் பற்றி போட்டுக் கொடுப்பதாகட்டும், அதைப் பார்த்தவுடன் தன் காதல் மொழி காதலியிடம் கடத்தப்பட்டுவிட்டது என்ற சிலாகிப்பில் தன் வலது கையை இடது கையுடன் இடிப்பதாகட்டும், ஜார்ஜாகிய நிவின் பாலி தெறி நடிப்பு. ஆண்கள் வெட்கப்படும் தருணத்தை அழகிய வெற்றிக் குறியீடாகக் கடத்திய நிவின் பாலியின் இந்த செல்ஃப் பன்ச்சுக்கு அன்லிமிட்டட் லைக்ஸ் சேட்டா!

மாரி: படம் ஓடுச்சோ இல்லையோ ஏரியாவுக்குள்ள இருக்கிற எல்லாப் பசங்க வாயிலேயிருந்தும் ‘மாரி’ படத்துல தனுஷ் சொன்ன ‘செஞ்சிருவேன்’ங்கிற வார்த்தை மட்டும் செம்பரம்பாக்கம் மழை வெள்ளம் மாதிரி பல ஏரியாவுக்குள்ள புகுந்து ஓடுச்சு. படத்தை சமூக வலைதளங்களில் கிண்டலடிச்சாலும் படத்தை மக்களிடம் நல்லவிதமா பேசவைச்ச ஒரே குறியீடு ‘செஞ்சுருவேன்’  வார்த்தை மட்டும்தான். என்னமோ செஞ்சிட்டீங்க போங்க!

வடகறி, எங்கேயும் எப்போதும்: ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஹிட் சென்டிமென்ட் உண்டு. நம்ம ஜெய்க்கு மட்டும் கொஞ்சம் வேற மாதிரி, ‘தோள்பட்டை துடிக்கிற’ சென்டிமென்ட். ‘எங்கேயும் எப்போதும்’ படத்துல, ‘மாசமா 6 மாசமா’னு இடது கை மட்டும் தூக்கி பாட்டை ஹிட்டாக்கினவர், ‘வடகறி’ படத்துல, ‘கண்டபடி கண்டபடி கொல்லுதடி கொலவெறி... வந்து என்ன ஏத்துக்கடி’னு தன்னுடைய இரண்டு தோள்பட்டைகளையும் துடிக்க வெச்சு பாட்டை ரசிக்க வெச்சுப்புட்டாப்புல. எனக்கு ஒரு டவுட், கார்ப்பரேசன் லாரியில தண்ணி பிடிச்சுகிட்டே டான்ஸ் ஆடச்சொன்னா, என்ன பண்ணுவீங்க? துடிக்க விட்டுருவீங்களா உங்க தோள்பட்டையை?

ஜெமினி: மொட்டை மண்டையில் ‘சேது’வாக நடித்து ஹிட் அடித்த விக்ரமுக்கு நார்மலான நடிப்பில், சில சுவாரஸ்ய குறியீடுகளைச் சேர்த்து ரெளடியிஸத்திலும் மாஸ் ஹிட் கொடுக்க வைத்த படம். ‘ஓ போடு’ என அவர் காட்டிய முத்திரை!

சிறுத்தை: ‘பருத்திவீரன்’ படத்தில் கெத்து காட்டிய கார்த்தியா இது என ஆச்சர்யப்பட வைத்தது ‘சிறுத்தை’ கார்த்தியின் சிந்தாக்தா அட்ராசிட்டி. இதில் என்ன ஒரு ரணகளம்னா இவரோட ஸ்டைலை ஃபாலோ பண்ணி தமன்னா ஓர் இதய நோயாளியின் உயிரைக் காப்பாத்திருப்பாங்க. அட்ராசிட்டி பாஸ்!

-ம.மாரிமுத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick