அவரா இவரா?

சில விஷயங்களைப் பற்றி நினைக்கும்போது விஜயகாந்த் பேட்டி பார்த்த மாதிரி ஒரே குழப்பமா இருக்கும். எல்லாம் கண்ணதாசா, ஜேசுதாசா? வகைக் குழப்பங்கள். அதில் சாம்பிளுக்கு சில...

அரசியல் வாரிசு நடிகர்ங்கிறது ‘ஓகே ஓகே’ ட்ரையாலஜியில் நடிச்ச உதயநிதியா, இல்ல வைஸ் கேப்டன் சண்முகபாண்டியனா?

கைக்கு மைக் கிடைத்த அடுத்த  செகண்ட் ஹைபிட்சுக்கு அலறுவது சீமானா, சித்ஸ்ரீராமா?

இதுவரைக்கும் அதிகமா சட்டையைக் கழட்டுற சீன்ல நடிச்சது ஆக்‌ஷன் கிங் அர்ஜுனா, இல்லை ‘அரண்மனை 2’ த்ரிஷாவா?

கையை பக்கவாட்டில் நீட்டியே மணிக்கணக்காக போஸ் கொடுத்தது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ சிம்புவா, இல்லை ஹர்டிக் பாண்டியா பந்து போடுறப்போ நின்ன அம்பயரா?

படத்துக்குப் படம் பறந்துக்கிட்டே திரியறது சிலந்திகிட்ட கடி வாங்கின ஸ்பைடர்மேனா, இல்லை இளைய தளபதி விஜய்யா?

வாராவாரம் போஸ்டர் அடிச்சு மாஸ் காட்டுறது சினிமா தியேட்டர்காரங்களா, இல்ல பா.ம.க காரங்களா?

காமெடி டைம் ஷோவை தொகுத்து வழங்கியது மயில்சாமியா, ‘நமக்கு நாமே’ ஸ்டாலினா?

முன்னாடி மேஜையைப் போட்டு உட்கார்ந்தே ஃபேமஸ் ஆனது வானிலை அறிக்கை ரமணனா, இல்லை ‘3’ படத்துல வர்ற பிரபுவா?

பங்குனி வெயில் பல்லைக் காட்டி அடிக்கும்போதும் ஸ்வெட்டரோடவே திரியறது அர்விந்த் கெஜ்ரிவாலா, இல்லை ‘தெய்வத்திருமகள்’ விக்ரமா?

பார்க்க சிவாஜி மாதிரியே தெரியறது அமிதாப் பச்சனா, விஜய்யா?

நாலு பேருக்கு நல்லது பண்ணதை, 400 பேனர் வெச்சு 4,000 பேருக்கு இடையூறு கொடுக்கிறது ‘நாடோடிகள்’ படத்தில் வரும் நமோ நாராயணனா, இல்லை அம்மாவின் உண்மை விசுவாசிகளா?

கீச்சு கீச்சு குரலுக்கு சொந்தக்காரர் ரவிகிருஷ்ணாவா, ரம்யா கிருஷ்ணனா?

‘உலகம் சுற்றும் வாலிபன்’னு அழைக்கப்படுபவர் எம்.ஜி.ஆரா, இல்லை மோடியா?

எப்படி உங்களுக்கே கன்ஃப்யூஸ் ஆகுதா?

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick