கண்கள்தானே இல்லை?

23 ஆண்டுகளுக்கு முன்னர் பிரேசில் நாட்டில், அலை சறுக்கு விளையாட்டின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் ஒரு கனவு கண்டார். அவரது மகனை எப்படியாவது ஒரு சிறந்த அலை சறுக்கு வீரனாக உருவாக்கி விட வேண்டும் என நினைத்தார். தன் மகனுக்கு ‘டெரக் ஹோ’ எனும் பிரபல அலை சறுக்கு சாம்பியனின் பெயரையும் சூட்ட நினைத்தார். ஆனால், மகன் டெரக் ரெபேலோவோ பிறக்கும்போதே ‘குளுக்கோமா’ எனும் நோய் தாக்கப்பட்டு பார்க்கும் திறனை இழந்தவனாய் பிறக்க, அந்தத் தந்தை பெரும் துயரம் கொண்டார். அவரது கனவு கடைசி வரை கனவாகவே போய்விடுமோ என்ற எண்ணமும் அவரை வாட்டி வதைத்தது. ஆனால், அவரது எல்லா வருத்தங்களும் டெரக் தனது 17-வது வயதில் அவரிடம் ‘அப்பா, நான் அலை சறுக்கு செய்ய ஆசைப்படுகிறேன்’ என்று கூறிய ஒற்றை வார்த்தையில் காணாமல் போய்விட்டது. ஐந்து ஆண்டுகள் தன் தந்தையிடமும், நண்பர்களிடம் பயிற்சி பெற்ற டெரக் இன்று சிறந்த அலை சறுக்கு வீரனாக உருமாறி உலகை உற்றுப்பார்க்க வைத்திருக்கிறார். அவரது தந்தை அடைந்திருக்கும் ஆனந்தம் அளவில்லாதது.

‘என்னால் கடலைப் பார்க்க முடியாது. நான் அதை உணர்கிறேன், என் காதுகளால் கேட்கிறேன். அலையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு ஒலியைக்கொண்டிருக்கும். அந்த ஒலியை காதுகளில் வாங்கிக்கொண்டு எந்தத் திசையில் சறுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வேன். உங்களுக்கு ஏதேனும் கனவு இருந்தால், உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வைக்க வேண்டும். இல்லையேல், அந்தக் கனவை நீங்கள் அடைய முடியாது’ என்கிறார் டெரக். பாராட்டுக்கள் ப்ரோ. டெரக்கின் வாழ்க்கை கதை ‘பியான்ட் சைட்: தி டெரக் ரெபோலோ ஸ்டோரி’ என்ற பெயரில் 2014-ம் ஆண்டு திரைப்படமாக வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெரக் அலை சறுக்கும் வீடியோவைக் காண https://youtu.be/7CaMIgiyQls

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick