இப்படில்லாமா கிளப்புவீங்க?

ரிட்ரியா...இப்படி ஒரு நாடு இருப்பதை இதற்கு முன் நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆனால், தற்போது வைரலில் இந்த நாடு!

கிழக்கு ஆப்பிரிக்காவில் சூடானையும் எத்தியோப்பியாவையும் எல்லைகளாகக் கொண்ட குட்டி நாடு இது. மேட்டர் இதுதான். எரிட்ரியா அரசு ‘மக்கள் தொகையை அதிகரிக்க ஆண்கள் இரண்டு திருமணங்கள் செய்துகொள்ளலாம்’ என சட்டப்பூர்வ அனுமதி கொடுத்திருக்கிறது’ என்று எந்தப் புண்ணியாத்மா கிளப்பிவிட்டதென்று தெரியவில்லை. ஆப்பிரிக்கா முழுவதும் மீம்ஸ்கள், கலாய் ஸ்டேட்டஸ்கள் போட்டு ஷேரிங்கில் தெறிக்க விட்டார்கள். அந்த வைரல் இந்தியாவுக்கும் பரவி நம் சூப் பாய்ஸும் ‘எரிட்ரியாவுக்குப் போறோம் ரெண்டு புள்ளைகளைக் கட்டுறோம்’ என மீம்ஸ் ரெடி பண்ணி குதூகலித்தார்கள். அதற்கு ஆதாரமாக அந்த நாட்டின் தலைமை மதபோதகர் (க்ராண்ட் முஃப்தி என்று அழைப்பார்கள்) கைப்பட எழுதிய ஸ்டேட்மென்ட் என எதையோ போலியாக எழுதி ஷேர் செய்திருந்தார்கள். சோஷியல் மீடியாவில் முதலில் இந்த ஸ்டேட்மென்ட் உலாவ, அப்படியே உண்மையென நம்பி ஆப்பிரிக்காவின் முக்கிய செய்தி நிறுவனமான ‘சஹாரா ரிப்போர்ட்டர்ஸ்’ செய்தியை சுடச்சுட வெளியிட்டு எரிகிற தீயில் பெட்ரோலையே விட்டது.

லேட்டாக சுதாரித்த எரிட்ரியா அரசு பரபரப்பாக மறுப்பு அறிக்கை வெளியிட்டது. ஆனால், அதற்குள் வைரலில் கும்பமேளாவே நடத்திவிட்டார்கள் மீம் பாய்ஸ். அந்த நாட்டின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் யெமானே மெஸ்கெல், ‘படிப்பறிவில்லாத முட்டாள்கூட இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவர மாட்டான். இப்படி அவதூறு கிளப்பிய நபரைத் தேடி வருகிறோம். உலகம் முழுவதும் இந்தச் செய்தியை பரப்பிய நைஜீரிய செய்தி நிறுவனம் ‘சஹாரா ரிப்போர்ட்டர்ஸ்’ மீது வழக்குத் தொடுத்திருக்கிறோம். இப்போது அந்நிறுவனம் பகிரங்க மன்னிப்புக் கேட்டிருக்கிறது’ என்கிறார்.

அவர் சொல்வதை உறுதிப்படுத்துவதுபோல சில மாதங்களுக்கு முன் தான்சானியாவில் பாலியல் குற்றங்கள் அதிகமாவதால் மினி ஸ்கர்ட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை வெளியிட்டது. நம்பகத்தன்மையை அதிகரிக்க அந்த நாட்டின் அதிபர் ஜான் மகுஃபுலி, ‘எயிட்ஸ் பரவ குட்டைப் பாவடைகள்தான் காரணம்’ என்ற வக்கிர ஸ்டேட்மென்ட்டை வெளியிட்டதாக பொய்த்தகவலைப் பரப்பி பின் வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நல்லா கிளப்புறாய்ங்கய்யா பீதியை!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick