“காய்ச்சல் வந்தா எம்.ஜி.ஆர் படத்துக்குப் போவேன்!”

எம்.ஜி.ஆருக்கு மணி மண்டபம், கோயில்கள் சில இருந்தாலும் தூத்துக்குடியில் அவருக்குக் கோயில் கட்ட திட்டம் தீட்டி நிதி வசூலில் இறங்கியுள்ளார் குருசாமி என்பவர். எம்.ஜி.ஆர் வேடத்தில் இருந்தவர் தொப்பி, கண்ணாடியைக் கழட்டிவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

‘‘எனக்கு பூர்வீகமே தூத்துக்குடிதான். 1976-ல் பி.எஸ்.ஸி தாவரவியல் பட்டப்படிப்பு முடிச்சதுமே, வீட்டுல யார்கிட்டவும் சொல்லிக்காம சென்னைக்கு வந்து ஹோட்டல் வேலைக்குப் போனேன். 40 வயசுக்கு அப்புறம் கோயில்ல ஆன்மிக சேவையில இருந்தேன். 2012-ல் தூத்துக்குடிக்கே வந்துட்டேன். எனக்கு 9 வயசு இருக்கும்போது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் பாத்தேன். எம்.ஜி.ஆர் முகத்தைப் பாத்ததுமே எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. பாட்டு வரும்போது நானும் எழுந்திரிச்சு ஆடினேன், சண்டைக்காட்சி  வரும்போது பக்கத்துல உள்ளவங்களை அடிச்சேன், முதுகுல குத்தினேன். அதுல இருந்து எம்.ஜி.ஆர் படம் அடிக்கடி பார்க்க ஆரம்பிச்சேன். எங்க அம்மா, அப்பா மேல எனக்கு வெறுப்பு வர ஆரம்பிச்சுச்சு. எம்.ஜி.ஆர் தான் எனக்கு அப்பா, ஜெயலலிதாதான் எனக்கு அம்மானு முடிவு செஞ்சேன். எனக்குக் காய்ச்சல், தலைவலின்னா ஆஸ்பத்திரிக்குப் போக மாட்டேன். எம்.ஜி.ஆர் படத்துக்குத்தான் போவேன். படத்துக்குப் போனா குணமாயிடும். என்ன பிரார்த்தனைனாலும் எம்.ஜி.ஆர் போட்டோ முன்னால சூடம் ஏத்தி அவரை மனசுல நினைச்சாலே நிறைவேறிடும். இந்த வருசம் எனக்கு 60-வது வயது ஆரம்பம். அடுத்த வருடம் தலைவருக்கு நூற்றாண்டு விழா. கல்யாணமே பண்ணிக்கலை. புரட்சித்தலைவரோட தகவல்களைத் திரட்டி ஒவ்வொரு மாதமும் ‘புரட்சித் தலைவர்’ங்கிற பேர்ல ஒரு புத்தகம் வெளியிடுறேன்’’ என்று எம்.ஜி.ஆர் புராணம் பாடிக்கொண்டிருந்தவரைத் தெளியவைத்து கோயில் கட்டும் திட்டத்தைப் பற்றிக் கேட்டேன்.

‘‘மக்களுக்காக எம்.ஜி.ஆர் எவ்வளவோ செஞ்சிருக்காரு, ஆனா, எம்.ஜி.ஆருக்காக நாம ஏதாவது செய்யணும்னுதான் கோயில் கட்டலாம்னு முடிவு செஞ்சேன். அதுக்காக 2012-ல தூத்துக்குடிக்கு வந்ததுமே மூணு வருச தவணைத் திட்டத்துல சேர்ந்து எம்.ஜி.ஆருக்கு கோயில் கட்ட 4 சென்ட் அளவுள்ள ஃப்ளாட் பார்த்து மாசாமாசம் தவணை கட்ட ஆரம்பிச்சேன். போன வருசம்தான் முழுத்தவணையும் கட்டி இடம் என் பேருக்கு வந்துச்சு. தூத்துக்குடி டு திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தெய்வச்செயல்புரம், வல்லநாடு மலை அடிவாரத்துலதான் நம்ம இடம் இருக்கு. என் கையில இருக்கிற பத்தாயிரத்தை வெச்சு நல்ல நாள் பாத்து பூமி பூஜை போடப் போறேன். அ.தி.மு.க சார்புல தேர்தல் வேட்பாளர் பட்டியல் அறிவிச்சதுமே தூத்துக்குடி மாவட்டத்துல உள்ள ஆறு சட்ட மன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளரா நிற்கும் ஒவ்வொரு வேட்பாளரிடமும் ஆளுக்கு ஒரு லட்சம் வாங்கி கோயில் கட்டுற இடத்துல வெச்சு ‘புரட்சி யாகம்’ செய்யப் போறேன். (யாகம் செய்றதில என்னங்க புரட்சி?) வேட்பாளர்கள் இந்தப் புரட்சி யாகத்துல கலந்துக்கிட்டு அந்த விபூதியைப் பூசினாலே தேர்தல்ல அதிக ஓட்டு வித்தியாசத்துல மகத்தான வெற்றி நிச்சயம்.

எம்.ஜி.ஆர் ஐந்தரை அடி உயரம், சிலையும் ஐந்தரை அடி உயரம்தான். அ.தி.மு.க தலைமை அலுவலகம் முன்னால இருக்கிற மாதிரி டிசைன்ல, பரிசுத்தமான கருங்கல்லில் செதுக்கி நிலை நிறுத்தப் போறேன். கன்னியாகுமரியில 133 அடி உயரத்துல திருவள்ளுவர் சிலையை சரியான திட்டம் போட்டுக் கட்டின சிற்பியைக் கண்டுபிடிச்சு அவர்கிட்டதான் சிலை பொறுப்பை ஒப்படைக்கப் போறேன்.

தினசரி காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணின்னு மொத்தம் மூன்று கால பூஜை நடக்கும். காலையில 5 மணிக்கு எம்.ஜி.ஆர் பட தத்துவப் பாடல்களும், மாலை 5 மணிக்கு காதல் பாடல்களும் ஒலிபரப்பப்படும். கோயிலுக்கு நுழைவுக்கட்டணம் ஏதும் கிடையாது, உண்டியல் கிடையாது, எல்லா மதத்தினரும் வரலாம். கோயிலுக்கு வர்ற எல்லோருக்குமே எம்.ஜி.ஆர் படம் நினைவுப்பரிசா வழங்கப்படும். கோயில் வேலை ஒரு பக்கம் நடந்துக்கிட்டிருக்கும்போதே, வித்தியாசமான, புரட்சிகரமான கதையோட ஒரு படம் எடுக்கப் போறேன். கதைய இப்ப சொல்ல முடியாது, ஸாரி சார். ஒரு கோடி பட்ஜெட்ல படம் எடுத்து 10 கோடியா ரிட்டன் எடுக்கப் போறேன். இந்த 10 கோடி எதுக்குனு தெரியுமா? (நீங்களே அதையும் சொல்லிடுங்க!). எம்.ஜி.ஆர் எல்லோருக்கும் பசியாற சாப்பாடு போட்டவர், அவரோட கோயிலுக்கு வர்ற யாரும் பசியோட போகக் கூடாது. கோயிலுக்கு வந்து எம்.ஜி.ஆரை தரிசனம் செய்யும் உள்ளூர், வெளியூர், வெளிநாட்டுப் பயணிகளுக்கு... ஸாரி ஸாரி, பக்தர்களுக்கு சாப்பாடு போடுற புரட்சித் தலைவர் அன்னதான திட்டத்துக்கு பேங்க்ல டெபாசிட் பண்ணத்தான் இந்த 10 கோடி ரூபாய்!’’ என்று திட்டங்களை அடுக்கியவர், ‘‘கோயிலுக்கு உங்க பங்குக்கு எவ்வளவு நன்கொடை தரப்போறீங்க சார்...’’ என்று ரசீது புக்கை என்னிடம் நீட்டியதும் டரியல் ஆகி ஜூட் விட்டேன்!

–இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick