பாலிவுட் மாஸ்டர்ஸ்!

டாபடா ஹீரோக்களைவிட போகிற போக்கில் அசால்ட் நடிப்பில் தெறிக்கவிடும் பாலிவுட்டின் கவன ஈர்ப்பு நடிகர்களில் டாப் 4 இவர்கள்...

இர்ஃபான் கான்: பத்மஸ்ரீ வாங்கிய நடிகர். ‘லைஃப் ஆஃப் பை’, ‘ஜுராஸிக் வேர்ல்டு’ உள்பட பல ஹாலிவுட் படங்களிலும் நடித்து இந்தியாவின் புகழைப் பரப்பியவர். டெல்லி நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவின் முன்னாள் மாணவர். 1988-லிருந்து நடிக்கிறார். கிட்டத்தட்ட இவர் நடிக்காத ரோல்களே இல்லை எனலாம். அனைத்து டெம்ப்ளேட் ரோல்களிலும் நடித்துவிட்டார். டி.வி சீரியல்களில் தலைகாட்டியவர் தன் மாறுபட்ட நடிப்பால் மீரா நாயரின் ‘சலாம் பாம்பே’ பட வாய்ப்பு கிடைத்தது. சின்ன ரோலில் அசத்தலாக நடித்ததால் இர்ஃபானின் திரைக்கனவு பலித்தது. ‘ஹாசில்’ என்ற படத்தில் வில்லனாய் நடிதத்தற்காக 2003-ல் ஃபிலிம்ஃபேர் விருது முதன்முதலில் வாங்கினார். ‘லைஃப் இன் எ மெட்ரோ’, ‘ஸ்லம்டாக் மில்லினியர்’, ‘பான் சிங் டோமர்’, ‘லன்ச் பாக்ஸ்’, ‘தல்வார்’ போன்றவை இவரின் நடிப்புக்கு தீனி போட்ட படங்கள்.

நவாஜுதீன் சித்திக்: உத்தரபிரதேசத்தில் மிக சாதாரண பின்புலத்தில் இருந்து நடிக்க வந்தவர். இவரும் டெல்லி நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவின் முன்னாள் மாணவர்தான். மும்பையில் துணை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கியவருக்கு 1999-ல் ‘சர்ஃப்ரோஷ்’ என்ற அமீர்கான் ஹீரோவாக நடித்த ஹிட் படத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து போகும் ரோல் கிடைத்தது. அந்த அனுபவத்தில் ‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்’, ‘ப்ளாக் ஃப்ரைடே’ போன்ற படங்களில் நடித்தார். அனுராக் காஷ்யப் தான் நவாஜுதீனுக்குள் ஒளிந்து கிடக்கும் நடிகனைக் கண்டுபிடித்தது. ‘தேவ் டி’ படத்தில் குட்டி ரோல் கொடுத்து ஊக்குவிக்க, ‘பீப்லி லைவ்’, ‘கஹானி’ என நடிப்புக்குத் தீனி போடும் ரோல்கள் அசால்ட்டாய் கிடைத்தன. ‘கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’ படத்தில் இவரின் ஸ்டைலிஷான நடிப்பு உலகத் தரத்தில் இருப்பதாக விமர்சகர்கள் கொண்டாட அனைத்து இயக்குநர்களின் கவனமும் இவர் மீது விழுந்தது. இப்போது ஒரு டஜன் தரமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஃபர்ஹான் அக்தர்: பாலிவுட்டின் புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியர் மற்றும் கவிஞரான ஜாவித் அக்தரின் தவப்புதல்வன். பாலிவுட் ஹிட் பெண் இயக்குநர் சோயா அக்தரின் சகோதரர். ‘நான் என்னவாகப் போகிறேன்?’ என்ற குழப்பத்தோடு கேரியரை ஆரம்பித்தவர் இவர். கேமராமேன், டைரக்டர் என அலைபாய்ந்தவர் விளம்பரப் படங்கள் இயக்கத்தில் கவனம் செலுத்தி ‘ஹிமாலய் புத்ரா’ என்ற படத்தின் மூலம் முழுநேர டைரக்டராக உருமாறினார். ‘தில் சாக்தா ஹே’, ‘லக்‌ஷ்யா’, ‘டான்’ எனப் படங்கள் இயக்கினார். ‘ராக் ஆன்’, ‘லக் பை சான்ஸ்’ என்ற படத்தில் சுமாரான நடிகர் எனப் பேர் வாங்கினார். ‘ஜிந்தகி னா மிலேகி தோபாரா’ என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த ‘பாக் மில்கா பாக்’ வாய்ப்பு கிடைத்தது. இவர் கேரியரின் உச்சம் அந்த சினிமா. தடகள வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கையை அப்படியே கண்முன் கொண்டு வந்தார். இப்போது அரை டஜன் வெயிட்டான ரோல்கள் இவர் வசம்!

மனோஜ் பாஜ்பாய்: இவரும் டெல்லி நேஷனல் ஸ்கூல் ட்ராமாவின் முன்னாள் மாணவர்தான். 1994-ல் கோவிந்த் நிஹ்லானியின் ‘ துரோக்கால்’ படத்தில் சின்ன ரோல்தான் இவரின் ஆரம்பப் புள்ளி. சேகர் கபூரின் ‘பண்டிட் குயின்’ படத்திலும் அதே அதோ கதி ரோல்தான். அதன் பிறகு பத்து படங்கள் தலையைக் காட்டிவிட்டுப் போனவருக்கு பெரிய பிரேக் கிடைத்தது ராம் கோபால் வர்மாவின் ‘சத்யா’வில் தான். மும்பையின் நிழலுக தாதாக்களில் ஒருவராக பிரமாதப்படுத்தி இருப்பார். ‘மெத்தட் ஆக்டர்’ என்று டைரக்டர்களால் அழைக்கப்படுபவர். என்ன ரோலாக இருந்தாலும் பிரித்து மேய்வார் என்பதால் இவரை வைத்து எக்ஸ்பரிமென்ட்களை செய்கிறார்கள். தமிழில் ‘சமர்’ படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருக்கிறார். இப்போது ரிலீஸுக்குத் தயாரக இருக்கும் ‘அலிகார்’ படத்தில் இவர் ஓரினச் சேர்க்கையில் நாட்டம் கொண்ட ஒரு கல்லூரிப் பேராசிரியராக நடித்திருக்கிறார். இன்னும் இன்னும் வேற வேற என கேட்கும் அவருக்கு வரிசை கட்டி காத்திருக்கின்றன பாலிவுட் வாய்ப்புகள்!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick