“ஜுஸ் குடிச்சு அடி வாங்கினோம்!”

விசாரணை

‘விசாரணை’ படத்தில் போலீஸிடம் அடிவாங்கி, ‘என் முகத்துக்கு அழகே பல்லுதான்னு அம்மா சொல்லும்டா!’ என நம் சித்தம் கலங்க ப்ளாக் ஹியூமர் செய்த ‘ஆடுகளம்’ முருகதாஸை நம்மால் மறக்க முடியுமா? ஆளை மடக்கிப் பேசினேன்.

‘‘எப்படிங்க ‘விசாரணை’ வாய்ப்பு வந்துச்சு?’

‘‘ ‘குக்கூ’ படம் முடிச்சுட்டு ஒருநாள் வெற்றிமாறன் சார் ஆபீஸுக்குப் போனேன். அவர் கார் முன்னாடி படுத்து, ‘எனக்கு உங்க அடுத்த படத்துல கண்டிப்பா வாய்ப்பு வேணும் சார்!’னு ஜாலியா, உரிமையா கேட்டேன். சிரிச்சுக்கிட்டே, ‘டேய்  கண்டிப்பா சொல்றேன்டா!’னு சொன்னார்.  ஒருநாள் அவர் ஆபீஸ்ல இருந்து போன். நான் அங்கே போனப்போ அவர் ஆபீஸ்ல ஒரு வொயிட் போர்டுல மார்க்கர் பேனாவால ‘தினேஷ்...முருகதாஸ்...சமுத்திரகனி...கிஷோர்...’னு எழுதி இருந்துச்சு. அப்பவே தெரிஞ்சிருச்சு. நம்மளை செலக்ட் பண்ணி இருக்கார்னு. ‘வெற்றி சார் ‘ஆடுகளம்’ல ஆறு நேஷனல் அவார்டு வாங்கின ஆள். இந்தப் படத்துல நிச்சயம் பெரிய அணுகுண்டே வெச்சிருப்பார். ஒரு சீன்ல வர்ற வாய்ப்புனாலும் கெட்டியா முடிச்சுக்கணும்டா முருகா’னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டேன். அவர் ஒன்லைன் மட்டும் சொன்னார். ‘போலீஸ்ல மாட்டிக்கிட்டு அடி வாங்குற கேரக்டர்டா’னார். ‘அது பார்த்துப் பண்ணிக்கலாம் சார். என்ன, நிஜமாவா அடிக்கப் போறீங்க?’னு ஓகே சொன்னேன்.

அடுத்த சில நாட்கள்ல போட்டோஷூட்டுக்கு கூப்பிட்டு அனுப்பினார். சட்டையைக் கழட்டி, காலைக் கட்டி, தலைகீழா தொங்கவிட்டு போட்டோஸ் எடுத்தாங்க. மண்டைக்குள்ள லைட்டா ராட்டினம் சுத்துச்சு. ஆஹா...போட்டோஷூட்டுக்கே இப்படியானு லைட்டா ஜெர்க் ஆனேன். முதல்ல ஆந்திர போலீஸ் ஸ்டேஷன் செட்-அப். 300 டம்மி லத்திகளை செஞ்சு வெச்சிருந்தாங்க. கட்டி வெச்சு அடிக்கிறப்போ வலிக்கலை. ஆனா, வெவ்வேற ஆங்கிள், டேக்னு போறப்போ என்னதான் டம்மினாலும் லைட்டா வலிச்சது. ஆனா, வெற்றிமாறன் சார் ஒரு விஷயத்துல ரொம்பத் தெளிவா இருந்தார். டார்ச்சர் பத்தின படம்னாலும் ஆர்ட்டிஸ்ட்களை டார்ச்சர் பண்ணிடக் கூடாதுங்கிறதுதான் அது. அதனால வலிச்சா ஒத்தடம் கொடுக்குறது, ஜூஸ் குடிக்கிறதுனு ரொம்ப ரசிச்சுதான் அடி வாங்கினோம். ஆனாலும் வலிக்க வலிக்கத்தான் நடிச்சோம். ஷூட்டிங் முடிச்சு வீட்டுக்குப் போகாம ஃப்ரெண்ட் ரூமுக்குப் போவேன். ‘டேய் ஆக்‌ஷன் சீன் மேக்-அப் கலைச்சுட்டு வந்துருக்கலாம்ல?’னு ஃப்ரெண்ட் கேட்பான். ‘டேய் நாள் பூரா அடி வாங்கி நடிச்சேன்டா’னு சிரிச்சுக்கிட்டே சொல்வேன். ரொம்ப பெருமையா ஃபீல் பண்ணி நடிச்சேன்.’’

‘’இந்தப் படத்துக்காக வேற எப்படில்லாம் மெனக்கெட்டீங்க?’’

‘‘படத்துக்காக நான் ரெண்டு பல்லை டாக்டர் அட்வைஸோட எடுத்துக்கிட்டேன். ஏன்னா நிஜமாவே அது ஆடிக்கிட்டுதான் இருந்துச்சு. அது தத்ரூபமா படத்துல வந்திருந்துச்சு. அப்புறம் கிஷோர் சார், அப்சல்னு சாகுறவங்க எல்லோருமே ரொம்ப ரிஸ்க் எடுத்து நடிச்சாங்க. க்ளைமாக்ஸ்ல நான் சாகுறதும் வெயிட்டா இருக்கணும்னு எங்களுக்குள்ள போட்டியே வந்திடுச்சு. ஒரு பெயின்டிங் மாதிரி இருக்கும் என்னோட சாவு அந்தப் படத்துல. எட்டு நாள் ராத்திரி பூரா புழல் பக்கத்தில அந்த க்ளைமாக்ஸ் அகழி சீன் ஷூட் பண்ணோம். வீட்டுக்கு வந்து பார்த்தா, ரத்தம் ரெண்டு மீட்டருக்கு கால்ல வடியும். அட்டைப்பூச்சி தொடையில உட்கார்ந்து ரத்தத்தை உறிஞ்சிட்டு இருக்கும். ஒருநாள் தண்ணிப் பாம்பு கடிச்சுடுச்சு. ஆனா, இப்போ ஸ்க்ரீன்ல அந்தக் காட்சிகளைப் பார்க்கிறப்போ அவ்வளவு பெருமையா இருக்கு!’’

‘‘இப்படி ரத்தம் சிந்தி நடிச்சதுக்கு வீட்டுல எதுவும் சொல்லலையா?’’

‘‘2014-தான் எனக்கு கல்யாணம் ஆச்சு. மனைவி பேர் சாரதா. சினிமாவைப் பார்த்தா நிஜம்னு நினைக்கிற அளவுக்கு வெகுளி. அதனாலேயே இந்தப் படத்துக்கு இன்னும் கூட்டிட்டுப் போகலை. படத்துல நான் வாங்குற அடிகளைப் பார்த்து நிஜம்னு பயந்துடுவாங்க!’’

செம ப்ரோ!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick