நீதிக்கான போராட்டம்!

ரப்ஜித்சிங். சில ஆண்டுகளுக்கு முன்பு மீடியாக்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர். 1964-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்து சாதாரண விவசாயியாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த சரப்ஜித்சிங் 2013-ம் ஆண்டு தனது 49-வது வயதிலேயே பாகிஸ்தான் சிறையில் இறந்துபோனது விதி விளைத்த கொடுமை.

1990-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கசூர் எல்லைப் பகுதிக்கு அருகே, இந்தியா - பாகிஸ்தான் எல்லையை சட்டவிரோதமாகக் கடக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தான் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். அவர் நுழைந்த நாளிலோ பாகிஸ்தான் நாட்டில் தொடர் குண்டுவெடிப்பு நடந்து 14 பேர் இறந்து போனார்கள். அந்த வழக்கை சரப்ஜித் தலையில் கட்டி, தூக்குதண்டனை விதித்தது நீதிமன்றம். விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் 2006-ம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட, சரப்ஜித்தின் தூக்குதண்டனை உறுதியானது. பின்னர் பல கட்டப் போராட்டங்களுக்குப் பின்பு, சரப்ஜித்தின் சகோதரி தல்பீர் கவுர் தொடர்ந்து விடுத்த கோரிக்கையை ஏற்று, அவரைத் தூக்கிலிடுவதை உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்தது. இதன் பின்னர் 2012-ம் ஆண்டு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியிடம் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு மீதான விசாரணைக்குப் பின்னர், தூக்குதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கபட்டுள்ள தாகவும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லை, மாறாக 2013-ம் ஆண்டு, சிறையில் இருந்த சரப்ஜித்சிங் சக சிறைக் கைதிகளாலேயே தாக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்று பின்னர் உயிரிழந்த கொடுமைதான் நடந்தேறியது. சுமார் 23 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்காக சிறையிலேயே கிடந்து, பல துன்பங்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளான சரப்ஜித் சிங்கின் மரணம் நாட்டையே உலுக்கியது. தற்போது பாலிவுட்டில் சரப்ஜித் சிங்கின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமின் வாழ்க்கையைத் திரைப்படமாக பதிவு செய்த இயக்குநர் ஓமங் குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். சரப்ஜித்தின் சகோதரி தல்பீர் கவுரின் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். ‘மைன் அவுர் சார்லஸ்’ படத்தில் சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ் வேடத்தில் நடித்த ரந்தீப் ஹூடா  சரப்ஜித்தின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்காக, 28 நாட்களில் 18 கிலோ எடையை குறைத்திருக்கிறார் ரந்தீப். மேலும், பாகிஸ்தான் வழக்கறிஞர் வேடத்தில் தர்ஷன் குமார், சரப்ஜித்தின் மனைவி வேடத்தில் ரிச்சா சதா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

நம் நாட்டைச் சேர்ந்த ஒருவர், செய்யாத குற்றத்துக்காக 23 ஆண்டுகள் வேறு நாட்டு சிறையில், குடுமபத்தைப் பிரிந்து பல துன்பங்களை அனுபவித்து நியாயமற்ற முறையில் இறந்தும் போயிருக்கிறார். சிறையில் அவர் பட்ட வேதனைகள், குடும்பத்தினர் பட்ட வேதனைகள், இதில் நடந்த அரசியல் எனப் பல கோணங்களில் பேசவிருக்கும் இந்தப் படம் நம் மனதில் பல டன் கனத்தை ஏற்படுத்திவிட்டு நகரும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம் மே மாதம் வெளியாகவிருக்கிறது!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick