அங்கே சிரிப்பு ‘சிங்கம்’!

லையாள சினிமாவில் இன்றைய தேதியில் சாக்லெட் பாய் நிவின் பாலி தான். லேட்டஸ்ட்டாய் அவரது தயாரிப்பில் போலீஸ் கெட்-அப்பில் ஹீரோவாய் நடித்து வெளிவந்திருக்கும் ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜு’வுக்கு எக்கச்சக்க வரவேற்பு.

படத்த்தின் கதை..? சாட்சாத் அப்படி ஒன்றே படத்தில் இல்லை. அதுதான் படத்தின் ப்ளஸ் மற்றும் மைனஸும்கூட. சப்-இன்ஸ்பெக்டர் பிஜு பாலோஸ் ரொம்ப நேர்மையான அதிகாரி. தன் சர்க்கிளில் நடக்கும் குற்றங்களைக் கண்டறிந்து உடனுக்குடன் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வாங்கிக் கொடுப்பதில் அக்கறை காட்டும் துடிப்பான இளைஞர். ஒரு போலீஸ் ஸ்டேஷனில் ஒரு எஸ்.ஐ தினசரி சந்திக்கும் சம்பவங்கள், வழக்குகள்தான் திரைக்கதையாக விரிகிறது.

காதலர்கள், குடிகாரரின் நிர்வாண நடனம், நாயை விட்டு சிறுமியைக் கடிக்கவைத்த தொழில் அதிபர், வாக்கி டாக்கியைத் தொலைக்கும் ஏட்டு, எஸ்.ஐ.தானே என அசால்ட்டாய் டீல் செய்யும் நபர்கள் என அன்றாட வாழ்க்கையில் ஒரு போலீஸ் ஸ்டேஷனை ஸ்கேனிங் செய்த விதத்தில் கவனம் ஈர்க்கிறார் டைரக்டர் அப்ரித் ஷைனி!

நிவின் பாலி இன்னும் பாலிஷாய் இருக்கிறார். இந்தப் படத்துக்காக நிறைய தண்ணீர் குடித்து அரிசி சாதம் சாப்பிட்டிருப்பார் போல... அப்படியே முரட்டு போலீஸேதான். ‘சாதாரண எஸ்.ஐனு நினைச்சியா, லெக்சர் வேலை, எம்என்சி வேலையைத் தூக்கி வீசிட்டு வந்திருக்கிறது உன்னை மாதிரி பன்னிகளுக்கு வணக்கம் வைக்கவா?’னு அல்லக்கை ஒருவனிடம் எகிறும் இடம் செம க்ளாஸ். புகார் கொடுக்கவரும் இரண்டு பெண்களிடம் அவர்களின் பயம் போக்க வரம்பு மீறாமல் அவர் அடிக்கும் ஜோக்கும் அதற்கு அந்தப் பெண்கள் காட்டும் வெட்கமும் அத்தனை எதார்த்தம். விசாரிக்கும் விதமும், தண்டனை கொடுக்கும் விதமும் சில இடங்களில் வலித்தாலும் அதற்கான லாஜிக்காக, ‘தப்பு பண்ணா டீச்சர் அடிப்பாங்கனு தெரியறதாலதான் ஸ்டூடண்ட் ஒழுக்கமா இருக்காங்க!’னு சமாளிஃபிகேஷன் தட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வாக்கி டாக்கி தொலைந்து போவதால் வரும் சிக்கல், குடிகாரரின் அட்டகாசம் என படத்தில் கிச்சுகிச்சு மூட்டும் இடங்கள் நிறைய. ரொமான்ஸ் போர்ஷன் எதுவுமே இல்லாமல் வெறும் போனிலேயே கடலை போடுவது மட்டும் போர். ஒரு காட்சியில் வந்தாலும் நம்பகத்தன்மைக்கும் போலீஸின் விசாரணை எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதற்கும் கேரக்டர் ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்கிறார் நம்ம ஊர் ரோஹிணி. பாடல்கள் ஸ்பீட் பிரேக்!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick