‘ஷூட் த குருவி’யைக் கேட்டால் கோபம் வருகிறது!

ரு காலத்தில் ‘கிழக்குவாசல்’, ‘சின்னக் கவுண்டர்’, ‘எஜமான்’ என்று ஹிட் படங்களைத் தந்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இப்போது அரிதாரம் பூசி நடிக்க ஆரம்பித்துவிட்டார். பாண்டிராஜின் ‘பசங்க -2’ படத்தில் தலையைக் காட்டியவர், சமீபத்தில் ரிலீஸான ‘அஞ்சல’ படத்தில் நந்திதாவுக்கு அப்பாவாக நடித்து இருக்கிறார். இயக்கத்தை விடுத்து நடிப்பில் என்ட்ரி ஆகி இருக்கும் உதயகுமாரிடம் பேசினேன்.

‘‘இப்போது வேறு என்னென்ன படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?’’

‘கொட்டாங்குச்சி’ படத்தில் அரசியல்வாதி, ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க’ங்கிற முழு நீள காமெடிப் படத்தில் நான்கு பேர் கொண்ட கும்பல் தலைவன், பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மிரட்டு’. அந்தப் படம் முழுக்க முழுக்க ரயிலிலேயே படமாக்கி இருக்கிறார்கள். அதில் ரயில் கார்ட் வேஷம். ‘பாம்புச் சட்டை’ படத்தில் பாபிசிம்ஹாவுடன் முக்கியமான கேரக்டர். ஏ.எல்.விஜய் தமிழ், தெலுங்கு, இந்தியில் இயக்கும் படத்தில் தமன்னாவுக்கு அப்பா ரோல்.’’

‘‘நீங்களே ஒரு டைரக்டர். உங்களை இயக்கும் டைரக்டர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘நான் இயக்கும்போது என்னிடம் நடிகர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தேனோ அது மாதிரி நான் நடிக்கும் படங்களின் டைரக்டர்களிடம் நடந்துகொள்கிறேன். படப்பிடிப்பில் நடிகனாக மட்டுமே இருப்பேன். கருத்து சொல்வது என்ற பெயரில் கண்டபடி மூக்கை நுழைக்க மாட்டேன். அப்போது ஃபிலிமில் படம் பிடித்தோம். இப்போது டிஜிட்டலில் படம் பிடிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் முதன்முதலாக என்னுடைய ‘உறுதிமொழி’ படம்தான் கிராஃபிக்ஸில் எடுக்கப்பட்டது. 1989-ல் பெரியார் மாளிகை தீப்பிடித்து எரிகிற மாதிரியான காட்சியை கிராஃபிக்ஸில் காட்டி இருப்போம். ‘உறுதிமொழி’ பெரிய அளவில் ஹிட் ஆகாததால், கிராஃபிக்ஸ் விஷயம் வெளியே தெரியவில்லை.’’

‘‘உங்கள் படங்களில் எல்லாப் பாடல்களையும் நீங்களே எழுதியது சரியா? இப்போது பாட்டு எழுதுபவர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘கதைக் காட்சிகளை மனசுக்குள் உள்வாங்கி பாடல் எழுத வேண்டும். நான் கதையை உள்வாங்கி எழுதிய பாடல்கள் அப்போது ஹிட்டானது. என் படத்தில் எல்லாப் பாடல்களையும் நானே எழுத வேண்டும் என்று அடம் பிடித்தது இல்லை. ஷூட்டிங்கில் இருக்கும்போது நானே வாலி சாருக்கு போன் செய்து படக்காட்சிகளை விளக்குவேன். அப்படி வாலி சாரின் வரிகளில் வெளிவந்ததுதான் ‘கிழக்கு வாசல்’ படத்தில் ‘வீட்டுக்கு வீடு வாசப்படி வேணும்’, ‘எஜமான்’ படத்தில் ‘ராக்கு முத்து ராக்கு’, ‘சிங்கார வேலன்’ படத்தில் ‘புதுச்சேரி கச்சேரி’  பாடல்கள். இப்போது நா. முத்துக்குமார், கபிலன் எல்லாம் நன்றாகவே எழுதுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் எழுதும் ‘ஷூட் த குருவி ஷூட் த குருவி டவுசர் உருவி டவுசர் உருவி’ என்று நாகரீகம், பண்பில்லாத வார்த்தைகளைக்  கேட்கும்போது கோபம் கோபமாக வருகிறது.’’

‘‘ரஜினிக்கு ‘எஜமான்’, விஜயகாந்துக்கு ‘சின்னக்கவுண்டர்’ கார்த்திக்குக்கு ‘பொன்னுமணி’ என்று வித்தியாசமான படங்களைக் கொடுத்த நீங்கள் கமலுக்கு மட்டும் ‘சிங்கார வேலன்’ போன்ற மசாலா படத்தைத் தந்தது ஏன்?’’

‘‘இசைஞானி இளையராஜாவின் சொந்தப் படத்தில் கமல் கமிட்டானார். அப்போது எல்லாம் நடிகர்களிடம் டைரக்டர் முழுக்கதையையும் சொல்ல வேண்டும். அதனால் கமலுக்கென்று ஸ்பெஷலாக நான்கு கதைகளைத் தயார் செய்து சொன்னேன். எல்லாக் கதைகளையும் மனம் லயிக்காமல் வேறு ஏதோ சிந்தனையில் கேட்டார். அப்படி அவரிடம் சொன்னதுதான் பிற்காலத்தில் ‘எஜமான்’, பொன்னுமணி’ படமாக வெளிவந்தன. கடைசியாகப் பஞ்சு அருணாசலம் சார் எழுதிய கதையை இளையராஜா, கமலிடம் சொல்லி ஓகே வாங்கினார். அப்படி வெளிவந்த படம்தான் ‘சிங்கார வேலன்’. ‘சிங்கார வேலன்’ படத்துக்குப் பின்னால் ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன!’’

-எம்.குணா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick