“உலக அரசியல் பேசப்போறேன்!”

‘வேதாளம்’ தெரியும். ‘பூதாளம்’ தெரியுமா? மன்சூர் அலிகான் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் தலைப்பு இது! ‘‘பல வருடங்களாக சினிமாவுல இருக்கேன். 200 படங்களுக்கு மேலே நடிச்சுட்டேன். ‘பூதாளம்’ படத்தோட முதல்நாள் ஷூட்டிங்ல கோவணம் கட்டி நிலத்துல இறங்கி, உழுததுதான் என் வாழ்க்கையில மறக்கமுடியாத நாள். அன்னைக்கு ராத்திரி சந்தோஷமா தூங்கினேன். என்னோட இத்தனை வருட சினிமா வாழ்க்கைக்கு, இந்தப் படத்தை அர்ப்பணிக்கிறேன்!’’ ரொம்ப ரொம்ப சீரியஸாகப் பேசுகிறார், மன்சூர் அலிகான்.

‘’குவாட்டர் குடிச்சா, தொண்டையெல்லாம் எரியுது. உடம்பு அசதிக்குக் கள்ளு குடிச்சேன். அவ்வளவு இதமா இருக்கு. சாராயத்தைவிட, கள்ளு குடிக்கிறது நல்லாதான் தம்பி இருக்கும். பாதிப்பும் பெருசா இருக்காது. உங்களுக்கெல்லாம் அனுபவம் இருக்கானு தெரியலை. முன்னாடியெல்லாம் கத்தரிக்காய் கொழம்பு சாப்பிட்டா, ருசி நாக்குல நிற்கும். இப்போ வர்ற கத்தரிக்காய் எல்லாம் காய்கறியே கிடையாது. உலக மயமாக்கல், உலக மயமாக்கல்னு நம்ம உணவுகளையே அடிச்சுத் தள்ளிட்டாங்க. கோக், பீட்சா, பர்க்கர்னு நீங்க சாப்பிடுறது எல்லாமே விஷம். இதனால என்ன நடக்கும்னு இப்போ தெரியாது. எதிர்காலத்துல புரியும். வெளியே அழகா, அம்சமா இருந்து, உடம்புக்குள்ள கேன்சர், அல்சர்னு ஆயிரெத்தெட்டு நோய் இருந்தா ஏதாவது பிரயோஜனம் இருக்கா? ஆனா, அதுதான் நடந்துக்கிட்டு இருக்கு!’’ எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாய் ஆரம்பிக்கிறார் மன்சூர்.

‘‘கோவணம் கட்டிய கெட்டப், விவசாயம் சம்பந்தமான கதை... திடீர்னு இப்படி இறங்கிட்டீங்க?”

‘‘விவசாயம் இல்லை தம்பி. குளோபல் அவார்னஸ்(?!) கொடுக்கிறதுக்காக எடுத்திருக்கேன். இதை நான் சினிமாவா நினைக்காம, கடமையா நினைச்சு ஷூட் பண்ணியிருக்கேன். கதையைக் கேளுங்க... உலகத்தோட நான்கில் ஒரு பங்குதான் நிலம். மிச்சம் மூணும் தண்ணி. அந்தக் கொஞ்ச நிலத்துல மனுஷங்க பண்ணிக்கிட்டு இருக்கிற அட்டகாசம் தாங்கமுடியலை. நிலக்கரி, கிரானைட், அது இதுன்னு ஏகப்பட்ட தேவைக்காக பூமியைக் குடைஞ்சு எடுத்துட்டாங்க. நெய்வேலி, இராஜஸ்தான்ல எல்லாம் கிரானைட்டுக்காக பூமிக்கு அடியில ஆயிரக்கணக்கான கிலோ மீட்டருக்கு மண்ணை உறிஞ்சியிருக்காங்களாம். பூமி நம்ம அம்மா மாதிரி தம்பி. அவங்க கர்ப்பப் பைக்குள்ள கையைவிட்டு, குழந்தையை உருவிட்டு இருக்காங்க. பார்த்துட்டு சும்மாவா இருக்கிறது?”

‘‘இப்படியெல்லாம் நீங்க பேசிப் பார்த்ததே இல்லையே?”

“உலக மக்களுக்கே எச்சரிக்கை கொடுக்கிற மாதிரி கதை எழுதியிருக்கேன். ஒரு விவசாயியோட பார்வையில திரைக்கதை ஆக்கியிருக்கேன். ஐம்பூதங்களுக்கு பூதாளம்னு பேரு. பூதாளத்தைப் பகைச்சுக்கிட்டாலோ, வஞ்சித்தாலோ என்ன நடக்கும்னு கதையா சொல்லியிருக்கேன். மிச்சத்தைப் படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. ஏன்னா, 450-க்கும் அதிகமான நாடுகளுக்கு இந்தப் படத்தை அனுப்பி வைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். ஏன்னா, இது உலகளாவிய படம்!”

‘’உலக அரசியல் பேசுற படமா?”

“அப்படியும் சொல்லலாம். படத்துல தமிழக, இந்திய அரசியல்வாதிகளுக்கு மட்டுமில்ல... உலக அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள் வெச்சிருக்கேன். ‘உங்க ராக்கெட், வெடிகுண்டு, அணுகுண்டு இதையெல்லாம் வேற எங்கேயாவது கொண்டுபோய் வெடிங்க. என் பூமியில வெடிக்காதீங்க. நீங்க எல்லாம் படிச்சவங்கதானே? நாம பண்ற சேட்டைக்கு ஓசோன்ல ஓட்டை விழும், வெப்பம் அதிகமாகும், கடல் கொந்தளிக்கும்னு தெரியும். தயவு செஞ்சு எல்லாத்தையும் நிறுத்துங்க!’ இதுதான் அந்த வேண்டுகோள். ஃபிரிட்ஜுல இருந்து வெளியே வர்ற குளோரோ புளூரோ கார்பன்தான், ஓசோன்ல ஓட்டை விழறதுக்குக் காரணம்னு சொல்றாங்க. அப்புறமும் ஏன்யா, எதையுமே தட்டிக் கேட்காம இருக்கீங்கனு ‘பூதாளம்’ படத்துல நான் கேட்கிறேன். ரொம்பப் பேசுறேன்னு நினைக்காதீங்க. இந்தப் படத்தை எடுத்ததுல அவ்வளவு ஆத்ம திருப்தி எனக்கு!”

‘‘போட்டோவுல ‘அம்மா லேப்டாப்’பைப் பயன்படுத்தியிருக்கிறது?’’

“நல்ல கேள்வி. ஒரு ஏழை விவசாயி வீட்டுல அரசாங்கம் கொடுத்த லேப்டாப்தான் இருக்கும். இதையே கலைஞர் கொடுத்திருந்தா, கலைஞர் படத்தை வெச்சிருப்பேன். அவ்வளவுதான்! அதைக் கிழிச்சுட்டும் பண்ணியிருப்பேன். ஆனா, ஏழையோட வீட்டுல லேப்டாப் எப்படி வந்துச்சுனு ஆடியன்ஸ் யாரும் கேள்வி கேட்டுடக் கூடாதுல்ல? முக்கியமான விஷயம், படத்துல என் குழந்தைங்களும் கோவணம் கட்டி நடிச்சிருக்காங்க. என் குழந்தைங்களா இருந்தாலும், அப்பாங்கிற உரிமை இல்லாம, ஷூட்டிங் ஸ்பாட்ல சுளுக்கெடுத்து வேலை வாங்கியிருக்கேன்!”

‘‘அப்போ, இனிமே தமிழ்நாட்டு அரசியல் பக்கம் எட்டிப் பார்க்க மாட்டீங்க?”

“நேரமில்லை. சில கட்சியில இருந்து ஆளுங்க வந்தாங்க. பொன்னாடை போர்த்திட்டுப் போனாங்க. எதுக்குனு கேட்காம சிரிச்சுக்கிட்டே அனுப்பி வெச்சுட்டேன். ஏன்னா, நாம யாருக்கும் வளைஞ்சு கொடுக்கிற ஆள் கிடையாது. ஒரு வாக்காளனா, இந்தத் தடவை கூட்டணி வெச்சு தேர்தலைச் சந்திக்கிற கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும்னு நினைக்கிறேன். தனியா நிற்கிற கட்சி ஜெயிக்காது!”

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick