"சார்ஜே இல்லாத செல்போனுக்கு எதுக்கு ரெண்டு சிம்கார்டு?”

ட்டமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க ஸ்டார் பேச்சாளர் விந்தியா அனல் கக்கும் பேச்சினைத் தயாரித்துக்கொண்டு தயாராக நிற்கிறார். அவரைச் சந்தித்ததில்...

‘‘தி.மு.க தொண்டர்கள் மனநிலை, ‘நமக்கு நாமே’ பயணம் எப்படி..?’’

‘‘ ‘ராசுக்குட்டி’ படத்துல பிரபலமான ஒரு வசனம் உண்டு. ‘மனசுக்குள்ளே எவ்வளவோ இருக்கு சித்தப்பு... எல்லாத்தையும் வெளியில சொல்ல முடியல சித்தப்பு’ என்ற வசனம். அது மாதிரி நிலைமையில்தான் தி.மு.க.வில் இருக்கிறவங்க வெளியே சொல்ல முடியாம உள்ளுக்குள்ளே மைண்ட் வாய்ஸ்ல புலம்பிக்கிட்டு இருக்காங்க. ‘நமக்கு நாமே’ என்று யார் சொல்லிப்பாங்க. ‘உனக்கு நீ... எனக்கு நான்...’ என்று உதவ ஆளில்லாதவங்கதான் சொல்வாங்க. எங்களுக்கு மக்கள் இருக்காங்க, மக்களுக்கு நாங்க இருக்கோம்!’’

‘‘முதல்வர் ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சிக்கிறாரே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்?’’

‘‘மாட்டுச் சாணியை மிதிச்சா, காலைக் கழுவிட்டு பேசாம போய்க்கிட்டே இருக்கணும். அதைவிட்டு அந்த மாட்டைப் பிடிச்சு அட்வைஸ் எல்லாம் பண்ணக் கூடாது. இளங்கோவனின் அப்பா ஈ.வி.கே.எஸ். சம்பத்துக்குத் துரோகம் செய்தவர் கருணாநிதி. அவர்கூட கூட்டணி சேர்ந்திருக்கார். அம்மாவைப் பிடிக்காத பிள்ளைங்க இருக்காங்க. ஆனால் பிள்ளையையே பிடிக்காத ஒரு அம்மா உலகத்துல எங்கேயாவது இருப்பாங்களா? அதுதான் அவரோட அம்மா சுலோசனா சம்பத். பிள்ளையைப் பிடிக்காத அந்தம்மா கடைசிவரை எங்கள் அம்மாகூடத்தான் இருந்தார். இப்போ புதுசா நக்மா, குஷ்பு காங்கிரஸ்ல சேர்ந்து இருக்காங்க. பாவம்  சார்ஜே இல்லாத செல்போனுக்கு எதுக்கு ரெண்டு சிம்கார்டு? காங்கிரஸ் கட்சியோட பேட்டரி ஃபீஸ் போய் ரொம்ப நாளாச்சு.’’

‘‘குஷ்புவும் விமர்சிக்கிறாரே...’’

‘‘குஷ்புவுக்கு யாருமே சப்போர்ட் இல்லாத நேரத்துல அவருக்கு ஆதரவு அளித்தது, அன்பு காட்டியது அம்மாதான். பத்மாசுரன் வரம் கொடுத்த சிவன் தலையில் கை வைப்பான். அதுபோல நன்றி மறந்து, பழசை மறந்து யார் தன்னை ஆளாக்கினாங்களோ, யார் தமிழ்நாட்டு மக்களுக்கு குஷ்புவையும், அவரோட தமிழையும் அறிமுகம் செய்தாங்களோ, ஜெயா டி.வி மூலமாக ஒரு வாழ்க்கை கொடுத்தாங்களோ, அவங்களைப் பற்றியே விமர்சிக்கிறாங்க. குஷ்பு எங்கள் அம்மாவுடன் இருந்தால் நல்லா வெச்சுருப்பாங்க. தி.மு.க-வுக்குப் போனாங்க. அங்கேயும் பத்மாசுரன் மாதிரி தலையில் கை வெச்சாங்க. இதுக்கு முன்னாடியாச்சும் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தாங்க. இந்தம்மா போன பிறகு அதுவும் நாசமாப் போச்சு. இப்போ காங்கிரஸுக்குப் போயிருக்காங்க. காமராஜ் இருந்த காங்கிரஸ் எப்படி இருந்துச்சு? இப்போ குஷ்பூ இருக்கிற காங்கிரஸ் என்னாகப் போகுதோ?’’      

‘‘தேர்தலில் விஜயகாந்துக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளதே..?’’

‘‘உலகத்தில் அதிகமா விற்கிற பத்திரிகை ப்ளேபாய், அதிகமா சேல்ஸ் ஆகிறது சிகரெட். இப்படி எல்லாக் கெட்ட விஷயங்களுக்கும் சேல்ஸ், டிமாண்ட் அதிகமா இருக்கும். ஏன்னா கெட்டது ரொம்ப ஈஸியா பரவும். சாவு வீட்டுக்குப் போய் யாராவது ஆழ்ந்த நன்றிகள்னு சொல்வாங்களா? ஆனா விஜயகாந்த் சொல்வார், சொன்னார்.

எங்கள் அம்மா கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைக் காப்பாத்திக்கத் துப்பில்லை. இவர் நாட்டை எங்கே காப்பாத்தப் போறார்? அம்மாவுக்கும், அ.தி.மு.க-வுக்கும் ஆதரவாக அடிச்ச காத்துல கோபுரத்தில் ஏறிய குப்பைதான் விஜயகாந்த். எங்கள் காத்து மட்டும் இல்லைனா, அந்தக் குப்பை மறுபடியும் குப்பைத்தொட்டியில்தான் கிடக்கும். விஜயகாந்த் சகாப்தம் ஓவர். ‘தே.மு.தி.க  ராணுவம், தொண்டர்கள் வீரர்கள், தேர்தல் போர்’னு பேசுறாங்க. இங்க கேப்டன் துப்பாக்கியைத் திருப்பிப் பிடிச்சுக்கிட்டு நிற்கிறார்.’’

‘‘ராமதாஸ் பா.ம.க ஜெயிக்கும் என்கிறாரே...’’

‘‘ராமதாஸ் போடாத நாடகமில்லை, பேசாத வசனமில்லை, மாறாத கூட்டணியில்லை, கட்டாத வேஷமில்லை. ஆனா எதுவுமே நிரந்தமில்லை. தைலாபுரம் தோட்டம் டெவலப்பான அளவுக்கு தொகுதி வளர்ச்சி அடைஞ்சுருக்கா? வட மாவட்டங்களில் அவங்க கோட்டைனு சொல்கிற எல்லா இடங்களும் குடிசைகளாகவே இருக்கு. அந்த மாவட்டங்கள்ல இருக்கிற சாதிப் பிரச்னைகளால தொழிற்சாலை அமைக்கவிடாம தடுக்குறாங்க. கண்டிப்பா மக்களை முன்னேற விட மாட்டாங்க. மக்களை மனுஷங்களா பார்க்க மாட்டாங்க, வெறும் ஓட்டுக்களாத்தான் பார்க்கிறாங்க. ஆட்சியில இருக்கிற கட்சிகூட கூட்டணி வெச்சுப்பாங்க. சென்ட்ரல்ல இருந்து ஸ்டேட் வரைக்கும் செல்வாக்கோட இருந்தவங்க இதுவரைக்கும் அவங்களோட மக்களுக்கு என்ன செய்து இருக்காங்க. இப்போ குடி குடியைக் கெடுக்கும்னு புதுசா சொல்ல ஆரம்பிச்சு இருக்காங்க. செங்கல்பட்டு தாண்டினா டெபாசிட் வாங்க முடியாத ஒரு கட்சிக்கு முதல்வர் பதவி மேல ஆசையா?’’

எந்தக் கேள்வி கேட்டாலும் இப்படிக் கொதிக்கிறாரே!

-எம்.குணா,  படங்கள்: சு.குமரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick