கல்யாணமாம் கல்யாணம்!

ல்யாண ஃபங்ஷனுக்கு போறப்போ நமக்குனே சில பிரச்னைகள் நடக்குமே கவனிச்சிருக்கீங்களா பாஸ்?

பந்தியிலதான் எல்லாப் பிரச்னையும் ஸ்டார்ட் ஆகும். நாம உட்கார்ந்திருக்கிற பந்தியிலதான் வறுத்த கறி நம்ம இலைக்கு வர்றப்போ தீர்ந்து போயிருக்கும். அப்பளம் நொறுங்கித் தூளாகி இருக்கும். பிரியாணியில பீஸ் இருக்காது. ஐஸ்க்ரீம் வைக்க மறந்துருப்பாங்க. தண்ணி வெச்சிருக்க மாட்டாங்க. இதையெல்லாம்கூட மன்னிச்சூ. ஆனா, பந்தியில ரெண்டு டீசன்ட் பசங்க இருப்பாங்க. ரெண்டு கை அள்ளிச் சாப்பிட்டதும் டீசன்டா(?) எழுந்திரிச்சு எல்லோரையும் எழுந்திரிக்கச் சொல்ற மாதிரி கை கழுவப் போவானுங்க. நமக்கு அப்போதான் சாம்பாரே வரும். அவ்வ்வ்வ்!

சாப்பிட்டாச்சுனு மொய் எழுதப்போனா கவர் இருக்காது. கவர் இருந்தா பேனா இருக்காது. ரெண்டுமே இருந்தும் மொய் எழுதப்போனா, சில கல்யாணங்கள்ல ‘அன்பளிப்பு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது!’ என எழுதி வைத்திருப்பார்கள். பொக்கேக்கு நான் எங்கேய்யா போவேன்?

சில ரிசப்ஷனுக்கு கிஃப்ட்டோட தனியா போவோம். நமக்குனு ஒருத்தன் மேடையில ஏற வர மாட்டான். குடும்பம் குடும்பமா வரிசையா நம்மளை ஓவர் டேக் பண்ணிட்டு வந்து நிற்பாங்க. சரினு மனசை திடப்படுத்திக்கிட்டு தனி ஒருவனாய் மேடையில் ஏறினால், மாப்பிள்ளையோ நாம பொண்ணு வீட்டுக்காரங்கனு தெரிஞ்சும் நமக்குப் பின்னால கீழே நிற்கிற ஃபேமிலியை ‘வாங்க வாங்க’னு வரவேற்பார். அப்புறம் அப்படியே மெள்ளப் பின்வாங்கி பூராப்பயலுகளும் போன பிறகு தயங்கித் தயங்கி யாரும் வராதப்போ மேடை ஏறிப்போனா, கல்யாணம் ஆனதுங்க நம்மளைப் பெருசா கண்டுக்காதுங்க. நாம போட்டோவுக்கு போஸ் கொடுக்கிற மாதிரி நிற்போம். ஆனா, கேமராவை அப்போதான் துடைச்சுட்டு இருப்பார் போட்டோகிராஃபர்!

தலையில ஸ்ப்ரே அடிக்கிறது, ஜிகினாக்களை மூஞ்சி மேல கலர்கலரா தெறிக்க விடுறதுனு சின்னப்பசங்க பூரா நம்மளை என்டெர்டெயின்மென்ட்டுக்கு யூஸ் பண்ற கொடுமை இருக்கே....ப்ப்ப்பா முடியலை!

உட்கார்ந்திருந்தா நம்ம மண்டைக்கு மேல வேணும்னே வீடியோகிராஃபர் பக்கத்துல நிற்கிற பையன் லைட் அடிப்பான். நாம சிவாஜி கணேசனா பெர்ஃபார்மன்ஸ் பண்ணும்போது கேமராவையும் லைட்டையும் பொசுக்குனு வேற பக்கம் திருப்பிக்குவான். அப்புறம் மூஞ்சி வெளிறிப்போய் எங்கிட்டோ வெறிச்சுப் பார்த்து சமாளிக்கணும்!

ஃபங்க்‌ஷன்ல நாம ஸ்கூல் டேஸ்ல ஒருதலையா காதலிச்ச பொண்ணு வந்திருக்கும். அதுவும் எப்படி? குண்டா, ரெண்டு குழந்தையோட வந்து மேடை மேல நம்மளை அடையாளம் தெரியாம தேமேனு நிக்கும். தட் ‘எனக்கு வலிக்கலையே’ மொமென்ட்!

அப்பா இருக்காரே... அதான் டாடி டாடி, தன்னோட ஃப்ரெண்ட் மாதிரி இருக்கிற தலை நரைச்ச ஒருத்தரைக் காட்டி, ‘யார்னு தெரியுதா?’ என்று குவிஸ் போட்டி வைப்பார். ‘என்ன மருமகனே! சின்ன வயசுல உங்களைத் தூக்கினேனே மறந்துட்டீங்களா?’ என்பார் அந்த நபர். சில நேரங்களில் அட்வைஸ் என்ற பெயரில், ‘என்னப்பா இந்தக் காலத்துப்பசங்க சொந்த பந்தங்களைத் தெரியாம பட்டணத்துல அப்படி என்னதான் கழட்டுறீங்களோ?’ என உரிமையாக கோபித்துக்கொள்வார்கள். அப்புறம் என்ன சோக மோடுக்குப் போயிக்க வேண்டியதுதான்!

சில அத்தைகள், மாமிகள் அப்போதுதான் அம்மா-சித்திகளோடு சண்டைக்குப் போவார்கள். ‘உன் மகனுக்கு என் பொண்ணைக் கொடுக்குறியா?’ என்று தாம்பூலத் தட்டை அங்கே உட்கார்ந்து மாற்றுவார்கள்.

அரேஞ்சுடு மேரேஜாம்!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick