அ - அம்மா ஆ-ஆப்ஸ்!

ஃப்ளெக்ஸ், ஸ்டிக்கர்ஸ்... என அ.தி.மு.க-வின் அட்ராசிட்டிகளை நெட்டிசன்கள் உறித்து உப்புக்கண்டம் போட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களில் 50க்கும் மேற்பட்ட ‘அம்மா’ அப்ளிகேஷன்களை உருவாக்கி, ‘சாஃப்ட்வேர்’ அட்ராசிட்டிகளிலும் தெறிக்கவிடுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். அதில், சுவாரஸ்யமான சில!

ரத்தத்தின் ரத்தமே: சுருக்கமாக ஆர்.ஆர்! ரத்ததானம் செய்யும் அ.தி.மு.க தொண்டர்களுக்காக, தொண்டர்களாலேயே உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன் இது. ரத்ததானம் கொடுக்க விரும்பும் தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன் என்பதால், ‘ரத்தத்தின் ரத்தமே!’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். நல்ல முயற்சி என்பதால், பாராட்டலாம். ஆனால், ‘ரத்ததானம் செய்வோம் உயிர்களைக் காப்போம்!’ என்ற அதரப்பழசான கேப்ஷனை மாண்புமிகு. புரட்சித்தலைவி. இதயதெய்வம்.அம்மாவே உருவாக்கியதாகச் சித்தரித்திருப்பது, ஆஹாங்!

மக்களின் முதல்வர்: ஆல்-இன்-ஆல் அம்மா என்பதுதான் அப்ளிகேஷனின் கரு. ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு கட்சித் தொண்டர்கள் கொடுத்த ‘மக்களின் முதல்வர்’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டத்தைப் பயன்படுத்தி இருப்பதைத் தவிர, சிறப்பான செயல்பாடுகள் எதுவும் இல்லை. ஆனாலும், டவுன்லோடு செய்திருக்கும் தொண்டர்கள், கமென்ட்டுகளில் குதறித் தள்ளியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று. ‘புரட்சித் தலைவி அம்மா. மக்களால் நான் மக்களுக்காக நான். தமிழினத்தாயின் மக்களாட்டச்சி(!?) முழக்கம்!’ - என்னய்யா இது?

அம்மா பாக்ஸ்: கழகத் தொண்டர்கள் அனைவரையும் ‘அம்மா’வின் பார்வைக்குக் கொண்டுவருவதற்காக உருவான அப்ளிகேஷனாம். சென்னையில் இருந்து கடைக்கோடி கிராமம் வரை... அ.தி.மு.க-வின் அத்தனைத் தொண்டர்களும் தங்களுடைய இ-மெயில், மொபைல், மாவட்டம், ஊர் போன்ற விபரங்களைக் கொடுத்து இணைந்துகொள்ளலாம். உள்கட்சி விவகாரங்களையும், செய்திகளையும் எளிமையாகப் பறிமாறிக்கொள்ள உதவும் என்பது அப்ளிகேஷனை உருவாக்கியவரின் நம்பிக்கை. நம்பிக்கை... அதானே எல்லாம்!

அம்மா நாட்காட்டி: வருடத்தில் அத்தனை நாட்களையும் அம்மாவின் முகத்தோடு ஆரம்பிக்க உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன் இது. நல்லநேரம், ராகுகாலம் முதலிய காலண்டர் குறிப்புகளோடு, ஜெயலலிதா பற்றிய துணுக்குகளையும் ஆங்காங்கே தூவியிருக்கிறார்கள். முக்கியமான ‘அம்மா’ நாட்களும் காலண்டரில் இடம்பெற்றிருக்கின்றன. அ.தி.மு.க தொண்டர்கள் மொபைலில் அத்தியாவசியமாக இருக்க வேண்டிய அப்ளிகேஷனாக உருவாக்கப்பட்ட இதை ஒரே ஒரு தொண்டர் டவுன்லோடு செய்து மானத்தைக் காப்பாற்றியிருக்கிறார்.

டிஜிட்டல் தமிழ்நாடு: மோடி ‘டிஜிட்டல் இந்தியா’ என்று பெயர் வைக்க, அதற்குப் போட்டியாக ‘டிஜிட்டல் தமிழ்நாடு’ என்ற பெயரில் அப்ளிகேஷன் விட்டு கெத்து காட்டியிருக்கிறார்கள். ஆனால், அப்ளிகேஷன் வெறும் வெத்து என்பது, ஓப்பன் பண்ணாலே தெரிகிறது. ‘அ.தி.மு.க ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய’, ‘டிவிட்டர் பக்கத்தை லைக் செய்ய’, ‘அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல’, என ‘டிஜிட்டல் அ.தி.மு.க’வாகவே இருக்கிறது. தவிர, அப்ளிகேஷன் பற்றிய விளக்கத்தில் ‘திஸ் இஸ் எ இன்பர்மேஷன் அப்ளிகேஷன் ஃபார் ஜெயலலிதா லவ்வர்ஸ்...’ என ஆரம்பித்திருப்பது அதகளம்.

இது மட்டுமா? எங்கெங்கு அம்மா உணவகங்கள் இருக்கிறது என்பதை அறிய, தொண்டர்களுக்கு அம்மாவின் செய்திகளை அனுப்ப, திட்டங்களை அறிமுகப்படுத்த, செய்திகளை வெளியிட, கட்சியை வளர்க்க... என ஏராளமான அ.தி.மு.க அப்ளிகேஷன்கள் கொட்டிக்கிடக்கின்றன. இது தவிர, ‘தமிழ் அம்மா’ என்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் நாம் தமிழர் கட்சி சார்பாக இயங்குவதாக விளக்கப்பட்டிருக்கிறது. சீமானின் மேடைப் பேச்சுகளையும், பேட்டிகளையும் உடனுக்குடன் தம்பிகளுக்குத் தெரியப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அப்ளிகேஷனாம். பச்சை நிறப் பிண்ணனியில் ‘அ’ என்ற எழுத்தைத் தாங்கி நிற்கும் இந்த அப்ளிகேஷன், ‘நாம் அம்மாவுக்கு’ என்று சொல்ற மாதிரியே இருக்குதுப்பா!

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick