வண்டிக்கு ரெட்டை ஜடை!

ம் ஆட்கள் ஓப்பனிங் எல்லாம் நன்றாகத்தான் கொடுப்பார்கள். ஆனால், போகப் போக என்ன ஆகும் தெரியுமா?

புதுசா ஆரம்பிச்ச டீக்கடையில் கஸ்டமர்களை விழுந்து விழுந்து கவனிப்பார்கள். கொஞ்ச நாளிலேயே கீழே விழுந்த வடையைக்கூட நமக்கு பிளேட்டில் வைத்து தருவார்கள். உங்களுக்கெல்லாம் கிருமி போஜனம் தாண்டி!

புதுசா பைக் வாங்கிய பக்கிகள், பைக்குக்குக் கொசு கடிக்கக் கூடாது எனப் போர்வையெல்லாம் போத்துவார்கள். ஆனால், சில வாரத்திலேயே வண்டிக்கு ரெட்டைஜடை போட்டது போல் இண்டிகேட்டர்கள் தொங்கிப்போய் கிடக்கும். என்ன டிசைனோ?

புது மொபைலில் சின்னக் கீறல் விழுந்தாலும் பாத்ரூமுக்குள் சென்று அழுதுவிட்டு வருவார்கள். சில வாரங்களில், புது மொபைல் வாங்கும் நோக்கில் வைத்திருக்கும் மொபைலைக் கொலை செய்யத் திட்டம் தீட்டுவார்கள். என்னா ஒரு வில்லத்தனம்!

புதிதாய் ஆரம்பித்த வாட்ஸ் அப் குரூப்பில் டைமிங்கில் கவுன்டர் அடிப்பதே சிரமம். நொடிக்கு நொடி மெசேஜ்கள் பறக்கும். சில வாரங்களில் குட்மார்னிங் அனுப்பினால் பதிலுக்கு ஒருவன் மறுநாள் சாயங்காலம் குட்ஈவ்னிங்னு மெசேஜ் வரும். ஹலோ... யாருனா இருக்கீங்களா?

புதிதாய் நடிக்க வந்த ஹீரோயின்கள் ‘கிளாமர் எனக்கு செட் ஆகாது. கிளாமர் ரோல்களில் நடிக்க மாட்டேன்’ என பேட்டி கொடுப்பார்கள். போகப் போக என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும் மக்களே!

புதிதாய் சென்னைக்கு வேலைக்கு வந்தவர்கள் டிராக் பேன்ட்டில் கோடு போட்ட சட்டையை இன் ஷர்ட் பண்ணிக்கொண்டு வித்தியாச ரோலில் திரிவார்கள். முதல் மாசம் சம்பளம் கைக்குக் கிடைத்ததும் மன்சூர் அலிகான் போல் இருந்தவர்கள் சல்மான் கான் போல் மாறிவிடுவார்கள். எத்தனைப் பேரைப் பார்த்திருக்கேன்!

காதலிக்க ஆரம்பித்த சமயம் சார்ஜ் போட்ட மாதிரியே போன்ல பேசி காது வெந்து போய் அலைவார்கள். மூணே மாதம், காதலி போன் செய்தால்கூட காதில் விழாதது போல் இருப்பார்கள். கொசுத்தொல்லை அதிகமா இருந்துச்சுனா சைலன்ட் மோட்.

புதிதாய் வேலைக்குச் சேர்பவர்கள் ஐந்து நிமிஷத்துக்கு முன்னாடியே வேலைக்கு வந்துவிடுவார்கள். நான்கே மாதம், சாவகாசமாய் டீக்கடையில் லெமன் டீ அடித்துவிட்டு அரைமணி நேரம் லேட்டாக வரும் வித்தையைக் கற்றுக்கொள்வார்கள். நான்லாம் வேலைக்குச் சேர்ந்த நாளில் இருந்தே லேட்டுதான் பாஸ்!

இன்டெர்நெட் கனெக்‌ஷன் புதுசா போட்டவர்கள், அறிவை வளர்த்துக்குவோம்னு நினைச்சு பல அறிவு சம்பந்தமான தளங்களைப் பார்ப்பார்கள். இரண்டே வாரத்தில் பலான வெப்சைட்டுகளை ஓப்பன் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். வேண்டாம்டா... தாத்தா சொல்றதைக் கேளுங்கடா!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick