ஏணி-பெருமாட்டி கதை எப்படி இருக்கு?

நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லப்போறேன்...

‘‘ஒரு சின்னப் பையன் தனது தந்தையிடம் சென்று, ‘‘அப்பா எனக்கு அரசியல் பாடம் கற்றுக்கொடு’’ என்றான். உடனே தந்தை தனது மகனைப் பார்த்து, ‘‘மகனே, அரசியல் பணி என்பது ஆபத்தானது. இதில் தந்தை, தனையன் என்றெல்லாம் உறவுகளுக்கு இடமில்லை. வலிமை உள்ளவரே வெல்ல முடியும். எனவே உனது அரசியல் பாடத்தை நீயேதான் கற்றுக் கொள்ள வேண்டும்’’ என்றார். தந்தை சொல்லை மகன் கேட்கவில்லை. அரசியல் பாடம் கற்பதில் பிடிவாதமாக இருந்தான். மகன், ‘‘தந்தையே உங்களைப் பார்த்து நான் அரசியலில் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்’’ என்றான். வேறு வழியின்றி தந்தையும் மகனுக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுக்க சம்மதித்தார். மகனை அழைத்து, ‘‘ஓடிப்போய் ஒரு ஏணி எடுத்துக்கொண்டு வா’’ என்றார். மகன் ஏணியை எடுத்துக்கொண்டு வந்தார்.

அப்பா ஏணியைப் பிடித்திருக்க, அந்தக் குட்டிப் பையன் டிராக் ஷூட் போட்டுக்கொண்டு கலர் பேப்பர்கள் ஒட்டப்பட்ட அந்த ஏணியில் ஏறத் தொடங்கினான்.

அப்போது அந்தக் குட்டிப் பையன் தன் அப்பாவை நோக்கி, “ஏன் டாடி, திடீர்னு ஏணி உடைஞ்சுடுச்சுனா என்ன பண்றது?” எனக் கேட்டான். அதற்கு அந்தத் தந்தை, “மகனே, நீ என்னை சுவற்றில் சாய்த்து வைத்தாலே சவுக்கு ஏணியாகத்தான் நிற்பேன், அதில் ஏறி நீ மேலே செல்லலாம். சரிந்து விட மாட்டேன்’’என்று சொன்னார். அந்தப் பையனும் நம்பிக்கையோடு ஏறிக்கொண்டிருந்தான். அப்போது ‘டமார்’ என கதவைத் திறந்து யாரோ உள்ளே வர, அந்த அதிர்ச்சியிலேயே அப்பா ஏணியை ஆட்ட, சின்னப் பையன் ஏணியோடு சேர்ந்து கீழே விழுந்தான். கதவைத் திறந்து கலவரத்தை ஏற்படுத்தியது வேற யாரும் அல்ல, அந்தத் தந்தையின் மூத்த மகன்.

கீழே விழுந்த சின்னப்பையன் வலி தாங்க முடியாமல் உதவி கேட்டு தனது தொகுதியில் அறிவித்த நம்பருக்கு நம்பிக்கையோடு போன் செய்தானாம். ஆனால் ‘தயவு செய்து நம்பரை சரி பார்க்கவும்’ என பதில் வர, சின்னப் பையன் பெரிய பல்பாக வாங்கினான். தம்பி வாங்கும் பல்புகளைக் கண்ட அவனது அண்ணன் ‘சரியான காமெடி டைம்’ என கலாய்த்து விழுந்து விழுந்து சிரித்தான். ரொம்பவே வருத்தமாகிப் போன அந்தத் தந்தை தனது மகன் ஏறும்போது ஏணியைப் பிடித்துக்கொள்ள கூட்டணிக்கு சிலரை அழைக்க முடிவு எடுத்தாராம். ஆனால், அவர்கள் ரொம்பவே யோசித்தனர். ஏனென்றால், இதே போன்று ஒருமுறை தானே ஏணியில் ஏற முடிவெடுத்த தந்தை ஏணியைப் பிடித்துகொள்ள அவர்களைத்தான் கூப்பிட்டிருந்தார். “நான் ஏணியில் வெற்றிகரமாக ஏறிவிட்டேன் என்றால் உங்களுக்கும் மேலே இடம் தருகிறேன்” என்றாராம். இவர்களும் நம்பி ஏணியைப் பிடித்திருக்கிறார்கள்.  ஆனால், ஏறிய பின்போ “உங்களுக்காக என் இதயத்தில் இடம் தருகிறேன்’ என முரட்டுத்தனமாய்க் கலாய்த்து ஏணியைத் தள்ளிவிட்டாராம். இதனால் அப்போது அழைத்ததும் வந்தவர்கள் இப்போது வர யோசித்துக்கொண்டே இருந்தார்களாம்.

அப்பா, மகனின் ஏணி விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த எதிர்வீட்டுப் பெருமாட்டிக்குப் பெரும் மகிழ்ச்சி. ஏணியில் ஏறுவதற்கு என்னைத் தவிர யாருமில்லை என்று ‘‘ஆப்பனன்டா ஆளே இல்ல...சோலோ ஆகிட்டேன்” என மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாராம். இதனைப் பெருமாட்டியின் ஆதரவாளர்களும் ஊர் முழுக்க போஸ்டர், பேனர், ஸ்டிக்கர் என ஒட்டி அதகளப்படுத்தினார்களாம்.

அதே மிதப்பிலேயே எதிர் வீட்டிலுள்ள சின்னப் பையனையும் அவன் தந்தையையும் கலாய்த்து பெருமாட்டி குட்டிக்கதைகளைச் சொல்ல, அந்தத் தந்தையும் பதிலுக்கு கதை சொன்னார். இதைப் பார்த்த ஊர் மக்கள் “ஒண்ணு கடிதம் எழுதுறாய்ங்க, இல்லை கதை சொல்றாய்ங்களே. இப்படியே போய்க்கிட்டு இருந்தா என்னய்யா அர்த்தம்? இதுக்கு ஒரு முடிவே கிடையாதா?” எனக் கடுப்பானார்களாம்.

என்ன கதை நல்லா இருந்துச்சா? சும்மா ஜாலிக்காகத்தான் இந்தக் கதையை எழுதினேன் மக்களே. நீங்கள் யாரையாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick