நினைச்சுப் பார்த்தா நிஜம்தான்!

ங்க ஹீரோ யார் தெரியுமா? அவர் என்னென்ன சாதனைகளைப் பண்ணியிருக்கார் தெரியுமா? அவரைப்போய் கிண்டல் பண்றீங்களேனு சில முன்னாள் ஹீரோக்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளிக் கிறாங்க. அந்த ஹீரோக்களின் சாதனை லிஸ்ட் எடுத்துப்பார்த்தா, அம்மாவின் ஐந்தாண்டு சாதனைகளை விட பெருசா இருக்கு பாஸ்.

ராமராஜனின் சாதனைகள் என்று அவருடைய ரசிகர்கள் சொல்லும் முக்கியமான பாயின்ட்ஸ். ஒரே நேரத்தில் 40 படங்களில் ஹீரோவாக ஒப்பந்தமானவர். 1989 முதல் 1992 வரை மூன்று வருடங்கள் கால்ஷீட் நிரப்பிய ஹீரோ. கமலை விட கௌதமியுடன் அதிகப் படங்களில் சேர்ந்து நடித்தவர் (இதெல்லாம் சாதனையா?). கடந்த 10 ஆண்டுகளில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் இப்போதுள்ள நியூ ஜெனரேஷனுக்கும் இவரைத் தெரியும். 1990-களிலேயே 6.6 சதவிகிதம் ரசிகர்கள் இவருக்கு இருந்தார்கள். (யார் எடுத்த கணக்குய்யா இது?) ஒரு வருடம் ஓடிய ‘கரகாட்டக்காரன்’ படத்தின் ஹீரோ. இதுவரை இவரால் எந்தத் தயாரிப்பாளரும் நஷ்டப்பட்டது கிடையாது. எந்தப் படத்திலும் குடிப்பது போல் நடித்தது கிடையாது. இப்படி ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்திய எங்கள் தலைவரை டவுசர் ஹீரோ, லிப்ஸ்டிக் ஹீரோனு சிலர் கலாய்க்கிறாங்க. அவங்களுக்கு உண்மை தெரியணும். அதுவரை நிறுத்தாம ஷேர் பண்ணுங்க தோழர்களேனு தொடர்ந்து பரப்பிக்கிட்டு இருக்காங்க பாஸ்.

இது கேப்டனின் சாதனை லிஸ்ட். 1980-களில் இருந்து 2005 வரை தொடர்ந்து 25 வருடங்கள் முன்னணி ஹீரோ. பல புதுமுக இயக்குநர்களுக்கு முதல் வாய்ப்பு கொடுத்தவர். 100-வது படம் ஹிட்டான ஒரே ஹீரோ இவர்தான். ரஜினி ‘ராகவேந்திரா’ தோல்வி, கமல் ‘ராஜபார்வை’ தோல்வி, ஓரே ஆண்டில் 18 படங்களில் நடித்தவர், ஷுட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு வருபவர். ‘செந்தூரபாண்டி’ விஜய்க்காக, ‘பெரியண்ணா’ சூர்யாவுக்காக கௌரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தவர்.  ‘பூந்தோட்டக் காவல்காரன்’, ‘செந்தூரப்பூவே’, ‘ரமணா’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சந்தோசமாக செத்துப்போனவர். (தெலுங்கு ‘ரமணா’வில் சிரஞ்சீவி சாக மறுத்தார்) இத்தனை ரெக்கார்டுகளை வைத்திருக்கும் எங்கள் கேப்டனைத் தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கனு அவர் தெரியாம சொன்ன வார்த்தையைப் பிடிச்சிக்கிட்டு ஓட்டுறது ரொம்ப ஓவர் என்கிறார்கள் கேப்டனின் புரட்சிப் படையினர்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ பேர் வர்றாங்க, போறாங்க... ஆனா ஒரு சிலர் மட்டும்தான் காலங்காலமா மக்களின் மனதில் வாழ்றாங்க. அப்படி ஒரு கலைஞன்தான் டி.ராஜேந்தர். இவர் பெயரைச் சொன்னதும் டண்டணக்காதான் ஞாபகத்துக்கு வரும். அதையும் தாண்டி இவர் என்னென்ன செய்திருக்கிறார் என ரசிகர்கள் வெளியிடும் பட்டியல் பெரிசு, ரொம்பப் பழசு!

யாருடைய உதவியும் இல்லாமல் முன்னணி இயக்குநரானவர், அடுக்குமொழி வசனம், தங்கச்சி சென்டிமென்ட், நெகட்டிவ் க்ளைமாக்ஸ் எனத் தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டையே உருவாக்கியவர். ரஜினி, கமல், விஜயகாந்த் என முப்பெரும் ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த நேரத்தில் தனி ஆளாக ‘ஒரு தலை ராகம்’, ‘என் தங்கை கல்யாணி’, ‘உறவைக் காத்த கிளி’னு மெகா ஹிட் கொடுத்தவர். ரஜினி, கமல் லட்சங்களில் சம்பளம் வாங்கியபோது இவருடைய படங்களுக்குப் பூஜை போட்டவுடன் கோடிகளில் விற்று சாதனை படைத்தவர். இளையராஜா கொடிகட்டிப் பறந்த காலத்திலேயே தன்னுடைய பாடல்களை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கியவர். இன்று உலகமே தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடும் ஏ.ஆர்.ரகுமான்கூட ஆரம்ப காலத்தில் இவரோடு வேலை செய்தவர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை என சினிமாவின் அத்தனை ஏரியாவையும் அலசிக் காயப்போட்டவர், எங்கள் டி.ஆர் என்கிறார்கள் அவரின் கொலைவெறி ரசிகர்கள்.

இன்னும் பத்து வருஷம் கழிச்சு பவர்ஸ்டாரின் சாதனைகள், சாம் ஆண்டர்சனின் சாதனைகள், ராஜகுமாரனின் சாதனைகளும் வெளிவரலாம்!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick