“ஏன்னா, நான் கொடுக்கிற பயிற்சி அப்படி!”

‘பத்து, பதினைந்து வருடங்கள் போராடியும் மாற்ற முடியாத, படிக்காத, ஒழுக்கமில்லாத, உருப்படாத குழந்தைகளை எட்டு மணி நேரத்தில் மாற்றிக்காட்டுகிறோம்!’ என்ற ரீதியில் லோக்கல் சேனல் ஒன்றில் ‘ஸ்க்ரோல்’ ஓடிக்கொண்டிருந்து. அதற்கு ‘தன்னிலை அறியும் பயிற்சி’ என்று பெயராம். சொல்லிக்கொடுப்பவர், சேலத்தைச் சேர்ந்த ராஜேஷ் பாபு. ‘யாருய்யா இவரு? எனக்கே பார்க்கணும்போல இருக்கே?’ என ஆர்வத்தோடு போனைப் போட்டேன்.

“சின்ன வயசுல பெரிய கிரிக்கெட் பிளேயர் ஆகணும்னு ஆசை தம்பி. வெறும் 20,000 ரூபாய் இல்லாததனால மாவட்ட அளவிலான போட்டியில  கலந்துக்க முடியலை. அப்புறம், நல்லா படிச்சுப் பெரிய ஆளா வரணும்னு ஆசை. அப்பாவோட உடல்நிலை சரியில்லாம போயிட்டதனால, வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலை வந்துடுச்சு. பசங்க எல்லாம் ‘காலேஜ் வாழ்க்கையை இழந்துட்டியேடா’னு வசனம் பேசுனாங்க. அப்போ முடிவு பண்ணேன். என்னை மாதிரி, எந்த ஒரு பையனுக்கும் கல்வி கிடைக்காம போயிடக் கூடாது. மக்குப் பசங்களையும் கெத்தா மாத்தணும். பல புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து, ‘தன்னிலை அறியும் பயிற்சி’யை உருவாக்கினேன். 13 வருசம் ஆச்சு. இதுவரை, என்கிட்ட பயிற்சி பெற்ற 3 1/2 லட்சத்துக்கும் அதிகமான பசங்க டாக்டர், இன்ஜினீயர்னு கலக்குறாங்க!’’ என்று ஆரம்பித்த ராஜேஷ்பாபு, தன்னிலை அறியும் பயிற்சியை விளக்கினார்.

‘’மொத்தம் 8 மணி நேரம் பயிற்சி தருவேன் தம்பி. பள்ளிக்கூடத்துக்கு நல்ல பேரு கிடைக்கணும்னு, பெரிய பெரிய ஸ்கூல்ல படிக்கிற பசங்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் கொடுத்து, சுமாரான பசங்களை எக்ஸாமே எழுத விட மாட்டாங்க. ஆனா, எனக்கு சுமாரா படிக்கிற பசங்களும், ஒண்ணுமே படிக்காத பசங்களும்தான் தேவை. குழந்தைங்களைக் குறிப்பிட்ட வயசுக்கு மேலே ஒழுக்கமா வளர்க்கிறதும், நல்லா படிக்கிற பையனா வளர்க்கிறதும் கஷ்டமான காரியம். அதை எட்டு மணி நேரத்துல மாத்திக்காட்டுறதுக்குப் பேருதான், என்னோட தன்னிலை அறியும் பயிற்சி. தவிர, இந்தப் பயிற்சி செஞ்சா, தற்கொலை எண்ணம், பள்ளிப் பருவக் காதல்(!) போதைப் பழக்கத்தையும்கூட தடுக்கலாம்!’ என ஏகத்துக்கும் பில்டப் கொடுத்தவர், தொடர்ந்தார்.

‘‘கோயில் முறை சூத்திரம், தோப்புக் கரணம் மெத்தட், இளம் சூரியன் வழிமுறை, ரிலாக்ஸ் மெத்தட், இமாஜினேஷன், ஆசான் சூத்திரம், செவன் டே ஃபார்முலானு ஏழு வழிமுறைகள்தான் பயிற்சி. அமைதிக்குக் கோயில்முறை சூத்திரம், மூளையைச் சுறுசுறுப்பாக்க தோப்புக்கரணம் மெத்தட், சீக்கிரமா எழுந்திரிக்க இளம் சூரியன் ஃபார்முலா. இப்படி ஏழு பயிற்சியும் தனித்துவமா இருக்கும். இதையெல்லாம் கேட்கும்போதே உங்களுக்கு எரிச்சலா இருக்கும். நேர்ல பயிற்சிக்கு வர்ற பசங்களுக்கு எப்படி இருக்கும்? அதனால, பயிற்சிக்கு வரும்போது அம்மா, அப்பாவையும் கூட்டிக்கிட்டு வரணும்னு ரூல்ஸ் வெச்சிருக்கோம். ஏன்னா, ஒரு குழந்தையைப் படிப்பாளியா, ஒழுக்கமா மாத்துறதுக்கு அவங்களுக்கும் சில பயிற்சிகள் கொடுப்போம். அவங்களுக்கான பயிற்சிகள் முடிஞ்சதும் வெளியே அனுப்பிட்டு, ஒரு அறைக்குள்ள பசங்களைக் கூட்டிக்கிட்டு போயிடுவோம். அதுவரை அம்மா, அப்பா மேல ஈர்ப்பே இல்லாத பசங்க பயிற்சி முடிஞ்சதும்... கதவைத் திறந்துகிட்டு அவங்கவங்க அம்மா, அப்பாவைக் கட்டிப் பிடிச்சுக் கண்ணீர் சிந்துவாங்க (எனக்கே கண்ணீர் வருது பாஸ்!). ஏன்னா, ரூமுக்குள்ள நான் கொடுக்கிற பயிற்சி அப்படி!’’ என்றவர், அடுத்த டாப்பிக்கிற்குத் தாவினார்.

‘‘பயிற்சியில எல்லாமே ‘டாக்-தெரபி’தான் தம்பி. வரும்போது, கத்தியோட வந்து ‘எதிர்காலத்துல நான் பெரிய ரெளடியா வரணும்’னு சொல்ற பசங்க எல்லாம், பயிற்சி முடிஞ்சு போகும்போது கத்தியைக் கீழே போட்டுட்டு, புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பிச்சுடுவாங்க. ஏன்னா, பயிற்சி அப்படி. ‘டாக்-தெரபி’யோட நாம சாப்பிடுற சாப்பாடு எப்படி இருக்கணும்? என்ன உணவுகளைச் சாப்பிடணும்? எப்படிச் சாப்பிடணும்?னு எல்லாம் சொல்லித் தருவோம். பயிற்சிக்குப் பிறகு பரோட்டா, பிராய்லர் கோழி இதெல்லாம் சாப்பிட மாட்டாங்க. கீரையை அதிகமா எடுத்துக்குவாங்க. சாப்பாட்டை நல்லா மென்னு சாப்பிடுவாங்க. ஏன்னா, நான் கொடுக்கிற பயிற்சி அப்படி! ஒவ்வொரு அம்மாவும் பத்து மாசம் சுமந்துதான் குழந்தையைப் பெத்தெடுக்குறாங்க. நாங்க பயிற்சி நடக்கிற ஒவ்வொரு வாரமும் 200 குழந்தைகளைப் புதுசா பெத்துக்கொடுக்கிறதா, எங்க பயிற்சியில கலந்துக்கிட்ட பசங்களோட அம்மாக்கள் சொல்லியிருக்காங்க. இதுதாங்க நமக்கு வேணும்! மத்தபடி, இதுல லாப நோக்கம் எதுவும் கிடையாது. பயிற்சிக்கே ஆளுக்கு 1,500 ரூபாய்தான் வாங்குறோம்னா பார்த்துக்கோங்க!’’ என்று முடித்தார் ராஜேஷ் பாபு.

கடைசி வரியிலேயே தெரியுது உங்க சேவை மனப்பான்மை!

-கே.ஜி.மணிகண்டன், படங்கள்: ரமேஷ் கந்தசாமி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick