டிசைன் டிசைனா டைம்பாஸ்!

ங்களின் பொழுதுபோக்கு என்ன? என யாரேனும் கேட்டால், ‘பாட்டு கேட்பது. புத்தகம் படிப்பது, எரி கோலி விளையாடுவது’ என ஏதேனும் சொல்வோம். ஆனால், இவற்றையும் தாண்டி வித்தியாசமான சில பொழுதுபோக்குகளும் இந்த உலகத்தில் இருக்கின்றன. அவற்றைப் பற்றி ஒரு ஜாலி கேலி ரவுண்டு...

டாய் வாயேஜ்: ஊர் சுத்துனா பொழுதுபோகும்கிறது தெரிஞ்ச விஷயம் தான். ஆனால், தன்னுடைய பொம்மையை ஊர்சுற்றவிட்டு அதை ரசிச்சே பொழுதைப் போக்குறதைக் கேள்விப்பட்டிருக்கீங்களா? பொம்மையை ஊர்விட்டு ஊர், தேசம் விட்டு தேசம், கண்டம்விட்டு கண்டம் சுற்றுலா கூட்டிப் போவதையே சில குழுக்கள் குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் நம் பொம்மையை அனுப்பி வைத்தால் போதும். உலகம் முழுக்க எடுத்துச் சென்று புகைப்படங்கள் எடுத்து, பயணக்குறிப்பும் எழுதி நமக்கு அனுப்பி வைப்பார்கள். அவற்றைப் பார்த்துப் பொழுதைப் போக்கிக்கொள்ள வேண்டியதுதான்.

நாய் க்ரூமிங்: உங்கள் வீட்டில் இருக்கும் நாய்க்கு முடி வெட்டி, மேக்கப் போட்டு அலங்காரம் செய்ய வேண்டும். இதற்கு அதிக காலம் எடுக்கும். அதற்கேற்றார் போல் இதில் நிறையக் காசும் எடுக்கலாம். கையில் வித்தை இருந்தால் ஒரு நிகழ்ச்சிக்கு 30,000 டாலர்கள் வரை சம்பாதிக்கலாம், சீனாவில் இருந்தால்.

எக்ஸ்ட்ரீம் அயர்ன்: இதை ஒரு விளையாட்டாகவே அறிவித்து விட்டார்கள். அதாவது, நீங்கள் உங்கள் துணியை அயர்ன் செய்ய வேண்டும்; அவ்ளோ தான். ஆனால், எங்கு வைத்து அயர்ன் செய்கிறோம் என்பது தான் மேட்டரே. உயரமான மலை மீது ஏறி அதன் விளிம்பில் நின்றபடி,  பனியில் சறுக்கிக்கொண்டே, படகில் மிதந்துகொண்டே, பாராசூட்டில் பறந்துகொண்டே அயர்ன் செய்கிறார்கள். (பறக்காஸ்). இந்த விளையாட்டு இங்கிலாந்தில் ரொம்பவே பிரபலம்.

டிரெயின் சர்ஃப் : டிரெயின் சர்ஃபிங் என்பது ரயிலின் மேற்புறத்திலோ, பக்கவாட்டில் ஜன்னலை பிடித்து தொற்றிக்கொண்டோ பயணம் செய்வது. இது ரொம்பவே ஆபத்தான விஷயம் பாஸ். முயற்சி செய்து முதுகெலும்பை உடைச்சுக்காதீங்க ப்ளீஸ். இது ஜெர்மனி, ரஷ்யா, தென் ஆப்பிரிக்க இளைஞர்களிடையே மிக பிரபலமான ஒன்று. இதில் ஈடுபட்ட பல இளைஞர்கள் இறந்தும் போயிருக்கிறார்கள்.

மூயிங்: இது மாடு சம்பந்தமான பொழுதுபோக்கு. மாடு மாதிரி ‘அம்ம்ம்மா...’னு கத்தியே பொழுதைப் போக்கணும் அவ்ளோதான். அமெரிக்கர்கள் மூயிங் போட்டியும் நடத்துகிறார்கள். கடைசியாக நடந்த போட்டியில் பத்து வயது சிறுவன் ஒருவன் வெற்றி பெற்று 1,000 டாலர் பணமும், தங்கமணியும் பரிசாகப் பெற்றிருக்கிறான். அம்ம்மா... வாழ்த்துக்கள் சொன்னேங்க.

நியூஸ் பாம்பிங்: போட்டோ எடுக்கும் போது உள்ளே புகுந்து கலாய்த்து காமெடி செய்வதற்குப் பெயர் ‘போட்டோ பாம்பிங்’. இதேபோல் செய்தி வாசிப்பாளர்கள் பொது இடங்களில் நின்று ரிப்போர்ட் செய்து கொண்டிருக்கும்போது, கேமரா ஃப்ரேமுக்குள் வந்து கலாய்த்து கவனத்தை ஈர்ப்பதையே ஒரு பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்கள். இவங்களுக்கு இடுப்புல பாம் வைக்கணும்ங்கிறேன்!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick