புதுசா யோசிங்க!

லைமுறை இடைவெளிகள் தாண்டி, டைனோசர் காலத்திலிருந்தே கொஞ்சம்கூட அப்டேட் ஆகாமல் சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கும் இந்தப் பேருலக மக்களைப் பார்த்துப் ‘புதுசா எதுனா சொல்லித் தொலைங்கடா...’ என மனம் வெதும்பி மண்டையச் சொறியவைத்த சில சம்பவங்கள்...

சின்னப்புள்ளைகளுக்குக் கதை சொல்லுங்கடானா “ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டு வித்துக்கிட்டு இருந்துச்சாம். அந்த வடையை ஒரு காக்கா தூக்கிட்டுப் போச்சாம்” என பாட்டி சுட்ட வடையையே எத்தனை தலைமுறைக்கு சுட்டுக்கிட்டு இருப்பீங்க? வடை சுட்ட பாட்டியும் செத்துப் போயிருக்கும். அதை சுட்டுட்டுப் போன காக்காவும் செத்துப்போயிருக்கும். ஒரு கதைக்காக காக்காவோட வம்சத்துக்கே திருட்டுப் பட்டம் கட்டுறீங்களே... இது நாயமாரே? அட்லீஸ்ட் அந்த வடையையாவது பஜ்ஜி, போண்டானு மாத்திப் ப்ரொமோஷன் கொடுங்கவே.

‘அரசபுரிங்கிற நாட்டை மன்னர் அரசவர்மன் ஆண்டுவந்தார்’ங்கிற மாதிரி கதைகளை ஆரம்பிக்கிறதே ஒரு ட்ரெண்டா வெச்சுக்கிறது. அதுலே எதுகை மோனை வேற. எங்க தாத்தா சின்னப்புள்ளையா இருக்கும்போதும் இதே கதையை வேற பேர்ல சொன்னீங்களேய்யா... படத்தை காப்பியடிச்சா மட்டும் கத்துறீங்களே. இது மட்டும் இன்னாவாம்?

  2000-த்துலே இந்த உலகம் அழிஞ்சுரும்ன்னாய்ங்க. அது நடக்கலைன்னதும் 2012-லே அழிஞ்சிரும்ன்னாய்ங்க. அப்பவும் அழியலேன்னதும் அடுத்து 2020-னு ஃபிக்ஸ் பண்ணிருக்காய்ங்க. ஏன்டா... உருப்படுறதுக்கு ஆயிரம் வழி இருக்கும்போது உலகத்துக்கு டெத் சர்ட்டிஃபிகேட் வாங்க இப்படித் துடியாத் துடிக்கிறதெல்லாம் நல்லாவா இருக்கு?

“நாங்கள்லாம் அந்தக் காலத்துலே தெருவிளக்கு வெளிச்சத்துல உட்கார்ந்துதான் படிச்சோம். கஷ்டப்பட்டுப் படிச்சாதானே படிப்போட அருமை புரியும்” எனச் சாப்பிடும்போது டெரர் வயலின் வாசித்து வெறுப்பேற்றும் அப்பாக்களைப் பார்த்து “ஓ... அதுதான் நீங்க படிச்சு மைக்ரோசாஃப்ட்டுக்குப் போட்டியா கம்பெனி ஆரம்பிச்சுட்டீங்களாக்கும்?” எனக் கேட்கத் தோன்றும். பட், சோறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்.

திருவிழாவுக்குக் கூட்டிட்டுப் போய் கிலுகிலுப்பை, பீப்பி வாங்கித் தர்றதும் இதே டைப்புதான். இந்தக் கம்ப்யூட்டர் யுகத்திலும் இன்னும் கிலுகிலுப்பையவே வெச்சு ஆட்டிக்கிட்டு இருந்தா எப்படி மம்மீஸ்? ஒரு வீடியோ கேம் அளவுக்காச்சும் யோசிக்கலாமே?

இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த  பட்டியலில் விஜய் டி.வி-யில் ‘கும்கி’ படம் போடுறதையும் சேர்க்கும் தூரம் தொலைவில் இல்லை. போனவாரம்தானேய்யா படுத்துனீங்க. மறுபடியுமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்