சீன் போடுறாங்க!

வாசகர் திருவிழாவான சென்னை புத்தகக் கண்காட்சி அமோகமா நடந்து முடிஞ்சிருச்சு. கேன்டீன் பக்கம்தான் இந்தத் தடவையும் கூட்டம் அதிகம்னு புருடா செய்தி நிறுவனம் கணிச்சிருக்கு. சின்சியராப் புத்தகம் தேடி வாங்குறவங்களுக்கு மத்தியில் சீன் போடுறதுக்காகவே புக் வாங்குற கூட்டமும் இருக்கத்தான் செய்யுது. இந்த மேட்டர் உளவுத்துறை அளவுக்கு வொர்த் இல்லாட்டியும், அப்படி இவங்க புக்ஸ் வாங்கினதுக்கு அப்புறம் என்னதான் பண்றாங்கனு பார்த்தா...

புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்னு பட்டியல் போடுறது ஒரு கோஷ்டினா, அதெல்லாம் யாருப்பா உட்கார்ந்து டைப் பண்றதுனு புக் எல்லாத்தையும் தரையோட தரையா வெச்சு, சேர்ந்தாப்ல மல்லாக்கப் படுத்து செல்ஃபி எடுத்துப்போட்டு டரியல் ஆக்குறவங்க இன்னொரு டைப்.

குலுக்கல் முறையில் ஒரு பெரிய புக்கை கையில் எடுத்து ஆழ்ந்து அதை வாசிக்கிற மாதிரி போட்டோ புடிச்சு ஃபேஸ்புக் ப்ரொஃபைலா மாற்றலைனா, தெய்வக்குத்தமாகிடும்.

தட்டினா தும்மல் வர்ற அளவுக்கு இருக்கிற கவிதைத் தொகுப்பைக் குத்துமதிப்பா புரட்டி ‘அன்பே நீ முத்த வங்கி. நான் முத்த வாங்கி’னு கண்ல படுற உன்னதமான கவிதை வரியை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸா வெச்சு ஃபீலிங்க்ஸ் காட்டுவாங்க.

பின் நவீனத்துவம்கிறது லேட்டஸ்ட் பின் தயாரிக்கிற டெக்னாலஜி பற்றிய புக்குனு தாறுமாறா விளக்கம் தருவாங்க. பெண்ணியத்துக்கு இவங்க சொல்ற விளக்கத்தைப் பதிவு பண்ணினா, சோசியல் மீடியாவில் பெரிய எரிமலையே வெடிக்கும்.

இல்லாத ஊருக்கு ஹெலிகாப்டர்ல போய் இறங்கின கதையா இவங்ககிட்ட புக் விமர்சனம் எழுதுங்களேனு சிலர் அன்புக்கட்டளை விடுப்பாங்க. புக் ஏற்படுத்திய பாதிப்பு குறைஞ்சதும் கண்டிப்பா விமர்சனம் எழுதுறேன்னு நாசூக்கா எஸ்கேப் ஆவாங்க.

தற்போது வாசிப்பது ‘இடி அமீன் முதல் இடியாப்பம் வரை’ புத்தகம்னு போட்டு நமது நெஞ்சில் மெகாவாட் கரன்ட் பாய்ச்சுவார்கள்.

அடுத்த சில மாசத்துல வர்ற பிறந்தநாள், கல்யாணம், அவ்வளவு ஏன்... குழந்தை காதுகுத்து நிகழ்ச்சிக்குக்கூட வாங்கின புக்லேர்ந்து ஒண்ணைத் தூக்கிட்டுப்போய் கிஃப்ட்டா தருவாங்க.

இந்த வருச வாசிப்புலேயே பெஸ்ட்னா, அது இந்தப் புத்தகம்தான்னு கண்டிப்பா ஒரு போஸ்ட் போடுவாங்க. இதில் தொழில் ரகசியம் என்னன்னா, இந்த வருசத்துல அவங்க படிச்சதே அந்த ஒரு புக்காதான் இருக்கும்.

இதையெல்லாம் தாண்டி அடுத்த வருட புத்தகக் கண்காட்சி ஆரம்பிக்கிறதுக்குள்ள ‘எனது டாப் 50 புத்தகங்கள்’ லிஸ்ட் போடுவாங்க. அதுக்குள்ள நாம ஊரைக் காலி பண்ணிட்டுப் போய்டணும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்