பறவைகளைத் தேடி...

ஃபேஸ்புக்கில் தினம்தினம் நமக்கு அறிமுகமில்லாத பல பறவைகளின் புகைப்படங்களைப் பதிவேற்றி அவற்றைப் பற்றிய தகவல்களையும் தருகிறார் அரவிந்த் அமிர்தராஜ். இந்தப் பறவைகளின் காதலரைத் தொலைபேசியில் பிடித்தேன்.

‘‘மன்னார்குடிப் பக்கம் காவிரியாற்றின் கிளைநதி பாயும் வடபாதி தான் என் சொந்த ஊர். இப்போ மனைவியோடு சென்னையில் செட்டில் ஆகியாச்சு. பறவைகள் மீதான காதல் இயற்கையாகவே எனக்குள்ள இருந்துச்சு. பறவைகளுக்கு சாப்பாடு, தண்ணி வைக்கிறதுனு இயற்கை மேல நேசம் இருந்தாலும் முன்பெல்லாம் புகைப்படம் எடுக்கிற மாதிரி ஐடியா இல்லை.

சில ப்ரொஃபஷனல் போட்டோகிராஃபர்கள், பறவைகள், விலங்குகள்னு இயற்கையை அழகழகாப் படம் பிடிச்சு சமூக வலைதளங்கள்ல பதிவேற்றுவாங்க. அவை எல்லாமே பச்சைக்கிளி, சிட்டுக்குருவி மாதிரி நமக்குத் தெரிஞ்சதாகவே இருக்கும். தமிழ்நாட்டுல மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட பறவை வகைகள் இருக்கிறதாம். ஆனா, நமக்குத் தெரிஞ்சது இதில் கொஞ்சம்தான். நமக்குப் பரிச்சயமில்லாத பறவைகளைப் படம்பிடிச்சு இதே சமூக வலைதளத்துல பதிஞ்சு பலருக்குத் தெரியப்படுத்தினா என்னன்னு தோனிச்சு. கடந்த வருசம் அக்டோபரில் ஒரு கேமரா வாங்கினேன். அதிலேர்ந்து பறவைகளுக்கான என் தேடல் தொடருது.

எப்படி விதம்விதமான பறவைகளைப் பார்க்கிறதுனு ஆரம்பத்துல தெரியலை. பறவைகளைக் கண்காணிக்கிற கணேஷ்வர் எனும் நண்பர் ‘பு ஆஃப் இண்டியன் பேர்ட்ஸ்’ அப்படிங்கிற ஒரு புத்தகத்தைப் பரிந்துரைச்சார். அதிலே இருந்த தகவல்களை வெச்சுப் பல பறவைகளின் வாழிடங்கள், வசிக்கும் சூழல் போன்றவற்றைக் கண்டறிஞ்சு தேட ஆரம்பிச்சேன். இதுவரை 282 பறவை இனங்களைப் பற்றிய தகவல்களோட புகைப்படம் எடுத்து ebird.org என்னும் சர்வதேசத் தளத்துல பதிவு பண்ணிருக்கேன். பறவைகளைத் தேடுறது ஒண்ணும் சுலபமான விஷயமில்லை. அவைகளின் இருப்பிடம் எந்த மாதிரினு தெரிஞ்சுக்கிட்டுப் போகணும். தரைமட்டத்துக்கு மேலே 3,000 அடி உயரத்துலதான் சில பறவைகள் வசிக்கும். அப்படியே இருந்தாலும் நாம போற நேரத்துக்கு அவை அங்கே இருக்கணும். இப்படி ஏமாந்துபோன நிகழ்ச்சிகள் நிறைய இருக்கு.

பறவைகள் மீதான காதல் கொஞ்சம் அதிகமாவே இருக்கிறதாலே எனக்கு எதுவுமே பெருசாத் தெரியலை. எவ்வளவு தேடிக் களைச்சுப்போய் இருக்கும்போதும் புதுசா ஒரு பறவையைப் பார்த்தா, புத்துணர்ச்சி அடைஞ்சுருவேன். சில பறவைகளைப் படம்பிடிக்க ரொம்பநாள் காத்திருக்க வேண்டியிருக்கும். சில வித்தியாசமான பறவைகளைப் படம் எடுத்தாலும் அந்தந்த வட்டாரப் பெயர் இருக்கிறதனால பெயர் கண்டுபிடிக்க முடியாது. உதாரணமாகத் தவிட்டுக்குருவிக்கே மஞ்சள் சிலம்பன், சருகுண்ணிப்பறவைனு வேற வேற பெயர்கள் இருக்கும். வெறும் புகைப்படம் எடுக்கிறது மட்டும் சிலருக்குப் பொழுதுபோக்காக இருக்கும். என்னை மாதிரி தகவல்களைத் திரட்டிட்டே புகைப்படம் எடுக்கிறவங்க தமிழ்நாட்டுல ரொம்பக் குறைவுதான். அந்த வகையில் பறவைகளைப் பற்றிப் பலர் அறிவதற்கு நாம காரணமா இருக்கோம்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு. இதற்காகத் தினமும் விடிவதற்கு முன்பாகவே பறவைகளைத் தேடிப் புறப்படுவேன்.

சாதாரணமா ஒரு பறவையைப் பார்த்ததும் புகைப்படத்தை எடுத்துட்டுப் போறதுக்கு நிறையப் பேர் இருக்காங்க. அதோட உணவு, நிறமாற்றம், எல்லாம் தெரிஞ்சுக்க பலமணி நேரம் காத்திருக்கேன். ஒரு மீன்கொத்தி, மீனைக் கவ்விப் பிடிக்கிறதையோ, ஒரு அக்காக்குயில் கம்பளிப்பூச்சியைப் பிடிக்கிறதையோ படம் பிடிக்கணும்னா, அதே லாவகத்தை நாமளும் கையாளணும். எதிர்காலத்தில், நம்மில் பலருக்குப் பரிச்சயமில்லாத பறவைகளைப் பற்றிய தகவல்களைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு ஆசை. அதுவரை அவைகளைத் தேடிக்கொண்டே இருப்பேன்’’ எனப் பறவைகள் மீதான காதலில் கசிந்தபடி முடிக்கிறார்.

- விக்கி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick