ஃபுட்பால் காய்ச்சல்!

கோபா அமெரிக்கா மற்றும் யூரோ கால்பந்துத் தொடர்களால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் தற்போது கால்பந்து ஜூரம் பிடித்துள்ளது. காலம் காலமாக கால்பந்து பார்த்துவரும் ரசிகர்கள் கூட ட்விட்டர், ஃபேஸ்புக்கில் அம்பியாய் வலம் வருவார்கள். ஆனால் இதையெல்லாம் பார்த்து ‘ஓ ஃபுட்பால்ங்கிறது ஸ்போர்ட்ஸா’ எனக் களத்தில் குதித்துள்ள ‘திடீர்’ ரசிகர்கள் செய்யும் அடாவடிகளால் சோஷியல் மீடியாவே ரணகளமாகிப் போயுள்ளது. இத்தனை நாளா அதை வெளிப்படுத்தலைனு இவங்க பண்ற அலப்பரைகள் கொஞ்ச நஞ்சமல்ல!

முதல் கோல் விழும்வரைக்கும் எந்த டீம், எந்த கலர் ஜெர்சியில் விளையாடுதுனே தெரியாமல் குழப்பத்திலேயே மேட்சைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். விபரம் தெரியாமல் ஆரம்பத்தில் எதிரணிக்கு சப்போர்ட் செய்துவிட்டு, கோல் போட்டபின்புதான் ‘இவ்வளவு நேரம் திருட்டுப்பயகூடவா சகவாசம் வெச்சுருந்தோம்’ எனத் தெளிவடைவார்கள். சரி இந்த கலர்தான் இந்த டீம்னு மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணி வெச்சா, அடுத்த கேம்ல அதே டீம் வேற கலர் ஜெர்சியில் வந்து குழப்பும். ‘அவே கலர்’ டீசர்ட் இருக்கிற விஷயமே அப்புறமா விசாரிச்ச பிறகுதான் தெரியும்.

திடீர் ரசிகர்களுக்கு வரும் இன்னொரு மிகப்பெரிய குழப்பம், ஃபுட்பாலுக்கு எதுக்கு டாஸ்? அதாவது காருக்கு எதுக்கு அச்சாணி? கிரிக்கெட்ல டாஸ் போடுறது பேட்டிங், பெளலிங் தேர்ந்தெடுக்க... ஆனா ஃபுட்பாலைப் பொறுத்தவரை மாற்றி மாற்றி ரெண்டு பக்கமும் ஒடப்போறாங்க. இதுக்கெதுக்கு டாஸ்? நியாயமான கேள்விதானே!

ஃபுட்பால் ரசிகரா ஃபார்ம் ஆகிறவங்க செய்யும் அலப்பரையில் பொறுத்துக்கவே முடியாதது என்னன்னா... எங்கேயாவது விமர்சனம் படிச்சுட்டு, ‘இந்த மேட்ச்ல இந்த டீம் ஜெயிக்கத்தான் அதிக வாய்ப்பு. ஜக்கம்மா சொல்றா’ ரேஞ்சுக்கு ஜோசியம் பார்க்கக் கிளம்பிடுவாங்க. அதிலும் சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், நான் சொன்னது நடக்கலைனா, இனி சோஷியல் மீடியா பக்கமே வரலைனு சீன் போடுவாங்க. பெரிய கலெக்டர் வேலை. ரிசைன் பண்ணிட்டுப் போறாருனு நமக்கு கவுண்டர் வாய்ஸ் மனதில் ஓடும்!

ரெண்டு சீனியர் ரசிகருங்க பேசுறதைக் கேட்டுட்டு, அடுத்த ஃபுட்பால் மேட்ச்ல அது எல்லாத்தையும் ‘அன்பே சிவம்’ சந்தானபாரதி மாடர்ன் ஆர்ட் ஓவியத்தை நாசருக்கு விளக்கிட்டு ‘நானே உத்து உத்துப் பார்த்துக் கண்டுபிடிச்சேன்’னு சொல்றது மாதிரி, தன்னோட சொந்தக்கருத்தா நைஸா எடுத்துவிடுவாங்க!

இன்னும் சிலர் ஃபுட்பால் முடியறவரைக்கும் ஆன்லைன்ல உள்ள பசங்ககிட்ட தப்பித்தவறியும் பேசிடக் கூடாதுங்கிற கொள்கையோட இருப்பாங்க. ‘ஹே நைஸ் கோல்யா’ என்று சீன் போடும் ஃபிகருங்க ப்ரொஃபைலில் குத்தவெச்சு உட்கார்ந்து கமென்ட் போடும் பசங்களைப் பார்க்கும்போது ‘இந்த வீட்ல மீச வெச்ச ஆம்பளைங்க 28 பேரு இருக்கோம். ஆனா எப்போ பாரு பொண்ணுங்க கூடத்தான் நீ பேசிட்ருக்க’னு சந்தானம் மாதிரி திட்டத் தோணும். ஆனா எங்கே ஃபிகர் கோச்சுக்குமோனு பயந்து இதை கமென்ட்டா போட மாட்டோம்!

கோலுக்குப் போற பந்தை கோல்கீப்பர் தடுத்துட்டா, உடனே ‘வெல் கீப்பிங்’ என ட்வீட் பறக்கும். சீனியர் ரசிகர்கள் அதுக்குப் பேர் ‘சேவ்’ எனத் தலையில் அடித்துக்கொள்வார்கள். சில நேரம் வெளியே போகிற வேலை வந்துட்டா, டைம்லைன் பார்த்தே ‘திடீர் ரசிகர்கள்’ சீன் போடுவார்கள். சமயத்தில் நெட்வொர்க் காலை வாரிவிட, கவுண்டமணி தியேட்டர்ல தனியா கை தட்டுற மாதிரி ஆகிடும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்