இந்தக் காலமும் அந்தக் காலம்தான்!

‘கவிதையைப் பெற்றுக்கொண்டு, தந்தங்கள் பரிசளிப்போம்’னு பாரதி பாடியிருக்கார். பாரதி மட்டுமில்லை... நம்ம மக்களும் பணம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் பண்டமாற்று முறையைக் கடைப்பிடிச்சிருக்காங்க. அந்தப் பழக்கம் இன்னும் நம்ம ஜீன்ல உருகிக் கரைந்திருக்கிற காரணத்தினால்தான், கீழ்க்கண்ட சேட்டைகளை எல்லாம் செவ்வனே செய்திருக்கிறோம். ரீவைண்ட் ப்ளீஸ்!

எதிர் வீட்டிலோ, பக்கத்து வீட்டிலோ கால் கடுக்கக் காத்திருந்து காபி பொடி வாங்குவோம். அவங்களோட மெயின்டெயின் பண்ற நம் நல்லுறவைப் பொறுத்து, அது டம்ளர் அளவுக்கு இருக்கலாம். ஸ்பூன் அளவுக்கு இருக்கலாம். ஆனா, திருப்பிக் கொடுக்கும்போது கொஞ்சம் எக்ஸ்ட்ரா பொடியைக் கொடுத்து, அடுத்த வார கைமாத்துக்குப் பொடி போடுவோம்!

ரேஷன் கடையில் நேரத்துக்கு சீனி போடலைனாலுமே ‘டம்ளர்’ கணக்குதான். ஆத்திர அவசரத்துக்கு ஒரு டம்ளர் சீனியை வாங்கிட்டு, தேவைப்படாத ரவை, கோதுமையைத் திருப்பிக் கொடுப்பாங்க. நல்லா ஒட்டி உறவாடுற பக்கிகளா இருந்தா, கிலோ கணக்கில் கோதுமையும், ரவையும் பண்டமாற்றில் டிரான்ஸ்ஃபர் செய்யப்படும்!

அந்தக் காலத்துக் கதையை விடுங்க. ஒண்ணாந்தேதி சம்பளம் வாங்குறவன், அஞ்சாம் தேதி சம்பளம் வாங்குறவனுக்கு ட்ரீட் வைப்பான். பதிலுக்கு? ஆறாம் தேதி அவனுக்கு சைடு டிஷ்ஷுக்கும் சேர்த்து பணத்தை ஏத்துக்கணும். பீர் மட்டுமே குடிக்கிறவன் நிலைமைதான் ரொம்ப மோசம். பின்னே? ஒரு பீருக்குப் பதிலா ஃபாரீன் சரக்கு கேட்பாய்ங்களே!

வேலைக்குப் போகும்போது இப்படினா, படிக்கும்போது அப்படி. பிராக்டிகல் நோட்டுக்குப் படம் வரைஞ்சுக் கொடுக்கிறவனுக்குப் பன்னும், டீயும் ஒரு வார காலத்துக்கு இலவசமா கிடைக்கும். கோனார் தமிழ் நோட்ஸை ஒருத்தனும், கணக்கு நோட்ஸை இன்னொருத்தனும் வாங்கி அடிக்கடி மாத்திப்பாங்க. ரெண்டுமே வாங்காதவன், நோட்ஸ் வெச்சிருக்கிற ரெண்டுபேருக்கும் மொட்டைமாடியில் படிக்கிறதுக்கு இடம் கொடுப்பான்!

சினிமா தீர்க்கதரிசிகள் பற்றிச் சொல்லவா வேணும்? ஹார்ட் டிஸ்க் கை மாறும். சி.டி-கள் கவர் மாறும். பென் டிரைவ் இடம் மாறும். மொத்தத்துல, ஒவ்வொருத்தர்கிட்டேயும் இருக்கிற படங்கள் சுற்றிலேயே இருக்கும்!

அட, ஆபீஸ்ல சாப்பிடும்போது என்னாங்குறீங்க? வெறும் சோத்தைக் கொண்டுவந்து குழம்பை வாங்கினவன் மானஸ்தனா இருந்தா, அடுத்தநாள் ஆம்லேட் போட்டுக் கொண்டு வருவான். கொண்டு வரணும்!

பேச்சுலர் பசங்க அட்ராசிட்டிக்குதான் அளவே இருக்காது. புத்தம் புதுசா வாங்கின டி-ஷர்ட் டைட்டா போனால், அடுத்தவன் பேன்ட்டை உருவிக்கிட்டு டி-ஷர்ட்டைக் கொடுத்துடுவாங்க. ‘கிச்சனை நான் கிளீன் பண்றேன். பாத்ரூமை நீ பார்த்துக்க’னு சொல்றவன்தான், அடுத்த வாரம் பாத்ரூமைப் பார்த்துக்கணும்!

நம்ம அரசியல்வாதிகளை எடுத்துக்கோங்க. ஓட்டுக்குக் காசு கொடுக்கிறாங்க. நாட்டுக்கு நல்லது பண்ண, மக்களுக்கு, தொகுதிக்கு நல்லது பண்ண இவனுக காசு கொடுத்துக் கஷ்டப்படுறாங்களே... பாஸ்! ஏன், பண்டமாற்று முறையேதான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்