இது பெருமையா, கடமையா?

‘நாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம். அனைவரும் இணைந்து இன்னும் பல சாதனைகளைச் செய்வோம்’னு பாடப்புத்தகத்தைத் திறந்ததும் படிச்சிருப்போம். எந்த எந்தச் சூழல்ல ‘நாம் இந்தியர்’ என்பதைப் பெருமிதமாக உணர்கிறோம்னு ஒரு ஜாலி ஆராய்ச்சியில் இறங்கினேன். மகிழ்ச்சி ஒரு பக்கம், மரணபயம் ஒரு பக்கமும் படுத்துது!

சென்னைக்கு வேலைக்கு வந்தா, கையேந்தி பவனில் என்ன கிடைக்கும்? வருடத்துக்கும் லெமன் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்ங்கிற ‘சாபூத்ரீ’ வகை சாப்பாடுதான்னு கண்ணைக் கசக்கின சமயத்துல ‘ஆலு பரோட்டா’, ‘பானி பூரி’, ‘பிரட் ஆம்லேட்’னு அறிமுகப்படுத்தி நெகிழவெச்சதை நினைச்சுப் பாருங்க. பெருமிதத்துல நெஞ்சு தானா நிமிரும்!

இன்னைக்கு வரைக்கும் அரசாங்கம் கொடுக்கிற அத்தனை கார்டுகளிலும் நம்ம முகத்தைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டுக்கிட்டு இருக்கிற சூழ்நிலையில் ‘டிஜிட்டல் இந்தியா’னு திட்டம் அறிவிக்கிற கெத்தைப் பார்க்கும்போது ‘நாம் இந்தியர்’னு கட்டாயம் பெருமிதப்பட்டே ஆகணும்!

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டினு அறிவிச்சாலே வந்துடும். போட்டியிலும் ஜெயிச்சா, சொல்லவா வேணும்? ‘இந்தியா... இது இதயத்துடிப்புள்ள தேசம்’ பாட்டுதான்!

காலம் காலமா கால் கடுக்கக் காத்திருந்து, காலை உணவாக இட்லி, பூரி, பொங்கல்னு சாப்பிட்ட ஒரு சமூகம்தான், இன்னைக்கு ஐந்தே நிமிடத்துல நூடுல்ஸ் செஞ்சு சாப்பிடுறதை நினைச்சா, பெருத்த பெருமிதமால்ல இருக்கு?

கிறிஸ்துமஸுக்கு கேக், ரம்ஜானுக்கு நோன்புக் கஞ்சி, குர்பானினு பரிமாறிக்கிற உங்க பாசத்தைப் பார்த்து கண்ணு வேர்க்குது. நாக்கு ஏங்குது!

வேற நாட்டுல இருக்கிற குப்பைகளையெல்லாம் காசு கொடுத்து வாங்கி இந்தியாவுல கொட்டிக்கிட்டாலும், மோடீஜி ‘கிளீன் இந்தியா’னு துடைப்பத்தைத் தூக்கும்போதும், அதுக்கு கமல்ஹாசனே ‘ஆஸம்’னு ஆமோதிக்கும் போதும்... இந்தியன்டா!

சைட் அடிச்சா செருப்பைத் தூக்குறது ஊர்க்கார பொண்ணுங்கதான். கண்டுக்குதோ, இல்லையோ...மற்ற மாநிலத்துப் பொண்ணுங்களை சைட் அடிக்கும்போது செய்கூலி, சேதாரம் எதுவுமில்லைனு நினைக்கும்போது பெருமிதத்துல கன்னம் குலுங்கும்!

நம்ம ஊரை விடுங்க. இந்திக்காரன் ஏரியாவுக்குள்ள புகுந்துட்டா கிலிக்கி மொழி பேசின எஃபெக்ட் கிடைக்குமே? அதுக்குதான் நாட்டுல ஓடுற அத்தனை டிரெயினும் இந்த ஊர்ல இருந்து, இந்த ஊருக்குப் போகுதுங்கிற தகவலைத் தமிழ், இங்கிலீஷோட ‘ஜானேவாலி அக்லிக்ஹாடி...’னு இந்தியிலும் சொல்லிக்கொடுத்து மனப்பாடம் பண்ணவைக்கிற ரயில்வேயோட பொறுப்பு உணர்வை நினைக்கும்போது, இந்நேரம் பெருமிதம் வந்திருக்கணும்!

ஆயிரம்தான் இருந்தாலும், ஜீரோவைக் கண்டுபிடிச்சது நாமதான்னு சொல்லிப்பாருங்களேன். இந்தியர் இல்லைனா, கணக்கே இல்லை!

காதலன், காதலி பெயருக்கு அம்பு போட்டு ஹார்ட் வரைஞ்ச தஞ்சாவூர் கோயில் தூணைத்தான் ‘இட்ஸ் அமேஸிங்’னு வெள்ளைக்காரன் போட்டோ எடுத்துக்கிறான். அந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்துட்டுப் பெருமிதப்படாம இருந்தா நல்லாவா இருக்கும்!

பக்கத்து வீட்டுக்காரன் நம்மளை நம்பி பத்து ரூபாய் கொடுப்பானா? முக்குல கடைவெச்ச கேரளத்து சேட்டன்கிட்ட ஆயிரெத்தெட்டு ரூபாய் அக்கவுன்ட். இங்கேதான் பெருமிதப்படுறேன், ‘நாம் இந்தியர்’னு!

இது மட்டுமா? அடிக்கடி தாயின் மணிக்கொடியைத் தூக்கும் அர்ஜூனைப் பார்க்கும்போதெல்லாம் ஆட்டோமேட்டிக்கா ‘இந்தியர்’ங்கிற பெருமிதம் வந்துடும். விஜயகாந்த் விரட்டி விரட்டி தீவிரவாதிகளை அடிக்கும்போதும் அப்படி ஒரு பெருமிதம் வரும். ஏன், நம்ம மோடி உலகம் பூரா சுத்திக்கிட்டு இருக்கிறதே இந்தியாவுக்குப் பெருமிதம்தான்னு சொல்றாங்க

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்