நான் வாங்கிய பல்பு!

‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் மூலம் திரும்பிப் பார்க்கவைத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். ‘ஒருநாள் கூத்து’ படம் மூலம் திரும்பவும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். ஒருநாள் காலையில் அவர் வீட்டு காலிங்பெல்லை அடித்து காபி சாப்பிட்டுக்கொண்டே பேசியதில்...

‘‘ ‘அடியே அழகே...’ பாட்டை எப்படி பாஸ் பிடிச்சீங்க?’’

‘‘ ‘அடியே அழகே...’ பாடல் வேற ஒரு படத்துக்காக கிராமியப் பாடல் மெட்டில் பண்ணினது. ஆனால், அந்தப் படத்தில் இந்த பாட்டைப் பயன்படுத்த முடியாம போயிடுச்சு. ‘ஒருநாள் கூத்து’ படத்துக்கு வேற ட்யூனுக்குதான் முயற்சி பண்ணிட்டு இருந்தோம். அப்போ படத்தின் இயக்குநர் நெல்சன் ‘அடியே அழகே...’ ட்யூனைக் கேட்டார். கேட்டதும் அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ‘சிச்சுவேஷனுக்கு இந்த ட்யூன்தான் செமையா இருக்கும், கிராமிய மெட்டில் இருப்பதைக் கொஞ்சம் ஸ்டைல் மாத்திப் பண்ணிடுவோம்’னு சொன்னார். இப்படித்தான் ‘ஒருநாள் கூத்து’ படத்துக்குள்ள ‘அடியே அழகே...’ நுழைஞ்சது. அதன் பிறகு பாடலாசிரியர் விவேக்கும் பாடகர் ஷான் ரோல்டனும் சேர்ந்து பாட்டை வேற லெவலுக்குக் கொண்டு போயிட்டாங்க.’’

‘‘நிறைய இசையமைப்பாளர் வந்துட்டாங்க. பலர் நன்றாகவே இசையமைக்கிறாங்க. இவங்க மத்தியில் உங்க தனித்துவம் என்ன?’’

‘‘இப்போ இருக்கிற இசையமைப்பாளர்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஸ்டைல் அமைஞ்சுடுச்சு. எல்லோருக்குமே இடம் கிடைக்கத்தான் செய்யுது. முக்கியமா, நிறைய இசையமைப்பாளர்கள் இருப்பதாலேயே மக்கள் வெரைட்டியான பாடல்களைக் கேட்க முடியுது. ஓர் இசையமைப்பாளரின் ஆல்பம் சக்ஸஸ் ஆகுதுனா அதுக்கு இயக்குநரும் ஒரு முக்கியமான காரணம். ஏன்னா, அவர்தான் நல்ல ட்யூன்களைத் தேர்வு பண்றது.’’

‘‘படத்துக்கு கண்டிப்பா பாடல் தேவையா?’’

‘‘கண்டிப்பா தமிழ் சினிமாவுக்குப் பாட்டு வேணும். அந்தக் காலத்தில் நம் ஊர் நாடகங்களில் பாட்டுதான் கதை சொல்லுச்சு. படத்துக்குப் பாட்டு வேணும்கிற மைண்ட் செட்டில் இருந்து நம் மக்களும் முழுசா வெளியே வரலை. என்னைப் பொறுத்தவரை பாடல்கள் திணிக்கப்படக் கூடாது. ‘பிதாமகன்’ படத்தில் வர்ற ‘இளங்காத்து வீசுதே...’ பாட்டே விக்ரம் - சூர்யா கதாபாத்திரங்களுக்கு இடையில் உள்ள நட்பை அவ்வளவு எளிமையா விளக்கிட்டுப் போயிடும். அந்த மாதிரியான பாடல்கள் படத்துக்கு ஓ.கே.’’

‘‘மியூஸிக் டைரக்டர் ஆனதுக்குப் பிறகு வாங்கின பல்பு ஏதாவது...’’

‘‘1000 வாட்ஸ் பல்பே இருக்கு. ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்துக்கு ‘காதல் வந்தாச்சோ...’ பாட்டைப் பாடகி பிரசாந்தினி பாடினாங்க. ரெக்கார்டிங்கின்போது நான்தான் மியூஸிக் டைரக்டர்னு அவங்களுக்குத் தெரியலை. அப்போ இன்னும் ஒல்லியா இருப்பேன். அதனால், என்னை  மியூஸிக் டைரக்டரோட அசிஸ்டென்ட்னு நினைச்சுட்டாங்க போல. ஏதாவது பேசும்போது ‘சார்கிட்ட சொல்லிடுங்க, சார்கிட்ட சொல்லிடுங்க...’னு சொல்லிட்டு இருந்தாங்க. ரெக்கார்டிங் எல்லாம் முடிஞ்சு சில நாள் கழிச்சு ‘மியூஸிக் டைரக்டர் சார்கிட்ட சொல்லிடுங்க...’னு எனக்கு மெசேஜ் பண்ணாங்க. பதிலுக்கு ‘நான்தான் மேடம் மியூஸிக் டைரக்டர்’னு சொன்னதும் ஷாக் ஆகி, ஸாரி சொன்னாங்க. சரி ப்ரோ, இந்த விசயத்துல உண்மையாவே பல்பு வாங்கினது நானா? அவங்களா?’’

‘‘அடுத்த ப்ராஜெக்ட்?’’

‘‘ ‘திருடன் போலீஸ்’ படத்தின் இயக்குநர் கார்த்திக் ராஜூவின் அடுத்த படமான ‘உள்குத்து’. இந்தப் படத்தில் தினேஷ் ஹீரோவா நடிக்கிறார். அப்புறம்  கலையரசன், பிரசன்னா சேர்ந்து நடிக்கிற இன்னொரு படம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்