ஆடிப் போயிடுவீங்க ஆடி!

‘நாம் ஒருவரை ஏமாற்ற நினைத்தால் அவர்களிடம் கருணையை எதிர்பார்க்கக் கூடாது. அவர்கள் ஆசையைத் தூண்ட வேண்டும்’னு காந்தி பாபுங்கிற மகான் ‘சதுரங்க வேட்டை’ படத்தில் சொல்லியிருக்கார். இது எதுக்குப் பொருந்துதோ இல்லையோ... பல கடைகளோட ஆடித்தள்ளுபடி ஆஃபர்களுக்குப் பொருந்தும்.

4,000 ரூவாய்க்கு துணிமணிகளை அள்ளிப்போட்டு வாசலுக்கு வந்தா, அஞ்சாயிரத்துக்கு அதிகமா துணி எடுத்தாதான் கட்டைப்பைனு கண்டிசனா சொல்வாங்க. ஆனா அவங்க தர்ற பிளாஸ்டிக் கவர்ல ‘வாடிக்கையாளரின் திருப்தியே எங்களது தாரக மந்திரம்’னு எழுதியிருக்கும். ஆஹான்!

ஒரு ஷர்ட் வாங்கினா அதே மதிப்புள்ள இரண்டு ஷர்ட்ஸ் இலவசம்னு ஆஃபர் போட்ருப்பாங்க. போனமாசம் இதே சட்டையை 300 ரூபாய்க்கு வாங்கினேனேடா... இப்போ ஆயிரம்னு போட்ருக்கேனு கேட்க முடியாது. ஏன்னா அது போன மாசம். நாஞ்சொல்றது இந்த மாசம்!

குறிப்பிட்ட பிராண்ட் களுக்கு மட்டும் 20 சதவிகிதம் தள்ளுபடினு போர்டு வைக்கிறவங்க, அந்த பிராண்ட் எதுனு குறிப்பிட்டு போர்டு வைக்கணும்னு டவுட்   தங்கசாமி ஒவ்வொரு வருசமும் பொதுநல மனு தாக்கல் பண்றார். ஆனா பாருங்க, அவர் மனுவும் தள்ளுபடி ஆகிடுது!

லேட்டஸ்ட் ட்ரெண்ட் இதுதான்னு சேல்ஸ் உமன் சொல்றதை நம்பி வாங்கிப் போட்டுப்போனா, ‘என்ன மச்சான் சட்டை பழசாருக்கு, பக்கத்து வீட்டுக் கொடியிலேர்ந்து சுட்டுட்டியா?’னு போன ஜென்மத்து வன்மத்தையும் சேர்த்து ஃப்ரெண்ட்ஸ் நம்மை மொக்கை பண்ணுவாங்க.

லேடீஸ் எப்பவும் ஒருபடி மேலே. ‘உங்க கடை விளம்பரத்துல தமன்னா...’ன்னா, ‘அந்த ஆஃபர்லாம் முடிஞ்சிருச்சுங்க’ம்பாங்க. ‘இல்லப்பா தமன்னா கட்டிட்டுவந்த பர்பிள் கலர் சேலைதான் வேணும்’னு கேட்டு கடைக்காரங்களை கதிகலங்க வைப்பாங்க.

அமெரிக்காவைக் கண்டுபிடிச்சதே ஐ யம் தாங்கிற ரேஞ்ச்ல ஆடித்தள்ளுபடி சேல்ஸ அறிமுகப்படுத்துனதே நாங்கதான்னு சுமார் நூறு கடைகள் விளம்பரம் பண்ணிட்டுருப்பாங்க. எல்லாருமா?

பத்துமணிக்கு மேல பத்து நிமிசம் ஆனாலும் சரக்கு விலை எக்குத்தப்பா எகிறிடுது. அவ்வளவு ஏன் டாஸ்மாக்லேயே சரக்கு விலை அதிகமாதான் இருக்கு. ஆனா ஆடித்தள்ளுபடி ஆஃபர் தர்ற கடைங்க மட்டும் எப்படித்தான் வாங்கிய விலைக்கே விற்பனை பண்றாங்களோ?

இப்பல்லாம் தியேட்டர்லேயும் ஆடித்தள்ளுபடி சலுகை ஆரம்பிச்சுட்டாங்க. பாப்கார்னுக்கும் 10 சதவிகிதத் தள்ளுபடி வாங்கித்தர்ற கட்சிக்கு உள்ளாட்சித் தேர்தல்ல அமோக வெற்றிவாய்ப்பு இருக்கு.

இந்த ஆடித்தள்ளுபடி கலாசாரம் எப்படி உருவாச்சுங்கிறதுக்குப் பல காரணங்கள் சொல்லப்படுது. ட்ரெஸ் தேடுறப்போ கணவன்மார்கள் என்ன அட்வைஸ் பண்ணாலும் அதெல்லாம் மனைவிமார்கள் தள்ளுபடி பண்றதாலதான் ஆடித்தள்ளுபடிங்கிற பேர் வந்துச்சாம்!

ஆடித்தள்ளுபடி பர்சேஸ்ல ஹெவியா சண்டை வருமேனு பயந்துதான், பாவப்பட்ட கணவன்மார்கள் வீட்டம்மாவைப் பிறந்தவீட்டுக்கு அனுப்பறதாகவும் பரவலா ஒரு கருத்து இருக்கு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்