சொல ‘வடை’ போச்சே!

கிராமங்களில் சர்வ சாதாரணமாக ‘சொலவடைகள்’ எனும் பெயரில் வெங்காய வெடியை வாய்வழியாகக் கொளுத்திப் போடுவார்கள். இவைகள்தான் இன்றைய ‘புள்ளையாரே பெருச்சாளியில சவாரி செஞ்சிக்கிட்டு இருக்காரு... பூசாரிக்கு புல்லட்டு கேட்குதாம்’ போன்ற அடாவடிக் கலாய்களின் பழங்காலத்திய வெர்ஷன்.

வேலைவெட்டிக்குப் போகாமல் வீட்டிலேயே உட்கார்ந்து வெறுங்கனவு காணும் மேதகு ட்யூட்ஸ்களைப் பார்த்து ‘சொப்பனத்துல கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா?’ என வீட்டிலிருக்கும் அப்பத்தா புலம்ப ஆரம்பிக்கும். இந்தக் கொடுமைக்குப் பயந்தே வேலைக்குப் போனவர்களும் இருக்கிறார்கள்.

இந்தத் தாய்க்கிழவிகள் மிளகாய்ப்பொடி கடன்வாங்கப் பக்கத்து வீட்டுக்குப் போனால், பக்கத்துவீட்டுக்காரப்பெண் ‘மிளகாய்ப்பொடியா..? இங்க உப்புக்கே வழியில்லை’ எனப் பஞ்சப்பாட்டுப் பாடும். அப்போ வரும் சொலவடைதான் இது. ‘உடுத்தச் சேலை இல்லைனு சின்னாத்தா வீட்டுக்குப் போனா, அவ ஈச்சம்பாயைக் கட்டிக்கிட்டு எதுக்க வந்தாளாம்!’

அடுத்தநாள் பரீட்சைக்கு வெறித்தனமாகப் படித்துக்கொண்டிருக்கும் போது, பானிபூரி சாப்பிடலாம் என ஃப்ரெண்ட் கடைக்குக் கூப்பிடுவான். ஆப்படிக்கிறதுலேயே முதல் விதி ஆசையைத் தூண்டணும். இதுதான் ‘மேயற மாட்டை மெனக்கெட்ட மாடு கெடுத்த’ கதை.

பெரிய குடோன்களைப் போல வீடுகளில் வளர்ந்து வேலைக்குச் சென்னைக்கு வந்ததும் தங்கப்போகும் மேன்ஷனைப் பார்த்ததும் டரியலாகும் பேச்சுலர்ஸுக்கு முதலில் தோன்றுவது இதுதான். ‘பட்டணம் எல்லாம் நம்ம பட்டணந்தான். பொட்டலம் வைக்கத்தான் எடமில்லை!’

வேலையில் சேர்ந்ததும் திட்டக்குழுத் தலைவர் ரேஞ்சுக்கு பிளான் போட்டு மாதாமாதம் டியூ கட்டும் வகையில் வண்டி வாங்குவோம். திடீரென சம்பளம் வாங்க லேட்டானால் சோத்துக்கே வழியில்லாமல் நாக்குத் தள்ளிவிடும். பிறகு வண்டியையே விற்றுவிட்டு மொத்தக்கடனையும் கட்டவேண்டி வரும். இதைத்தான் அன்னிக்கே ‘வட்டிக்கு வாங்கி அட்டிகை வாங்கினாளாம். அட்டிகையை வித்து வட்டி கட்டினாளாம்’னு சொன்னாய்ங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்