சிலிர்க்கவைக்கும் சி.ஐ.டி!

சி.ஐ.டி! பெருசுகள் முதல் சுட்டிகள் வரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்த்துவரும் க்ரைம் டி.வி தொடர்.

ஒரு டப்பிங் சீரியலுக்கு இவ்வளவு ரசிகர் கூட்டமா? என்று விசாரித்தால் பல ஆச்சரியங்கள். கால் நூற்றாண்டைத் தொட்டுவிடும் அளவுக்கு ஜெட் வேகத்தில் போய் கொண்டு இருக்கிறது. சோனி தொலைக்காட்சியில் தினமும் 42 முதல் 45 நிமிடங்கள் வரை பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் இந்தி சி.ஐ.டி-க்கு உலகம் முழுவதும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவின் மும்பை நகரில் இயங்கும் க்ரைம் இன்வெஸ்டிகேட்டிங் டிபார்ட்மென்ட் என்ற குற்றப் புலனாய்வு அதிகாரிகளின் சுவாரஸ்யமான துப்பு துலக்கும் கதைதான் எபிசோட்களாக விரிகின்றன. திங்கள் முதல் வெள்ளிவரை ஒவ்வொரு நாளும் சிக்கலான கேஸ்களால் துவங்கும் சீரியல், நிறைய ட்விஸ்ட்களோடு பயணித்து க்ளைமாக்ஸில் திடுக் திருப்பத்தோடு முடியும். இந்த ரோலர் கோஸ்டர் சீரியலை உருவாக்கியது ‘ஃபயர் ஒர்க்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனத்தின் அதிபரான பிஜேந்திர பால்சிங். ஏப்ரல் மாதம் 1997-ல் சும்மா ஆரம்பித்துதான் பார்ப்போமே எனத் துவங்கப்பட்ட இந்தத் தொடர் மாரத்தான் ரேஸ்போல வருடங்கள் கடந்து இன்றுவரை மெகா ஹிட்டான தொடராக போய்க்கொண்டிருக்கிறது. சீரியலில் நடிக்கவும் இயக்கவும் செய்யும் பிஜேந்திரபால் சிங் இப்போது தனக்குத் துணையாக பெரிய டீமையே வைத்திருக்கிறார். கடந்த அக்டோபர் 8, 2004-ல் ஒளிபரப்பான சி.ஐ.டி 11-வது எபிசோடில் 7-வது ஆண்டுக் கொண்டாட்டமாக 111 நிமிடங்கள் ஒளிபரப்பானது. இதில் விசேஷம் என்னவென்றால் 111 நிமிடங்களையும் ஒரே நீண்ட ஷாட்டில் படமாக்கியதுதான். இது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது.

தொடரில் வரும் குற்றப் புலனாய்வு அதிகாரிகளாக ஏசிபி பிரத்யுமன், சீனியர் இன்ஸ்பெக்டர் அபிஜித், சீனியர் இன்ஸ்பெக்டர் தயானந்த், இன்ஸ்பெக்டர் ஃப்ரடரிக், தடயவியல் நிபுணர் டாக்டர் சாலோங்கி, அவருக்கு உதவிகரமாக இருக்கும் டாக்டர் தாரிகா, இன்ஸ்பெக்டர் பூர்வி, இன்ஸ்பெக்டர் ஷ்ரேயா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பங்கஜ் ஆகியோர்தான் வாராவாரம் குற்றங்களைத் துப்பறிகிறார்கள். 1500 எபிசோடுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் எக்கச்சக்க நடிகர்கள், துணை நடிகர்கள் என கலக்கி வருகிறார்கள். தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியலின் முக்கியப் பாத்திரங்களில் சில, நேட்டிவிட்டிக்காக அதே உச்சரிப்போடு பொருந்திப்போகும் தமிழ்ப்பெயர்களாக  மாற்றப்பட்டிருக்கின்றன. உதாரணமாக பிரதான ஹீரோவான ஏசிபி பிரத்யூமன் என்ற பாத்திரம் தமிழில் ஏசிபி பார்த்திபனாக மாற்றப்பட்டிருக்கும். ராம் கோபால் வர்மா மற்றும் அனுராக் காஷ்யப்பின் இந்திப்படங்களில் துணை நடிகராக பின்னி எடுத்த ஆதித்யா ஸ்ரீவத்ஸவா தான் இன்ஸ்பெக்டர் அபிஜித் (தமிழில் அபிஷேக்) என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இந்தத் தொடர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஷூட் செய்யப்பட்டிருந்தாலும் ஒரு தொடருக்காக முதன்முதலில் வெளிநாடு போன வரலாறும் இந்த சீரியலுக்கு உண்டு. பாரிஸ், சுவிட்சர்லாந்து, பெர்னே, ஜூரிச் எனப் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டது. இடை இடையே பொருளாதார ரீதியாகவும், நடிகர்களின் தொடர்ச்சியான கால்ஷீட்டுக்காகவும் சில மாதங்கள் பிரேக் எடுத்துக்கொண்டாலும் இன்றுவரை தொடர்ந்து பட்டையைக் கிளப்பி வருகிறது சி.ஐ.டி. அதேபோல ஒரு சி.ஐ.டி. கேரக்டருக்காக மட்டும் இந்தியா முழுவதும் ‘ஆபரேஷன் தலாஷ்’ என்ற பெயரில் தேடுதல் போட்டி வைத்து பல கட்டத் தேர்வுக்குப் பிறகு தேர்வானவர்தான் சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேக். (அவரின் நிஜப்பெயரிலேயே நடிக்கிறார்!)

இந்தத் தொடரின் மூலம் பல சுவாரஸ்யமான போட்டிகளையும் அவ்வப்போது வைத்து பார்வை யாளர்களை ஈர்த்து வருகிறார்கள். 2013-ல் த்ரில்லர் கதைப்போட்டி வைத்து அதில் தேர்வான கதைகளை மையமாக வைத்து, அதாவது சி.ஐ.டி-களுக்கு குழந்தைகள் உதவுவது போல ‘சி.ஐ.டி: சோட்டே ஹீரோஸ்’ என மாற்றி அமைத்து ஸ்கிரிப்ட் எழுதி அதைத் தொடராக ஒளிபரப்பி ஹிட் ஆக்கினார்கள்.

2015-ல் குழப்பமான கொலை வழக்குகளை ஒளிபரப்பி பார்வையாளர்களைத் தீர்த்து வைக்குமாறு போட்டி வைத்து அதிரடி பண்ணினார்கள். சரியான யோசனைகளைச் சொன்னவர்களின் முடிவுகளை படமாக்கி ஒளிபரப்பியதோடு வெற்றி பெற்ற மூன்று பேருக்கு பரிசுகளும் கொடுத்தார்கள். வெறும் சீரியலாக மட்டும் அல்லாமல் மூளைக்கும் வேலை கொடுத்து பார்வையாளர்களையும் சிந்திக்க வைக்கும் இந்த சீரியல் இப்போது இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பார்வையாளர்களை ஈர்க்கிறது என்பது உண்மையில் அசத்தல்தான்.

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick