‘‘டைட்டிலில் இருக்கு ரகசியம்!’’

‘நான் வீட்டுக்குப் போகணும்', ‘எனக்கு உன்னைவிட மனசு வரலை' - ஓர் ஆணின் பிடியில் சிக்கிய பெண்ணின் நிலையை சைக்கோ திரில்லர் கதையாகச் சொல்கிறதாம், ‘வித்தையடி நானுனக்கு' திரைப்படம். அதன் இயக்குநர் ராமநாதன் கே.பகவதியிடம் பேசினேன்.

‘‘நல்ல இயக்குநர் ஆகணும்ங்கிறது பல வருட கனவு. அதுக்குப் பயிற்சியா இருக்கட்டுமேனு சீரியல்கள்ல வேலை பார்த்தேன். டிஸ்கஷன்ல ‘இந்த இடத்துல இப்படி மியூஸிக் பண்ணலாம், அப்படி மியூஸிக் பண்ணலாம்'னு  சொன்னேன். ‘உங்களுக்குள்ளேயே ஒரு மியூஸிக் டைரக்டர் இருக்கார்'னு உசுப்பேத்தி சூர்யா நடிச்ச ‘ஸ்ரீ' படத்துக்கு இசையமைப்பாளர் ஆக்கிட்டாங்க. அதுக்கப்புறம் சில படங்களுக்கு மியூஸிக் பண்ணேன். மனசுக்குப் பிடிச்ச இயக்குநர் ஆசையை விட்டுட்டு, அதைப் பண்றதுல எனக்கு விருப்பம் இல்லை. மீண்டும் சில சீரியல்கள்ல வேலை பார்த்தேன். பல குறும்படங்கள் இயக்கினேன். 2011-ல் என்னோட ‘என் செய்ய நினைத்தாய்' டெலிஃபிலிமுக்கு லண்டன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருது கிடைச்சுது. கொஞ்சம் நம்பிக்கை வரவே இப்போ, ‘வித்தையடி நானுனக்கு' படத்தை இயக்கி முடிச்சுட்டேன்'' என்று ஆரம்பித்தவர், படத்தின் கதைக்கு நகர்ந்தார்.

‘‘ஹீரோகிட்ட லிஃப்ட் கேட்கிற பொண்ணை, ஹீரோ கடத்திட்டுப் போய் ஒரு இடத்துல வெச்சுக்கிறார். ஏன், எதுக்குங்கிறதுதான் க்ளைமாக்ஸ். முதல் படம். சவாலா ஏதாச்சும் பண்ணலாம்னு முடிவு செஞ்சப்போ, இந்த ஐடியா வந்துச்சு. அதுக்கு சைக்கோ திரில்லர் கதையைத் தொடுறது இன்னும் சூப்பரா இருக்கும்னு நினைச்சேன். ஏன்னா, சைக்கோ த்ரில்லர் கதைகளுக்கு ‘இப்படியெல்லாம் நடந்தா எப்படி இருக்கும்?'னு இஷ்டத்துக்கும் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடலாம். அதுக்காக, கத்தி, ரத்தம்னு கதறவிடலை. ஹீரோவும், ஹீரோயினும் எமோஷனல் ரீதியான மோதல்தான் நடக்கும். நீயா, நானானு போட்டி போட்டு உணர்வுகள்ல மோதிப்பாங்க. அது என்ன மாதிரியான விளைவைக் கொடுக்கும்னு படம் பார்க்கிற ஆடியன்ஸுக்குப் புது அனுபவமா இருக்கும்'' என்ற ராமநாதனின் கதையில் இரண்டே கேரக்டர்கள்தான்!

‘‘ஆமா. பார்த்தோம் சிரிச்சோம்னு எழுந்திரிச்சுப் போகாம ஒரு புது அனுபவத்தோட படம் பார்க்கணும்ல. ஆக்சுவலா, ஹாலிவுட்ல இந்த மாதிரிப் படங்கள் அடிக்கடி வரும். தமிழ்ல கம்மிதான். இன்னும் சொன்னா, சைக்கோ த்ரில்லர் கதைகளை தமிழ் சினிமாவுல பார்க்கிற இடைவெளி அதிகம். படத்துல, ‘பாயுமொளி நீயெனக்கு... பார்க்கும் விழி நானுனக்கு'ங்கிற பாரதியார் பாட்டை வெச்சுருக்கேன். டீஸரைப் பார்த்தவங்க ஹீரோயின் செளரா சையத் நடிப்பை ரொம்பவே பாராட்டுறாங்க. 15 நாள்ல மொத்தப் படத்தையும் முடிச்சு, நண்பர்களுக்குப் போட்டுக் காட்டினேன். திரைப்பட விழாக்களுக்கு அனுப்பலாம்னு கமென்ட்ஸ் கொடுத்தாங்க. ஆனா, எனக்கு நம்ம தமிழ் சினிமா ரசிகர்கள் படத்தைப் பார்த்து என்ன சொல்றாங்கனு கேட்கத்தான் ஆர்வமா இருக்கு!'' என்றவரிடம் ‘‘ ‘வித்தையடி நானுனக்கு' டைட்டிலுக்கும் படத்துக்கும் என்ன தொடர்பு?’’ என்றேன்.

‘‘சொல்லக் கூடாது. அது ரொம்ப ரகசியம்!'' என்று பில்டப் கொடுத்து முடித்தார்.

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick