நண்பனைத் தேடி...

‘அன்னாயும் ரசூலும்’, ‘ஞான் ஸ்டீவன் லோபஸ்’ போன்ற ஹிட் மலையாளப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜீவ் ரவி இயக்கியிருக்கும் படம் ‘கம்மட்டிபாடம்’. கம்மட்டிபாடம் எனும் ஊர் எர்ணாகுளம் நகரத்தின் முக்கியப் பகுதியாக மாறுகிற இடைவெளியில், தங்கள் வாழ்க்கையும் இளமையும் தொலைக்கிற சில நண்பர்களின் கதைதான் படம்.

இயக்குநர் ராஜீவ் ரவி பற்றி முதலில் குறிப்பிட வேண்டும். அனுராக் காஷ்யப் படங்களில் ‘நோ ஸ்மோக்கிங்’ தொடங்கி, ‘பாம்பே வெல்வெட்’ வரை எல்லாவற்றிற்கும் கேமராமேன் இவர்தான். அனுராக்கால் ஏற்பட்ட தாக்கம் ராஜீவ் ரவியின் படங்களில் மென்மையான விகிதத்தில் காணமுடியும். ‘கம்மட்டிபாடம்’ படத்திலும் அது தொடரத்தான் செய்கிறது. படத்தில் துல்கர் சல்மான் என்கிற ஸ்டார் இருந்தாலும் ஹீரோ என யாரும் கிடையாது. கதையையும் சம்பவங்களையும் ஹீரோவாக்கி வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர்.

கதை இதுதான். நண்பன் கங்காவிடமிருந்து (விநாயகன்) ஒருநாள் இரவு கிருஷ்ணனுக்கு (துல்கர் சல்மான்) கால் வருகிறது. தன்னைக் கொலை செய்ய யாரோ திட்டமிட்டிருப்பதாக அவன் கூறிக்கொண்டிருக்கும்போதே ஒரு பலத்த சத்தத்துடன் போன் கீழே விழுவது துல்கருக்குக் கேட்கிறது. நண்பனுக்கு என்ன ஆனது எனத் தெரிந்துகொள்வதற்காக கம்மட்டிபாடம் ஊருக்குக் கிளம்புகிறார் துல்கர். அங்கிருந்து கதை துல்கரின் இளமைப் பருவம், துல்கர் நண்பனைத் தேடி அலையும் பயணம், வயிற்றில் கத்திக்குத்துடன் இந்த நிகழ்வுகளை எல்லாம் ஒரு பேருந்தில் பயணம் செய்தவாறு நமக்குக் கூறுவது என மூன்று கிளைகளாகப் பிரியும்.

மூன்று காலகட்டங்களில் பயணிக்கும் திரைக்கதையில் முக்கிய கதாபாத்திரங்களின் இளமைப்பருவ முக ஒற்றுமைக்கு காஸ்டிங் டைரக்டரின் பங்கும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை அப்படியே பார்வையாளனுக்குப் பகிர்வதில் இயக்குநரின் மெனக்கெடல் புரிகிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகள் ‘சிட்டி ஆஃப் காட்’ போன்ற வேர்ல்ட் கிளாஸிகலை ஞாபகப்படுத்துகிறது. இரண்டாம் பாதியின் நீளத்தை கொஞ்சம் சகித்துக்கொண்டால் ஒரு நல்ல சினிமாவைப் பார்த்த திருப்தி கிடைக்கலாம். கங்காவாக வரும் விநாயகன் (‘திமிரு’ படத்தில் வரும் அந்த மாற்றுத்திறனாளி) சமயங்களில் துல்கரை ஓரங்கட்டும் அளவுக்கு பெர்ஃபார்மென்ஸில் வெளுத்துக்கட்டுகிறார். இசையமைப்பாளர் கே யுடன் இணைந்து படத்துக்குப் பின்னணி இசையும் அமைத்திருக்கிறார் விநாயகன்.

இறுதிக்காட்சியில் ஒரு பிணத்தைக்கூட கொண்டுபோக முடியாத அளவுக்கு சந்துகளாகக் குறுகிவிடும் துல்கரின் பூர்விக இடத்தைக் காண்பிக்கும் காட்சி நகரமயமாதலின் அவசர அசுர வளர்ச்சியைக் காட்டி முகத்தில் அறைகிறது. முந்தையப் படங்களைப் போலவே இதிலும் தன் வித்தியாச சினிமா ஒன்றினைத் தந்து தனக்கென ஒரு இடத்தை அழுத்தமாகப் பெறுகிறார் ராஜீவ் ரவி!

- ஹாசிப்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick