மீண்டும் சக்திமான்!

‘கங்காதர் வித்யாதர் மாயாதர் ஒங்கார்நாத் சாஸ்திரி...!’, ‘இருள் நீடிக்கிறது!’ - இந்த இரண்டு க்ளூ போதும், ‘சக்திமான்’ சீரியலை அறிமுகப்படுத்துவதற்கு.  90-களில் பிறந்தவர்களைத் தொலைக்காட்சியின் முன் கட்டிப்போட்ட சூப்பர் ஹீரோ சக்திமான். இந்த சூப்பர் ஹீரோவின் சாகசங்கள் காமிக்ஸ் வடிவில் ஆங்கிலம், இந்தி மொழிகளில் வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்தது. சக்திமானின் பிரத்யேக உடை, பொம்மை, டி-ஷர்ட், தொப்பி என சகலமும் விற்கப்பட்டு சக்கைப்போடு போட்டது. இப்படி இந்தியாவையில் அத்தனை குழந்தைகளையும் கட்டிப்போட்டு வைத்திருந்த சக்திமான் என்கிற சூப்பர் ஹீரோ சீரியல் மீண்டும்!

‘சக்திமான்’ தொடர் முடிவுக்கு வந்ததும், முகேஷ் கண்ணாவின் நடிப்பிலேயே ‘ஆர்யமான்’ என்ற புதிய தொடர் ஆரம்பமானது. சக்திமான் உடையைக் கொஞ்சம் பட்டி-டிங்கரிங் செய்த கெட்டப்போடு முகேஷ் கண்ணா இந்தத் தொடரில் களமிறங்கினாலும், ‘சக்திமான்’ கேரக்டரைத் தவிர வேறு எந்த கேரக்டரிலும் அவரை ஏற்றுக்கொள்ள குழந்தைகள் தயாராக இல்லை என்பது, ‘ஆர்யமான்’ தொடர் 50 எபிசோடுகளோடு நின்றதில் தெரிந்திருக்கும். பிறகு ‘இந்தியன் சில்ட்ரன்ஸ் ஃபிலிம் சொஸைட்டி’யின் சேர்மன் பதவி, சின்ன கேரக்டர்களில் திரைப்படங்களில் தலைகாட்டுவது, சென்டிமென்ட் சீரியல்களில் நடிப்பது என வழக்கமான நடிகராக வலம் வந்தவர், ‘சக்திமான்’ தொடரை மீண்டும் கொண்டுவரும் முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டிருந்ததன் விளைவுதான், இப்போது உருவாகவிருக்கும் ‘சக்திமான் ரிட்டர்ன்ஸ்’.

‘‘சக்திமான் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்றும் என்னைப் பார்ப்பவர்கள் ‘சக்திமான்’ என்றுதான் புன்னகைக்கிறார்கள். இன்றும் என்னை சூப்பர் ஹீரோவாகவே பார்க்கிறார்கள். அதனால், எனக்கான இந்த இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல், மீண்டும் நானே களமிறங்குகிறேன்!’’ என்று உற்சாகமாகப் பேட்டி தட்டிவிட்டு, ஜிம்மில் கிடக்கிறார் 57 வயதான முகேஷ் கண்ணா. இதுவரை தனது உடல் எடையில் எட்டு கிலோ குறைத்திருக்கும் முகேஷ், 15 வருடங்களுக்கு முன்பு ‘சக்திமானாக’ இருந்த அதே முகேஷ் கண்ணாவைக் கொண்டுவரும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார்.

அப்போதைய டெக்னாலஜியில், சக்திமானின் விரலில் இருந்து ஒளித் தோட்டாக்கள் பாய்ந்தன. தனது விரலை மேலே தூக்கியபடி உடம்பைச் சுழற்றினால் பறந்துவிடும் சக்தியைப் பெற்றிருப்பார். சக்திமானால் ஒரே நொடியில் எங்கும் தோன்ற முடியும். இப்படி சக்திமானுக்குக் கொடுக்கப்பட்ட அத்தனை பில்டப்களையும் இப்போதைய டெக்னாலஜியில் இன்னும் மெருகேற்றி புதிய புதிய சக்திகளைப் புகுத்தவிருக்கிறார்கள். இப்போதே எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தத் தொடரைத் தயாரிக்க பல முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டியில் இருக்கின்றன. இன்னும் சில வாரங்களில் சக்திமானின் ரீ-என்ட்ரி தேதி தெரியும். கதை? முதல் பகுதியில் இருந்த அதே ‘நன்மைக்கும் தீமைக்குமான போர்’தான். நம்ம கேப்டன் பாணியில் சொன்னால், ‘இது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கின்ற போர்!’

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick