‘‘தேர்தலின் வெற்றியைத் தீர்மானித்தது இரண்டு கட்சிகளின் பணம்தான்!’’

‘மாற்று அரசியல்’ கோஷத்தை முன்வைத்த ‘தே.மு.தி.க. - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா’ இந்தத் தேர்தலில் பெரும் தோல்வியைத் தழுவியிருக்கிறது. கூட்டணித் தலைவர்களில் ஒருவரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர், ஜி.ராமகிருஷ்ணனைச் சந்தித்தேன்.

‘‘அ.தி.மு.க-வின் வெற்றிக்குப் பணம்தான் காரணம்னு சொல்றீங்க. பணம் மட்டும்தான் காரணமா?”

‘‘பிரதான காரணம் அதுதான். இவங்க ஆட்சியைப் பிடிச்சதுக்கு மட்டுமில்லை, தி.மு.க. பெரும் வெற்றி பெற்றதுக்குக் காரணமும் பணம்தான். இந்தியாவில் எங்கேயுமே ‘பணம் பட்டுவாடா செய்ததால் இரண்டு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைப்பு’ங்கிற நிகழ்வு நடந்ததில்லை. தவிர, வாக்காளர்களுக்குக் கொடுக்க வெச்சிருந்த 102 கோடி ரூபாய் பணத்தைக் கைப்பற்றியிருக்காங்க. இவ்வளவு பணம் கைப்பற்றப்பட்ட சம்பமும் இதுவரை நடந்ததில்லை.  ஆக, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கிற விஷயத்துல இரண்டு கட்சிகளுமே புரிந்துணர்வு ஒப்பந்தத்தோட செயல்பட்டிருப்பாங்கனு தோணுது. ஏன்னா, அவங்க பணம் கொடுக்கும்போது இவங்க தடுக்கலை. இவங்க கொடுக்கும்போது அவங்க தடுக்கலை. ஏன்? ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின்னு யாராவது ஒருத்தர், ‘வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கலை’னு சொன்னாங்களா? இல்லையே... ஆக, இந்தத் தேர்தல்ல வெற்றியை நிர்ணயிச்சது அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் அள்ளி இறைத்த பணம்தான்!’’

‘‘உங்க ‘முதல்வர்’ வேட்பாளர் விஜயகாந்த் டெபாசிட்கூட வாங்கலை. எடுத்தது தவறான முடிவுனு நினைக்கிறீங்களா?”

‘‘அப்படிக் கருதவில்லை. பொதுவா எந்தக் கட்சியுமே முதல்வர் வேட்பாளரை அறிவிக்க மாட்டாங்க. இப்போதான் இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கின்றன. மத்தவங்க பண்றதைப் பார்த்து தே.மு.தி.க-வும் முதல்வர் வேட்பாளரை அறிவிச்சாங்க. நாங்களும் அதை ஏத்துக்கிட்டோம். எங்களோட தோல்விக்கு நான் சொன்னது மாதிரி, பணம்தான் பிரதான காரணம்!’’

‘‘சட்டமன்றத்தில் முதல்முறையாக கம்யூனிஸ்டுகளும் இல்லை. தலித்துகள் பிரச்னைக்காகப் போராடும் தலைவர்களும் இல்லை. இதோட விளைவுகள் எப்படி இருக்கும்?”

‘‘எங்க கட்சியைப் பொறுத்தவரை பார்லிமென்ட்ரி வொர்க், எக்ஸ்ட்ரா பார்லிமென்ட்ரி வொர்க்னு இரண்டு வேலைகள் பார்ப்போம். அதாவது ஆட்சி மன்றத்துக்கு உள்ளேயும் போராடுவோம், வெளியேவும் போராடுவோம். வெறும் சட்டசபைக்குள் சத்தம் போடுவது மட்டும்தான் அரசியல்னு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்பலை. தவிர, 1971-ம் வருடத்துலகூட சி.பி.எம்-மைச் சேர்ந்த எந்தப் பிரதிநிதியும் சட்டமன்றத்துக்குள்ள இல்லை. அதுக்காக நாங்க போராடாம இல்லையே. தலித் தலைவர்களும் அப்படியேதான். எங்க கூட்டணியில் இருந்த திருமா நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டார். அதனால் சட்டசபையில் பிரதிநிதித்துவம் இருந்தா மட்டும் மக்களோட பிரச்னை தீர்ந்துடாது. மக்களுக்கான போராட்டம் தொடர்ந்துகிட்டே இருக்கணும். அதுக்கு நாங்க எப்பவுமே கைகோர்த்துத் தயாரா இருப்போம். எங்க போராட்டம் தொடரும்!’’

‘‘மக்கள் நலக் கூட்டணி உருவாகலைனா, தி.மு.க. ஆட்சியைப் பிடிச்சிருக்கும்னு சொல்றவங்களுக்கு உங்க பதில்?”

‘‘எந்தக் கட்சி ஜெயிக்கணும், தோற்கணும்னு முடிவு பண்றதுக்காக நாங்க சேரலை. மக்கள் அன்றாடம் சந்திக்கிற பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்காததுக்கு அடிப்படையான காரணம், அ.தி.மு.க. - தி.மு.க. என்ற இரு துருவ அரசியல்தான். இந்த பைபோலார் பாலிடிக்ஸைத்தான் நாங்க எதிர்க்கிறோம். இரண்டு பேருமே இனி வரக் கூடாது என்பதுதான் எங்க இலக்கு. பணப்பட்டுவாடா பண்ணினதுல இரண்டு கட்சிக்கும் பங்கு இருக்கு. கிரானைட், தாதுமணல் கொள்ளையில் இரண்டு கட்சிக்கும் பங்கு இருக்கு. மதுபான ஆலைகளை இரண்டு கட்சியைச் சேர்ந்தவங்களும் நடத்திக்கிட்டுதான் இருக்காங்க. சாதி ஆணவக் கொலைகள் நம்ம கண் முன்னாடியே நடந்துச்சு. இரண்டு கட்சியில் இருந்தும் ‘சாதி ஆணவக் கொலைகள்’ங்கிற வார்த்தையைக்கூட பயன்படுத்தலையே. சென்னையில் 2002-ல இருந்து இதுவரை 54 அரசு மாநகராட்சிப் பள்ளிகளை மூடியிருக்காங்க. தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சியுமே இதைச் செய்திருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை கிரானைட் முறைகேடுகளை விசாரிக்க உத்தரவிட்டது நீதிமன்றம். அவர் கொடுத்த அறிக்கையில், கடந்த 20 வருடங்களாக இந்த ஊழல் நடக்கிறதாகவும், இதனால அரசாங்கத்துக்கு ஒரு லட்சத்து ஆறாயிரம் கோடி ரூபாய் இழப்பீடுனு சொல்றார். ஊழல் நடந்த 20 வருடத்துல அ.தி.மு.க., தி.மு.க.  கட்சிகள்தான் ஆட்சி செஞ்சிக்கிட்டு இருந்தாங்க. இதெல்லாம் மக்களுக்கு சொல்லியிருக்காங்களா? சொல்ல முடியாது. அதனாலதான் சொன்னோம், இரண்டு கட்சிகளும் வேணாம். முக்கியமா, மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் அ.தி.மு.க-வுக்கு இந்த விமர்சனங்கள் இன்னைக்கும் பொருந்தும்னு சொல்லிக்கிறேன்!’’

‘‘ஆனா, மக்கள் அவங்களைத்தானே விரும்புறாங்க?”

‘‘மக்கள் நலக் கூட்டணியை கொஞ்சம் முன்கூட்டியே உருவாக்கியிருந்தா, இந்த நிலைமையைக் கொஞ்சமாவது மாற்றியிருப்போம். ஏன்னா, நாங்க முன் வைக்கிற ‘மாற்று அரசியல்’ங்கிறது அ.தி.மு.க. ஆட்சி முடிந்தால், தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கணும். தி.மு.க. ஆட்சி முடிந்தால், அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கணும்ங்கிறது அல்ல. அரசியலே மாறணும். தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்னாடிதான் எங்க கூட்டணி உருவானது. எங்களோட தேவையை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லத் தவறிட்டோம். ஆனா, கூடிய சீக்கிரமே மக்கள் எங்களோட முக்கியத்துவத்தைப் புரிஞ்சுப்பாங்க!’’

‘‘மக்கள் நலக் கூட்டணியைவிட ஒரு வாக்கு அதிகமா வாங்கலைனா, கம்யூனிஸ்ட் கட்சியில சேர்ந்துடுறேன்னு சொன்னாரே சீமான். அவருக்கு அழைப்பு விடுத்தீங்களா?”

‘‘இந்தக் கேள்வி கேட்காதீங்க. இதுக்கு நான் பதில் சொல்ல விரும்பலை. ஒருத்தர் அதிகமா ஓட்டு வாங்குறாரா, குறைச்சு ஓட்டு வாங்குறாரானு எண்ணிக்கிட்டு இருக்கிறதல்ல அரசியல். ஒரு கட்சிக்கு கொள்கை, செயல்பாடுதான் முக்கியம். நாங்க கொள்கைக்காக தேர்தல்ல நிற்கிறோம். கொள்கையோட மக்களுக்காகப் போராடுறோம். அதனால, அவரோட பேச்சையெல்லாம் நாங்க பெருசா எடுத்துக்கலை. அவரும் கோபதாபத்துல ஏதோ பேசியிருக்கார். அவ்வளவுதான்!’’

‘‘பா.ம.க-வோட வாக்கு கடந்த தேர்தலைவிட அதிகமா இருக்கு. அவரோட ‘மாற்றம்’ கோஷமும் வரவேற்பு பெற்றிருக்குனு எடுத்துக்கலாமா?”

‘‘இல்லை. வருத்தத்தோட ஒரு விஷயத்தைச் சொல்றேன். பா.ம.க-வைச் சேர்ந்த தொண்டர்கள் பிற சாதியைச் சேர்ந்தவங்க இருக்கிற பகுதிகளுக்குக்கூட போகலை. சாதி பார்த்துதான் ஓட்டே கேட்டிருக்காங்க. ஆக, இதெல்லாம் மாற்றத்துக்காகக் கிடைச்ச ஓட்டுகளா பார்க்க முடியாது. அவங்களுக்குக் கிடைச்சது முழுக்க முழுக்க சாதிய அரசியல் வாக்குகள்தான்!’’

‘‘வைகோ?”

‘‘அவரைத் தப்பான கண்ணோட்டத்துல பார்க்கிறது ரொம்பத் தப்பு. இரண்டு கட்சியில் ஏதாவது ஒண்ணுதான் ஆட்சிக்கு வரணும்னு நினைக்கிறவங்கதான் வைகோ மீது குற்றச்சாட்டு சொல்றாங்க. ஓட்டு கேட்கும்போதே அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளோட ஊழலையும் சேர்த்துதான் அட்டாக் பண்ணினோம். சென்னையில் வெள்ளம் வந்தப்போ ‘ஜெயலலிதா பதவி விலகணும்’னு சேர்ந்து அறிக்கை கொடுத்தோமே? அதனால, வைகோ மீது சொல்லும் குற்றச்சாட்டுகள் அர்த்தம் இல்லாதது!’’


‘‘விஜயகாந்த் தலைமையிலான உங்களோட கூட்டணி தொடருமா?”

‘‘இது முழுக்க மாற்று அரசியலுக்காக சேர்ந்த கூட்டணி. கண்டிப்பா தொடரும். அதே சமயம், அந்தந்த கட்சிகளோட சுயேட்சையான நடவடிக்கைகளும் தொடர்ந்து நடந்துக்கிட்டுதான் இருக்கும். ஒரே கருத்துள்ள போராட்டங்களுக்கு ஒண்ணாவே போராடுவோம். தோல்விக்குப் பிறகும், கூட்டாகவே இருப்போம்னுதான் முடிவு எடுத்திருக்கோம். மாற்று அரசியல் முழக்கம் இன்னும் தீவிரமாகும்!’’

‘‘தேர்தல் அறிக்கையை முழுமையா செயல்படுத்துவோம்னு சொல்லியிருக்காங்க ஜெயலலிதா, அது சாத்தியமா?”

‘‘2011-ல் அரசு ஊழியர்களுக்கான ‘புது பென்ஷன்’ திட்டத்தை ரத்து செய்வோம்னு சொன்னாங்க. அதுவே இன்னும் நடக்கலை. இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேறாம இருக்கு. பார்ப்போம். இப்போ நிறைவேத்துறேன்னு சொல்லியிருக்காங்க. வழக்கம்போல, வெயிட் அண்ட் ஸீ!’’

- கே.ஜி.மணிகண்டன், படங்கள் : ஆ.முத்துக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick