செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?

28 அமைச்சர்களுடன் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா அன்று மாலையே மேலும் கூடுதலாக நான்கு அமைச்சர்களை நியமித்து தனது அமைச்சரவை விளையாட்டைத் தொடங்கியிருக்கிறார். இன்னும் புதிதாக என்னென்ன துறைகளை ஏற்படுத்தலாம் என்று கைகூப்பி குனிந்து நின்று யோசித்ததில்...

‘அமாவாசை’ அமைச்சர்கள் விரிவாக்கத் துறை: அமாவாசைக்கு ஒருமுறை அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தி சீட்டில் இருக்கும் அமைச்சர்களுக்கெல்லாம் ‘கிலி’ ஏற்படுத்தும் அம்மா, தனக்கு சிரமம் இல்லாமல் அதற்கும் தனியாக அமாவாசை அமைச்சர்கள் விரிவாக்கத் துறை என்ற பெயரில் புதிய மந்திரியை நியமித்துவிட்டு ரெஸ்ட் எடுக்கலாம். அந்தத் துறை அமைச்சரும் ஏதாவதொரு அமாவாசையில் தூக்கியடிக்கப்படுவார்.

அவதூறு வழக்குக் கையாளல் துறை: அரசுக்கு எதிராகவோ அம்மாவுக்கு எதிராகவோ கருத்துகள் சொல்லும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அவதூறு வழக்குத் தொடுக்க தனி டிபார்ட்மென்ட்டையே ஏற்படுத்தலாம். முதல் போணியாக அம்மாவைக் கொஞ்சம் ஓவராகவே சீண்டிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை இழுத்து விளையாடலாம்.

சட்டசபை சுமோ துறை: சட்டசபையில் அமளி செய்யும் எதிர்க்கட்சிக்காரர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றவும் அம்மா அறிவிக்கும் திட்டங்களுக்கு மேசையைத் தட்டாமல் அடம்பிடிக்கும் எம்.எல்.ஏ-க்களை நாலு தட்டு தட்டவும் சுமோ வீரர்களைப் பயன்படுத்தலாம்.

அம்மா வாசகம் தயாரிப்புத் துறை: ‘புரட்சித்தலைவி, தங்கத்தாரகை, இதயதெய்வம், நிரந்தர முதல்வர்...’ எனச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி போரடித்துவிட்டதால், அம்மாவே இனிமேல் துதிபாடக் கூடாது எனத் தன் சகாக்களுக்கு உத்தரவிட்டுள்ளார். வாரத்துக்கு ஒருமுறை புதிது புதிதாக வாசகங்களைப் பாடி அம்மாவைக் குளிர்விக்க ‘கழக இலக்கிய அணி’ ஆட்களை உருவிப்போட்டு அதற்கெனவும் ஒரு துறையை ஏற்படுத்தலாம்.

டிசைனிங் டிபார்ட்மென்ட்: ‘பறக்கும் குதிரை’ ஐடியாவைப் போல க்ரியேட்டிவாக யோசித்துக் கட்சி வளர்ச்சிக்காக வேலை பார்க்கும் சிறந்த ஆர்க்கிடெக்ட்களை அப்படியே அலேக்காகப் பிடித்து அரசு வேலை கொடுத்துப் பணியமர்த்திக்கொள்ளலாம். மெரினா பீச்சை சுற்றிலும் இலை வடிவத்தில் காம்பவுண்ட் சுவர் கட்ட டெண்டர் விடலாம்.

இணையப் பிரச்சாரத் துறை: அரசுத் திட்டங்களை மக்களிடம் பரவலாகக் கொண்டு சேர்ப்பதற்கு, அம்மா பேசிய வீடியோவையோ வாய்ஸையோ ரெக்கார்ட் செய்து வாட்ஸ்-அப் வழியாக மக்களுக்கு ஃபார்வர்டு செய்யலாம். இதற்கென, வேலையில்லாமல் திரியும் இன்ஜினீயர்களை வேலைக்குச் சேர்க்கலாம். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய மாதிரியும் ஆச்சு. ‘ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்