#செல்ஃபி வித் மை க்யூட் ஸ்கூட்டி!

மீண்டும் தமிழக முதல்வராக புரட்சித்தலைவி தங்கத்தாரகை மாண்புமிகு(ஆஹா... நமக்கும் தொத்திக்கிச்சே) அம்மா பதவியேற்றதும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் புயல்வேகத்தில் தொடங்கப்பட்டால் அடுத்த ஆண்டுகளில் என்ன நடக்கும்..?  இதோ...

ட்ராஃபிக் சிக்னல்களில்  வெறும் ஸ்கூட்டிகளாகவே கண்ணில்பட்டு ஒவ்வொரு நாளும் இனிமையாகவே துவங்கும்.

கிராமங்களில் சைக்கிள்கள் மட்டுமே நின்ற வேப்பமரத்து நிழலில் இனி ஹோண்டா ப்ளஷர் ஸ்கூட்டிகள் காத்து வாங்கும். விறகுக்கட்டுகளை தலையில் சுமந்து திரிந்த அத்தாச்சிமார்கள் இனி வண்டியின் முன்பக்கத்தில் வைத்து புழுதிகளில் சீறுவார்கள்.

வண்டி கலர் சொல்லியெல்லாம் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பிங்க் கலரிலும் லேவண்டர் கலரிலும் ஸ்கூட்டிகள் குறுக்கும் நெடுக்குமாக சர்சர்ரென்று போகும்.

முகத்தில் துப்பட்டா கட்டிய பெண்ணின் ஸ்கூட்டி கலரை வைத்து எடைபோட்டு ‘செம ஃபிகர் போல...’  என ஃபாலோ செய்தால் அது நம் எதிர்வீட்டு பாட்டியாக இருந்து பல்பு வாங்க நேரிடலாம்.

லைசென்ஸ் எடுக்காத ஸ்கூல் கேர்ள்ஸ் எல்லாம் நானும் ஸ்கூட்டி ஓட்டுறேன் பேர்வழி என நேராக வந்து ப்ரேக் பிடிக்கத் தெரியாமல் நம் பைக்கில் செருகுவார்கள். ‘ஏம்மா...இப்படி வர்றே ?’ எனக் கேட்டால் ‘அப்டியே ரைட்ல டர்ன் பண்ணி போய்டலாம்னு பாத்தேன் அங்கிள்...’ எனக் கூறி மேலும் வெறுப்பேற்றுவார்கள்.

எல்லா ரோடுகளிலும் தினம் இடிபாடுகளாகவே இருக்கும். வண்டிக்கு நெளிவெடுப்பதாகச் சொல்லி வொர்க்‌ஷாப் மெக்கானிக்குகள் நல்லா கல்லா கட்டுவார்கள்.

சிட்டீஸ்களில் ஓல்டு உமன்ஸ்களின் அட்ராசிட்டீஸ் கொஞ்சம் ஓவராகவே இருக்கும். அண்ணாச்சி கடைகளில் போய் பொட்டுக்கடலை வாங்கக்கூட ஸ்கூட்டியில் பறப்பார்கள்.

புது ஸ்கூட்டியில் உட்கார்ந்து ஹேண்ட்பாரை பிடித்தமேனிக்கு செல்ஃபி எடுத்து ‘#செல்ஃபி வித் மை க்யூட்டி ஸ்கூட்டி’ ஹேஸ்டேக்கில் தெறிக்கவிடுவார்கள்.

‘ஸ்கூல் ரொம்ப தூரத்துல இருக்கிறதால என் பேத்தி  போக மாட்டேன்னு அடம்பிடிச்சா, அம்மா ஸ்கூட்டர் கொடுத்ததுக்கு அப்புறம் ஒழுங்கா ஸ்கூலுக்குப் போறா... அம்மாதான் எங்களுக்கு எல்லாமே’ என அடுத்த தேர்தலுக்கு ஒரு பாட்டி ப்ரமோஷன் கொடுக்கும்.

மொத்தத்தில், தமிழ்நாடு முழுவதும் வண்டிகள் சேல்ஸ் ரிப்போர்ட் எவரெஸ்ட் போல எகிறி, முகட்டைத் தொட்டுக்கொண்டு நிற்கும். எனவே, கம்பெனிக்காரர்கள் அம்மாவுக்கு என்றும் விசுவாசமாக இருப்பார்கள்!

- சி.எஸ்.விக்கி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick