இதுவும் நடக்கும்!

‘சொன்னதையும் செய்வேன். சொல்லாததையும் செய்வேன்’னு அம்மா சொல்வதைக் கேட்கும்போதெல்லாம், ‘சொல்லாததையும் செய்வேன்’கிற வார்த்தையில் அப்படி என்னதான் ட்விஸ்ட் வெச்சுருப்பாங்கனு மரணபீதியில் விரலைக் கடித்துக்கொண்டு யோசித்ததில்...

அம்மா கைப்பேசியில் இருந்து அம்மா கைப்பேசிக்கு மட்டுமே கால் செய்ய முடியும் என்றும் அதற்கு வசதியாக அம்மாடெல் எனும் புதிய 110ஜி நெட்வொர்க் தொடங்கினாலும் தொடங்கப்படும்.

‘பூமி உள்ளவரை எங்கம்மா புகழே நிலைத்திருக்கும்...’ பாடலை மட்டும்தான் அம்மா கைப்பேசியில் ரிங்டோனாக வைக்க முடியும் என்ற வகையிலும், மற்றும் அம்மாவின் படத்தைத் தவிர, விஜய், கமல் என யார் படத்தை வால் பேப்பராக வைத்தாலும் கைப்பேசி ஆவியாய் அவிந்துவிடும் என்ற வகையிலுமே போன் தயாரிக்கப்பட்டிருக்கும். அதேபோல் ‘ஹைக்’, ‘ஃபேஸ்புக்’ மற்றும் வாட்ஸ் - அப்பில் அம்மா ஸ்டிக்கர்கள் அனுப்பும் ஆப்ஷன்களும் கொண்டு வந்தாலும் கொண்டுவரப்படும்.

தாலிக்கு ஒரு பவுன் தங்கம் இலவசமாக வழங்கும்போது, கொசுறாக மணமக்களின் நெற்றியில் ‘சூப்பர் க்ளூ’ தடவப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டவும் வாய்ப்பிருக்கிறது. நெம்பினாலும் வராது.

அரசு கொடுக்கும் இலவச செட்டாப் பாக்ஸில், ஜெயா டி.வி, ஜெயா செய்திகள், ஜெயா மேக்ஸ் தவிர வேறு எந்த சேனலும் தெரியாது. ஆகையால், மக்களின் ரசனையை மனதில்கொண்டு ஜெயா கிரிக்கெட், ஜெயா ஜியோகிராஃபிக் சேனல் போன்ற சேனல்கள் புதிதாகத் தொடங்கப்படும். மகிழ்ச்சி.

அம்மா இலவச மருத்துவ முகாமில் முழு உடல் பரிசோதனை முடிந்தபின்பு, நலமாக இருக்கிறோம் என்பதைக் காட்ட மல்லாக்க படுக்கப்போட்டு நெஞ்சிலேயே அம்மாவின் உருவத்தைக் கதறக் கதற பச்சை குத்திவிடுவார்கள்.

ஒருமுறை அம்மாவின் உருவத்தை பச்சை குத்தியவர்கள், அடுத்த முறை த்ரிஷாவைப் போல் கார்ட்டூன் பொம்மைகள்கூட குத்திக்கொள்ள வாய்ப்பளிக்கப்படும்.

அம்மா பேங்கிங் கார்டுகள் போல் பள்ளிகளில் அம்மா ரேங்க் கார்டு, ஹோட்டல்களில் அம்மா மெனு கார்டு, அம்மா கைப்பேசி ஸ்க்ராட்ச் கார்டுகள் என எல்லா கார்டுகளும் உருவாக்கப்படும்.

பேனர், ஸ்டிக்கர், வால் போஸ்டர்கள் தயாரிக்க தரமணிக்கு அருகே அரசு சார்பில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

தியேட்டரில் ஒரு படம் மூன்றுமணி நேரம் ஓடுகிறது என்றால், அம்மாவின் ‘நாலாபுறமும் வளர்ச்சி’ விளம்பரங்கள் ஆறுமணி நேரம் ஓடும்.

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் நோக்கில், அனைத்துக் கடைகளும் பத்தாவது மாடிக்கு மாற்றப்படும். படியேறி வர சங்கடப்பட்டு குடிமக்கள் திருந்தினாலும் திருந்திவிடுவார்கள்.

அம்மா அந்தாதி, இலைக்குறள், அம்மா கலைக்களஞ்சியம் முதலிய நூல்கள் பத்தாப்பு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். அதிலிருந்து கட்டாயம் பதிலளிக்க வேண்டிய கேள்விகளாகவும் கேட்கப்படலாம்.

அரசு கொடுத்த மானியத்தில் வாங்கப்பட்ட ஸ்கூட்டரில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டவில்லை என்றால், அவர்கள் மீது அவதூறு வழக்குத் தொடுக்கப்படும்.

ஸ்டிக்கர்களை ஒட்டி ஒட்டி ஸ்கூட்டியை வேலன்டினா ரோஸியின் ஃபார்முலா ஒன் பைக் போன்று மாற்றிவிடுவார்கள்.

‘அம்மாவின் கைப்பேசி’ படம் ரீ ரிலீஸ் செய்யப்படும். ‘அம்மா கணக்கு’ படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அம்மா உணவகம், அம்மா மருந்துக்கடை போல அம்மா பெட்டிக்கடை, அம்மா ஆனியன் பக்கோடா கடை ஆகியவையும் ஆரம்பிக்கப்படும். அனைத்தும் மலிவு விலைகளில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

இலவச வைஃபையின் பாஸ்வேர்டாக ‘மாண்புமிகு இதயதெய்வம் புரட்சிதலைவி தங்கத்தாரகை கழகப் பொதுச் செயலாளர் தமிழக முதல்வர் டாக்டர் அம்மா’ உருவாக்கப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்