இப்படியும் வெல்லலாம் ஒரு கோடி!

‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியை அர்விந்த் சுவாமி நடத்தப்போகிறாராம். (பிம்ப்பர பிம்ப்பர பிம்ப்பர பூம்) எனக்குத் தெரிந்து அந்த நிகழ்ச்சி இப்படித்தான் இருக்கும். நீங்களும் படிச்சுப் பார்த்துட்டு ஒரு  முடிவைச் சொல்லுங்க...

‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, எவன் தடுத்தாலும்...’ என கிராமபோனில் தீம் மியூஸிக் ஒலிக்க கையில் லாந்தர் விளக்கோடு ஸ்டுடியோவுக்குள் என்ட்ரி ஆவார் அர்விந்த் சுவாமி. ஸ்டுடியோ ஒரே இருட்டாகத் தான் இருக்கும். ஏனென்றால், ஆட்டுக்கு வாக்கப்பட்டால் ‘ம்மே...’னு கத்திதான் ஆகணும் என்பதுபோல போட்டியாளர்களும் அவரோடு சேர்ந்து இருட்டில் வாழ்ந்தே ஆகணும் என்பதற்காகத்தான். நிகழ்ச்சியின்போது அர்விந்த் சுவாமி அதிகம் பேசவே மாட்டார். கேள்விகள்கூட பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் கவர்னரைப் போல முதல் இரண்டு வார்த்தைகளை மட்டும்தான் கூறுவார். போட்டியாளர்கள்தான் அந்தக் கேள்விகளை கச்சிதமாகக் கவ்விக்கொண்டு பெர்ஃபார்ம் செய்ய வேண்டும். எப்போதும் தலையை இரண்டு இன்ச் தூக்கி, நெஞ்சை நிமிர்த்தியே அமர்ந்திருக்கும் அர்விந்த் சுவாமி, போட்டியில் கலந்துகொள்பவர்களிடம் ‘வாழ்க்கையில ஒரே ஒரு ஐடியாவை எடுத்துக்கோங்க. அந்த ஐடியாவையே உங்க வாழ்க்கையாக்கிக்கோங்க...’ என விலையில்லா அட்வைஸும் வழங்குவார். முகத்தில் முகமூடி மாட்டிய 30 பேர் கொண்ட குழு ஒன்று போட்டியாளரின் பின்னால் நின்றுகொண்டு, அவரது முகத்தில் வெறும் கையால் சப்பாத்திக்கு மாவு பிசைந்துகொண்டிருப்பார்கள். அவ்வப்போது ஸ்கீரினில் தெரியும் கேள்வியைப் படிக்கவிடாமல், போட்டியாளர்களின் கண் முன்னால் கையை ஆட்டிக் கடுப்படிப்பார்கள். நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே ‘போன் எ ஃப்ரெண்ட் ஆப்ஷனில், போன் செய்யவிருக்கும் நபர்கள்’ என்ற பட்டியலை அர்விந்த் சுவாமியிடம் கொடுத்துவிட வேண்டும். அவரும் முன்கூட்டியே பட்டியலில் இருக்கும் பயபுள்ளைகளின் நெஞ்சில் ஓட்டையைப் போட்டு, சிப்பைப் பதித்துவிடுவார். அப்படியே அவர்களோடு ‘ப்ளூடூத்’தில் பேசி பதிலையும் வாங்கிக்கொள்வார்.

வந்திருக்கும் போட்டியாளர்களை விசாரிப்பது மட்டுமல்லாது, ‘ஓடக்கார மாரிமுத்து, ஓட்டவாய் சொரிமுத்து ஊருக்குள்ள எல்லோரும் சௌக்கியமா?’ என மற்றவர்களைப் பற்றியும் அன்போடு விசாரிப்பார். போட்டியாளர்களிடம் எப்போதும் சுலபமான கேள்விகளையே சாந்தமாகக் கேட்பார். பதில் தெரியாமல் ‘சார், ஏதாவது க்ளூ இருந்தா கொடுங்க சார்’ எனப் போட்டியாளர்கள் கேட்டால், ‘ஒரு கோடி ஜெயிக்கணும்னு நான் கொடுக்கலை, நீ கேட்டே நான் கொடுத்தேன்’ என க்ளூவும் கொடுப்பார். அதிலும் நமக்கு பதில் சுத்தமாகத் தெரியாமல் கணக்குப் பரீட்சை கொஸ்டினைப் பார்த்த கடைசி பெஞ்ச் ஸ்டூடண்டைப் போல் விழித்துக்கொண்டிருந்தால், கையில் ஒரு வாழைப்பழத்தைக் கொடுத்துப் பொறுமையாகக் கேள்வியை எடுத்துரைப்பார். அப்போதும் பதில் தெரியாமல் மூளை படுத்துவிட்டால், ‘தளபதி’ பட கலெக்டர் போல் போட்டியாளர்களைக் கழுவி ஊத்துவார். ஒருவழியாகப் பதிலை சரியாக சொல்லிவிட்டு சந்தோஷத்தில் நாம் அலறினாலும் ‘கத்த வேண்டியதெல்லாம் கத்தி முடிச்சுட்டீங்களா? நீங்க ஜெயிப்பீங்கனு இந்த ஊர் நம்பலாம். நான் நம்ப மாட்டேன்’ எனக் கடுப்படிப்பார். கம்ப்யூட்டர் ஜியின் பெயரை விக்கி என மாற்றிவிடுவார். போட்டியாளர்கள் பதில் சொன்னதும் ‘விக்கி ஹோல்ட்’ என்பார், பதிலுக்கு விக்கியும் ‘ஓகே ஜி’ என சொல்லும். சில சமயங்களில் ‘நான் சொல்றதைக் கேட்டு செய்யணும்கிறதுக்காக கேட்டுக் கேட்டு செய்யணுமா?’ என காண்டாகி விக்கியை தூக்கிப்போட்டு உடைத்தாலும் உடைத்துவிடுவார். அதேபோல், தவறான பதிலைச் சொல்லி போட்டியில் இருந்து வெளியறும் சூழ்நிலை வந்தால், தன் மிடில் விரலை தன் புருவத்தில் வைத்துக் காட்டி பிரியாவிடை கொடுப்பார். அவ்வ்வ்... ‘50-50 ஆப்ஷனில் இரண்டு ஆப்ஷனை தூக்கினால், ஜெயிக்கிற பணத்துல பாதி எனக்கு’ என டீல் பேசுவார். எல்லாவற்றையும்விட டைம் ஓடிக்கொண்டிருந்தால், ‘மணி ஓடுது’ எனச் சொல்ல மாட்டார். ‘மணி சார் ஓடுறாரு’ என்றுதான் சொல்வார். ஏன்னா, மணிரத்னம்தான் வாழ்க்கை கொடுத்த குரு!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick