பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டாங்க!

பொதுவா பொண்டாட்டிங்க ஊருக்குப் போயிட்டா, ஃபீல் பண்றவங்களைவிட ‘தங்கமணி ஊருக்குப் போயிட்டா’னு கொண்டாடுற புருஷர்கள்தான் அதிகம் பாஸ். இந்தக் கொண்டாட்டம் எல்லாம் ரெண்டு நாளைக்குதான். அப்புறம் ‘எப்போம்மா திரும்பி வருவே?’னு காலை, மதியம், இரவு உணவுக்குப் பின் போன் பறக்கும் மனைவிக்கு. அவ்வளவு திண்டாட்டம்ஸ். சரி, தங்கமணி ஊருக்குப் போயிட்டா, என்னதான் நடக்கும்னு பார்க்கலாமா?

முதல் நாள் பார்ட்டி நடக்கும். ஃப்ரெண்ட்ஸ்கூட குடிச்ச பீர் பாட்டில், பீட்சா பாக்ஸ், எடுத்தா தூள் கொட்டும் சிப்ஸ் பாக்கெட், தீர்ந்துபோன செவன்- அப் ப்ளாஸ்டிக் பாட்டில், ஆம்லேட் போட்டுக் கழுவாத தோசைக்கல்னு வீடே கலவரமா இருக்கும். குடிச்ச எந்த மூஞ்சியும் சுத்தம் செய்ய எட்டிப்பார்க்காது. க்ளீனிங் நமக்கு நாமே.

முதல்நாள் வரும் வேலைக்காரப் பெண், அம்மா வீட்டில் இல்லைனு தெரிஞ்சுக்கிட்டா, ரெண்டாவது நாள்லேர்ந்து டிமிக்கி கொடுப்பாங்க. குப்பையான வீட்டை சுத்தம் செய்யலைனாலும் தன்னோட அழுக்கு டிரெஸ்ஸையாவது துவைக்க 26 தடவை போன் செஞ்சு எக்ஸ்ட்ரா காசு அழுது கூப்பிடணும்.

தன் வீட்டுக்கு வந்த பேப்பர் எது, பக்கத்துக்கு ஃப்ளாட்டுக்கு வந்த பேப்பர் எதுன்னுகூடத் தெரியாது. அந்த வீட்டு வாண்டு, ‘அங்கிள், எங்க பேப்பரைக் கொடுங்க’னு மூஞ்சிக்கு நேரா கை நீட்டி கேட்கும்போது அவங்க பேப்பர்ல தமன்னா பற்றிக் கிசுகிசு படிச்சுட்டு இருப்போம்.

மொபைலை பாத்ரூம் சோப் ஹோல்டர், வாட்ரோப், சில சமயம் வாஷிங் மெஷின் மேல  வெச்சுட்டு லேண்ட்லைன்லேர்ந்து போன் அடிச்சுத் தேடிக்கிட்டு இருப்போம். ஏன்னா கத்திக் கூப்பிட்டா, தேடிக் கொடுக்க தங்கமணி இல்லையே.

கரன்ட் போச்சுனா, கேபிள் போச்சுனா, ‘மிஸ்டர். ரங்கநாதன், உங்க வீட்டுல கேபிள் இருக்கா?’, ‘மிஸ். வனிதா, உங்க வீட்டுல கரன்ட் இருக்கா? எலெக்ட்ரீஷியன் நம்பர் கொஞ்சம் தர முடியுமா?’னு அடுத்தவன் தூக்கத்தைக் கெடுத்து டார்ச்சர் பண்ணிட்டு இருப்போம்.

24 மணி நேரமும் வைஃபை ஓடிக்கிட்டே இருக்கும். ஒய்ஃப் இருந்தா பார்த்துப் பார்த்து அணைச்சு வைப்பாங்க. நமக்கு எங்கே அந்தப் பொறுப்பு எல்லாம் இருக்கப்போகுது?

அயர்ன் செய்யாத, கலர் மேட்ச் ஆவாத ஒரு ஷர்ட், பேன்ட்டைப் போட்டுக்கிட்டு ஆபீஸ் போவோம். மனைவி ஊர்ல இல்லாத நேரத்துல பெர்சனாலிட்டி எல்லாம் பார்க்க முடியுமா பாஸ்?

தன்னோட டவல் எது, பசங்களோட டவல் எதுனு தெரியாது. பேபி டவலை எடுத்து யூஸ் பண்ணிட்டுத் துவைச்சுக்கூட போடாம பெட், சோபா, ரோலிங் சேர், டைனிங் டேபிள்... இதுல எது மேலேயாவது போட்டு வெச்சுட்டு தங்கம் ஊர்லேர்ந்து வந்ததும் வாங்கிக் கட்டிப்போம்.

ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்துப் போயிருக்கும். அதை அடக்கம் பண்ண மனசில்லாம வீட்டுல சமைக்க புது முடிவு எடுப்போம்.  கிச்சன் பக்கம் வந்திருந்தாதானே உப்பு எங்கே இருக்கு, ஊறுகாய் எங்கே இருக்குனு தெரியும்? வழக்கம்போல என்னத்தையோ கலந்து மாரியாத்தா கோயில் கூழ்னு மனசைத் திடப்படுத்திக்கிட்டு சாப்பிட வேண்டியதுதான்.

மனைவி ஊருக்கு வர்றதுக்கு முந்தின நாள், வீடே சுத்தமா இருக்கும். டேபிள், சோபா, கிச்சன், பெட், பாத்ரூம் எல்லாம் படு க்ளீன். (மனைவி வந்து எல்லா கப்போர்டையும் திறந்து பார்த்துட்டு அப்புறம் கொடுக்கும் அர்ச்சனை தனி. அதை வேற எபிசோடில் சொல்றோம்)

இனி தங்கமணி ஊருக்குப் போனா சந்தோஷப்படுவீங்க?

- தா.நந்திதா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick