மொழி இனி எதற்கும் தடையில்லை!

‘வெளிநாட்டுப் பெண்ணை மணந்த தமிழர்’னு அடிக்கடி பெட்டிச் செய்தியைப் படிச்சிருப்பீங்க. ‘எனக்கும் வெளிநாட்டுப் பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைதான். ஆனா, நமக்குதான் இங்கிலிபீஸே வராதே’னு ஏங்கிக்கிட்டு இருக்கிற எல்லோருக்குமே ஓர் இனிப்பான செய்தி. இனி இந்தி, இங்கிலீஷ், சைனீஸ், உருதுனு எல்லா மொழிகளையும் கத்துக்கணும்னு அவசியமில்லை. உட்கார்ந்த இடத்துல இருந்தே புரிஞ்சுக்கலாம். எப்படி?

அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் இருக்கிற ‘வாவர்லி லேப்ஸ்’ கம்பெனிதான் இந்தப் புண்ணிய வேலையைச் செஞ்சிருக்கு. பல வருடம் கஷ்டப்பட்டு கண்டுபிடித்திருக்கும் இந்தக் கருவியை, பாட்டு கேட்கிறதுக்காக ஹெட்-போனை மாட்டிக்கிட்டு புளூடூத் மூலமா மொபைல்ல கனெக்ட் பண்ணிக்குவோமே... அதே சிஸ்டம்தான் இதற்கும். சரி, மாட்டியாச்சு... பிறகு? அவ்வளவுதான். இனி நம்மகிட்ட வந்து நமக்குப் புரியாத பாஷையில் பேசி நேரத்தை வீணடிக்கிற, ‘என்னைப் பார்த்தா இங்கிலீஷ் பேசுறவன் மாதிரியா தெரியுது?’னு எரிச்சல்படுத்துற கேரக்டர்களுக்கெல்லாம் நீங்க டஃப் கொடுக்கலாம். சுருக்கமா சொன்னா, எந்த ஒரு மொழியையும் நீங்கள் புரிந்துகொள்ளலாம். ஆனால் பேச முடியாது!

அப்புறம்? மொழிப்பிரச்னை இல்லாமல் ஊர் சுற்றலாம். ஊர், மாநிலம், நாடு தாண்டியும் காதலிக்கலாம். ஏரியாவில் இருக்கிற பானிபூரி கடைக்காரன் உங்களைப் பார்த்து நக்கலா பேசுறானா, பெருமையா பேசுறானானு பொரணி கேட்கலாம். இதுவரை புரியாத மொழியில் யார்கிட்டேயாவது திட்டு வாங்கியிருந்தா, இனிமே திட்டாமப் பார்த்துக்கலாம். இப்படி ‘பைலட்’ கருவியில் இருக்கும் சிறப்பம்சங்கள் ஏராளம். இப்போதைக்கு ஸ்பானிஸ், ஃபிரான்ஸ், இத்தாலி, இங்கிலீஷ், இந்தி மொழிகளில் உள்வாங்கிக்கொள்ளும் வாய்ப்புகளோடு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் கருவியில் உலகின் அனைத்து மொழிகளையும் ‘டிரான்ஸ்லேட்’ செய்யும் வசதிக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு, வருகிற செப்டம்பரில் விற்பனைக்கு வரவிருக்கிறது ‘பைலட்’ கருவி. ஆர்வம் தாங்காமல் துடிப்பவர்களுக்காக ‘வாவர்லி லேப்ஸ்’ நிறுவனத்தின் இணையதளத்தில் இப்போதே புக்கிங் செய்துகொள்ளும் வசதி இருக்கிறது. விலை 129 அமெரிக்க டாலர்!

இந்தக் கருவி ‘கிலிக்கி மொழி’யை டிரான்ஸ்லேட் பண்ணுமானு கேட்டுடாதீங்க மக்கழே!

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick