‘‘வாயை மூடினா, விஜய் வாய்ஸ்!’’

நெய்வேலியைச் சேர்ந்த சிவக்குமார், ஒரு மிமிக்ரி கலைஞர். யூ டியூபில் ‘ஃபன்னி தமிழ் மிமிக்ரி’ என்ற சேனலைத் தொடங்கி மற்றவர்களுக்கு மிமிக்ரியும் கற்றுக் கொடுக்கிறார். அவரிடம் பேசியதில்...

‘‘எனக்கு சின்னவயசில் இருந்தே மிமிக்ரி ஆர்வம் அதிகம். நானும் ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆகணும்னு ஆசைப்பட்டு மிமிக்ரி பயிற்சியாளரைத் தேடி அலைஞ்சேன். ஒருத்தரும் கையில சிக்கலை, நம்ம ஊரில்  பாட்டுக்கு, டான்ஸுக்கு கோச்சிங் க்ளாஸ் இருக்கிற மாதிரி மிமிக்ரிக்கு தனியாக க்ளாஸ் எதுவும் இல்லை. நான் கம்யூட்டர் பிசினஸ் தொடங்கியதும் நிறைய டைம் கிடைச்சது. அந்த கேப்பில் நெட்டில் மிமிக்ரி வீடியோஸ் பார்த்து பிராக்டிஸ் பண்ணத் தொடங்கினேன். ரோபோ ஷங்கர், தாமு, படவா கோபி இவங்க மிமிக்ரிகளைத் தேடித் தேடிப் பார்ப்பேன். இதனால் ரொம்ப சீக்கிரத்திலேயே என்னால் மிமிக்ரி கத்துக்க முடிஞ்சுது, இப்போ 80 வாய்ஸ் வரை பேசுவேன். குறிப்பா ‘வேட்டைக்காரன்’ வேதநாயகம் வாய்ஸ், ஜெய் வாய்ஸ், பாரதிராஜா வாய்ஸ் இதெல்லாம் எனக்கு சூப்பரா வரும். அடுத்து என்ன புதுசா பண்ணலாம்னு யோசிச்சப்போதான் மிமிக்ரி கத்துக்க ஆசைப்படுறவங்களுக்கு கத்துக்கொடுக்கலாமேனு தோனுச்சு. வெப் கேமராவில் ரஜினி, அஜித், விஜய் வாய்ஸ்களை எளிமையா பேசுவது எப்படி எனப் பதிவு செய்து அதைக் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து என்னுடைய யூ டியூப் சேனலில் அப்லோட் பண்ண செம வரவேற்பு. விஜய் வாய்ஸ் பேசுவது ரொம்ப ஈஸி. வாயை மூடிக்கிட்டு அண்ணான்னு பேசினா அவர் வாய்ஸ் வந்திடும். வைப்ரேஷன் மோடுல ஒரு சாமி, ரெண்டு சாமின்னு பேசினா விக்ரம் வாய்ஸ் வந்திடும், அவ்வளவுதான். இப்படி ஒவ்வொரு வாய்ஸுக்கும் ஒரு கணக்கு இருக்கு. இப்போ மிமிக்ரியில் அனிமேஷன் கேரக்டர்களுக்கு டப்பிங் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கேன்.

என்னுடைய வீடியோக்களை பல நாடுகளிலும் பார்க்கிறாங்க. நீங்க ரொம்ப ஈஸியா கத்துக்கொடுக்குறீங்கனு கமென்ட்ஸ் சொல்றாங்க. இதோடு தமிழ் மொபைல் என்ற யூ டியூப் சேனலும், கிருக்கிஃபை என்ற யூ டியூப் சேனலும் எனக்கு இருக்கு. தமிழ் மொபைல் சேனலில் மார்க்கெட்டுக்கு புதுசா வரும் மொபைல்கள் பற்றி தகவல்களை வெளியிடுறேன். அதே மாதிரி கிருக்கிஃபை சேனலில் அனிமேஷன் தொடர்பானத் தகவல்களைக் கொடுக்கிறேன். இவை எனக்கு பொழுதுபோக்கா மட்டும் இல்லாம விளம்பரங்கள் மூலம் ஓரளவுக்கு வருமானமும் வருது. எதிர்காலத்தில் இன்னும் புதுப் புது வாய்ஸ் பேசி மிமிக்ரியை அடுத்த லெவலுக்குக் கொண்டுபோகணும், அதுதான் என்னுடைய ஆசை’’ என்கிறார் சிவகுமார்!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick