“கொஞ்சநாளில் தே.மு.தி.க-வே இருக்காது!”

தி.மு.க-வுடன் கூட்டணி வைக்காததால், தே.மு.தி.க-விலிருந்து விலகி, ‘மக்கள் தே.மு.தி.க’ என்ற கட்சியைத் துவக்கி, தி.மு.க கூட்டணியில் இடம் பிடித்தார் சந்திரகுமார். தி.மு.க தோல்வியைத் தழுவியுள்ள நிலையில் அவருடைய ரியாக்‌ஷன் என்ன? பேசியதில்...

‘‘தி.மு.க ஆட்சிக்கு வரணும்ங்கிற உங்க நோக்கம் நிறைவேறலையே?”

‘‘அ.தி.மு.க ஜெயிச்சதுக்குப் பிரதான காரணம் பணம்தான். அதையும் மீறி, கூட்டணிக் கட்சிகளோட எண்ணிக்கையைச் சேர்க்காம 89 தொகுதியில ஜெயிச்சிருக்காங்க. ‘தே.மு.தி.க-மக்கள் நலக் கூட்டணி-த.மா.கா’ அ.தி.மு.க ஆட்சியில் ஏறாம தடுக்கிறதுக்கான முயற்சியைக் கொஞ்சம்கூட எடுக்கலை. பிரசாரத்துலகூட அ.தி.மு.க-வை மென்மையாகவும், தி.மு.க-வை வன்மையாகவும் விமர்சனம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இந்த ரெண்டு காரணங்கள்தான் தி.மு.க-வோட வெற்றியைத் தடுத்துடுச்சு. ஏன்னா, அ.தி.மு.க-வை ஆட்சிக்குக் கொண்டுவந்ததில் அந்தக் கூட்டணியில் இருந்தவங்களுக்கு மறைமுகமான பயன்கள் இருந்தன.’’

‘‘தே.மு.தி.க-வுல இருந்து பிரிந்த நீங்கள், மூன்றில் ஒரு தொகுதியைக்கூட ஜெயிக்கலையே?”

‘‘பணத்தால எங்களைத் திட்டமிட்டுத் தோற்கடிச்சுட்டாங்க. பொய் சொல்லலை. ஒரு தொகுதிக்கு 1,000 ரூபாய் கொடுத்த சம்பவங்கள் எல்லாம் இங்கே நடந்திருக்கு. இது தமிழ்நாட்டுல இருக்கிற எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், நாங்க சில 1,000 வாக்குகள் வித்தியாசத்துலதான் தோல்வி அடைஞ்சிருக்கோம்.’’

‘‘விஜயகாந்த் மீண்டும் உங்களைக் கூப்பிட்டால் என்ன பண்ணுவீங்க?”

‘‘(பொங்குகிறார்) அந்தக் கட்சியெல்லாம் இன்னும் கொஞ்சநாள்ல இருக்கானு தேடணும். தமிழ்நாட்டு மக்களுக்கும், அவரை நம்பியிருந்த கட்சித் தொண்டர்களுக்கும் பெரிய துரோகம் செஞ்சுட்டார் விஜயகாந்த். அதைச் சுட்டிக்காட்டித்தான் நாங்க வெளியே வந்தோம். அதனால, மீண்டும் அவரோட கட்சியில சேர்ற பேச்சுக்கே இடமில்லை. எங்க பாதை தனியா இருக்கு. தவிர, அப்படியெல்லாம் அழைப்பு விடுக்கிற ஆள் இல்லை விஜயகாந்த். முதல்ல கூப்பிடட்டும், அப்புறம் பார்ப்போம்.’’

‘‘உங்க ‘மக்கள் தே.மு.தி.க’வோட கொள்கைதான் என்ன?”

‘‘ஆரம்பிக்கிறப்பவே சொன்னேன். இது கட்சி கிடையாது, அமைப்பு. தமிழகத்துல மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புறாங்க. அதைக் கலைஞர்தான் கொடுக்கணும்னு இந்த அமைப்பை ஆரம்பிச்சு ஆதரவு கொடுத்தோம். அதுக்குப் பலன் கிடைச்சிருக்கு. ஏன்னா, தமிழக அரசியல் வரலாற்றிலேயே இவ்வளவு பலம் வாய்ந்த எதிர்க்கட்சி இதுவரை இருந்ததில்லை. ஆக, எங்க ஆதரவு நீடிக்கும். கூடிய சீக்கிரம் பொதுக்குழுவைக் கூட்டி மக்கள் தே.மு.தி.க-வோட அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பேசுவோம்.’’

‘‘தே.மு.தி.க - மக்கள் தே.மு.தி.க ஒப்பிடுங்களேன்?”

‘‘மூணே மூணு தொகுதிகளில் நின்ன நாங்க, கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் வாக்குகள் வாங்கியிருக்கோம். 104 தொகுதியில நின்ன தே.மு.தி.க பத்து லட்சம் வாக்குகள்தான் வாங்கியிருக்கு.’’

‘‘பொதுவா, ஒரு கட்சி உடைஞ்சா சின்னத்துக்குப் போராடுவாங்க. நீங்க எப்படி?”

‘‘அந்தக் கட்சியோட சின்னம் எனக்குத் தேவையில்லை. தோத்துப்போன கட்சியோட சின்னம் யாருக்கு வேணும்?’’

‘‘பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு முன் வரிசையில் இடம் கொடுக்காததுக்குப் பதில் சொன்னது, ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் ‘வணக்கம்’ வைத்ததுனு தி.மு.க-அ.தி.மு.க இடையே ‘ஆரோக்கியமான அரசியல்’ நடக்கிறதா பேசிக்கிறாங்க?”

‘‘மீண்டும் ஆட்சிக்கு வந்ததினால், அந்தம்மா போன ஆட்சியில எந்தத் தப்புமே பண்ணலைனு அர்த்தம் கிடையாது. அப்படி ஒரு கருத்தை மக்களும் ஏத்துக்க மாட்டாங்க. ஆனா, முதல்வரோட போக்குல கொஞ்சம் மாற்றம் தெரியுது. அதுக்காக மாறிட்டாங்க, நாகரிகத்தோட நடந்துக்கிறாங்கனு எடுத்துக்க முடியாது. பெரும் பலத்தோட இருக்கிற தி.மு.க-வை சட்டசபையில் எப்படி நடத்துறாங்கனு பார்ப்போம்.’’

‘‘வழக்கம்போல அ.தி.மு.க, தி.மு.க கட்சிகள்தானே ஆட்சிக்கு வருகிறது. அந்த ரகசியம் என்ன?”

‘‘மக்கள் மாற்றம்னு கேட்கிறதே ஆட்சி மாற்றத்தை மட்டும்தான். தவிர, எந்த அடிப்படையில் ‘நாங்கள்தான் மாற்று’னு பல பேர் கிளம்பினாங்கனு எனக்குத் தெரியலை. தேர்தலுக்கு மூணு மாசத்துக்கு முன்னாடிகூட அ.தி.மு.க-வுக்கு ஆதரவா பேசிக்கிட்டு இருந்தாங்க கம்யூனிஸ்டுகள். பத்துப் பதினைஞ்சு நாளைக்கு முன்னாடிவரை அ.தி.மு.க வாசல்ல காத்துக்கிட்டு இருந்தார் ஜி.கே.வாசன். இங்க இல்லைனா அங்க, அங்க இல்லைனா இங்கனு மாறி மாறி கூட்டணி வெச்சிக்கிட்டு இருந்தார் வைகோ. திடீர்னு கிளம்பிவந்து ‘நாங்கள்தான் மாற்று’னு சொன்னா, யாராச்சும் நம்புவாங்களா? மக்கள் யாரும் மாற்றத்தை விரும்பலை. இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு மாற்றாக ஒரு டீமை மக்கள் ஏத்துக்க மாட்டாங்க. இதுதான் யதார்த்தம்.’’

‘‘அடுத்து என்ன?”

‘‘தி.மு.க-வுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்போம். அவங்களால மட்டும்தான் நல்லாட்சி கொடுக்க முடியும்னு நம்புறோம். வளர்ச்சித் திட்டங்களை நம்பியது தி.மு.க, கவர்ச்சித் திட்டங்களை அறிவிச்சு ஆட்சியைப் பிடிச்சிருச்சு அ.தி.மு.க. வருங்காலத்துல தி.மு.க ஆட்சிக்கு வரும். அதுக்கு நாங்க உழைப்போம்!’’

- கே.ஜி.மணிகண்டன், படங்கள் : ஆ.முத்துக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick