கண்டுபிடிச்சது பேச்சுலர்ஸ்!

பெருசா யோசிச்சு சிறுசா மாத்துறனா, டெக்னாலஜி. போறபோக்குல எதையாவது செஞ்சு புதுப்புது விஷயங்களைக் கண்டுபிடிக்கிறது ‘பேச்சுலர்ஸ் ரூம்’ டெக்லானஜி. நம்மையும் அறியாம, நம்ம பசங்க பண்ணின சில அடடே கண்டுபிடிப்புகளைக் கவனிச்சிருக்கீங்களா?

செல்போனுக்கு சார்ஜ் போட ஸ்டாண்ட் இருக்கு. பேச்சுலர் ரூம்ல அது எதுக்கு? பிளக் பாயிண்டுக்குப் பக்கத்துல பயன்படுத்தாத சட்டையைத் தொங்கவிட்டு, சட்டை பாக்கெட்டுல சார்ஜ் போடுவாங்க. இல்லையா, ‘அம்மா குடிநீர்’ பாட்டிலை போஸ்ட்மார்ட்டம் பண்ணி, சுவரோட சேர்த்து ஆணி அடிச்சா, ஸ்டாண்ட் ரெடி!

அலமாரி வாங்குறதுக்குப் பல ஆயிரம். அதனால, அட்டைப்பெட்டியை ரெண்டாக்கி, அடிப்பகுதியை ஜட்டி பனியனுக்கு ஒதுக்குவாங்க. பெரிசா ஒதுக்குன தொகுதி, சட்டை பேன்ட்டுக்கு. பேச்சுலர் பசங்களைப் பொறுத்தவரை, இது அலமாரி இல்லை பாஸ். பீரோ!

பாதியா நறுக்கின தண்ணி பாட்டிலோட அடிபாகத்தை சார்ஜ் போடுற ஸ்டாண்ட் ஆக்கியாச்சு. மிச்சம் இருக்கிற முன்பாகத்தை மூடியை வெச்சு மூடிட்டுக் கவிழ்த்துப்போட்டா போதும். எப்பேர்பட்ட சிங்கமா இருந்தாலும், அறைக்குள்ள ‘ஆஸ்’ஸைத் தட்டி அசிங்கப்படுத்தாம, அதுல தட்டணும். ஏன்னா, இதுதான் பேச்சுலர்ஸ் ரூமின் நிரந்த ஆஸ்ட்ரே!

விதம்விதமான சமையல் குறிப்பு புத்தகங்களுக்கு டிமாண்ட் இருக்கலாம். ஆனா, மோர்க் குழம்புல உருளைக்கிழங்கு போடுறது. கோழிக்குழம்பு பொடியை ரசத்துல தெளிக்கிறது எனப் படிக்காத மேதையா பல சமையல் பரிசோதனைகளைப் பண்றது யாரு, நம்ம பயகதேன். தவிர, கிண்ணத்துல குழம்பு வைக்கிறதும், குழம்புச் சட்டியில் பால் காய்ச்சுறதுமாய் அனைத்துப் ‘பாத்திர’ங்களையும் அனைத்துக்கும் பயன்படுத்தும் பழக்கம் இங்கே இருந்துதான் வருது.

சொம்புக்குள்ள சுடுதண்ணியை ஊற்றி, சட்டையில் நாலு இழுப்பு இழுத்தா எப்பேர்பட்ட கசங்கலும் காணாமப் போகும். அதுக்கு ஏன் ஆயிரத்துச் சொச்சம் ரூபாய் கொடுத்து அயர்ன் பாக்ஸ் வாங்கித் தொலைக்கணும்னு இந்தச் சமுதாயத்துக்கு சமத்தா சொல்லிக்கொடுத்தது இவங்கதான். அதே சட்டையை துவைச்சுக் காயப்போடுறதுக்கு மொட்டைமாடியில் கொத்தா தொங்குற கேபிள் டி.வி வொயரைப் பயன்படுத்தலாம்னு கண்டுபிடிச்சதும், அந்தப் பழக்கத்தைத் தமிழகம் முழுக்கப் பரப்புனதும் இவனுகளேதான்.

வீட்டை சுத்தப்படுத்துறதுக்கு என்ன பண்ணுவீங்க? மாங்கு மாங்குனு கூட்டித் தள்ளுவீங்க. வேலைக்கு ஆள்வெச்சு துடைச்சுக்கிட்டு இருப்பீங்க. ஏன், கான்ட்ராக்டுக்கு ஆள் பிடிச்சு சுத்தப்படுத்துறவங்ககூட இருக்காங்க. ஆனா, வீச்சு புரோட்டா வீசுற மாதிரி பெட்ஷீட்டை ஒரு வீசு வீசி எடுத்தோம்னா, குப்பையெல்லாம் தெறிச்சு ஓடும்னு கண்டுபிடிச்சது பேச்சுலர்ஸ் மட்டும்தான்.

வெயிலுக்கு வெந்து சாகுறவங்க, ஈஎம்ஐ கட்டியாவது ஏசி வாங்கணும்னு பேசிக்கிறாங்க. ‘விலையில்லா மின்விசிறியில் ஈரத்துண்டைப் போர்த்தி வெச்சா போதும். ரூம் முழுக்க ஏசி ‘சுத்தி சுத்தி’ வேலை பார்க்கும்’னு கண்டுபிடிச்சதும் திருவாளர். பேச்சுலர்ஸ்தான்.

இது மட்டுமா? சோப்பைக் கரைக்காம துணி துவைக்கும் தந்திரங்கள், தீர்ந்துபோன டூத்பேஸ்ட்டுகளை நான்கு நாளைக்குப் பயன்படுத்துவது எப்படி?, சப்பாத்திக்கட்டை இல்லாத சமயத்தில் சப்பாத்தி உருட்டும் யுக்திகள்னு பேச்சுலர்ஸ் லைஃப்ல ஏகப்பட்ட கண்டுபிடிப்புகள் இருக்கு பாஸ்!

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick