கடை திறக்க லேட் ஆகும்!

டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் 12 மணிக்கு மாற்றப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டுக் குடிமகன்களுக்கு என்னென்ன அவலங்கள் நிகழும்? என சைட்-டிஷ் சாப்பிட்டுக்கொண்டே யோசித்ததில் மண்டையில் சிக்கிய சில மேட்டர்கள்...

தினமும் காலை பத்து மணிக்குக் கடை திறந்ததும் முதல் போணி செய்யும் சின்சியர் சிகாமணிகளுக்குத்தான் முதலில் பன்னு கருகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வாய்க்கு வந்தவாறு திட்டியபடி மேலும் சிலமணி நேரங்கள் கூடுதலாக காத்திருக்க வேண்டியிருக்கும்.

நைட் ஷிஃப்ட் வேலைக்குச் செல்லும் பன்னாட்டு நிறுவனக் கண்மணிகள் விடிந்ததும், நான்கு பெக் அடித்தால்தான் தனக்குத் தூக்கம் வரும் என டாஸ்மாக் வாசலில் நின்று கையைப் பிசைவார்கள்.

ராத்திரி பத்துமணிக்கு மேல் வேலை முடிந்துவரும் குடும்பஸ்தர்கள் கடை மூடிவிடும் அபாயம் இருப்பதால், காலையில் வேலைக்குப் போகும்போதே ஒரு பாட்டிலை வாங்கிப் பதுக்கி வைத்திருப்பார்கள். இப்போது அதற்கும் அம்மாவின் அறிவிப்பு ஆப்படித்துவிட்டதால், கண்கள் வியர்க்க மூடிய டாஸ்மாக்கைக் கடந்து செல்ல வேண்டும்.

சும்மா இருப்பதையே முழுநேர வேலையாக வைத்திருக்கும் வெட்டி வெங்கடாசலங்கள் இனிமேல் 12 மணி எப்படா ஆகும்? என மல்லாக்கப் படுத்து விட்டத்தை வெறித்துக்கொண்டிருப்பார்கள்.

அரசை வாழவைப்பதில் பெருத்த அக்கறைகொண்ட சமூக சேவகர்கள், வேறு வழியே இல்லாமல் ஞாயிற்றுக்கிழமையே ஒரு வாரத்திற்குத் தேவையான சரக்கையும் மொத்தமாக வாங்கிவைத்துத் தாய்க்கோழியைப் போல அடைகாப்பார்கள்.

கடை லேட்டாகத் திறக்கும் சோகத்தை மறக்க இரண்டு கட்டிங் எக்ஸ்ட்ராவாகப் போட்டு பக்கத்து டேபிள் சக குடிமகன்களிடம் புலம்பும் காட்சிகளை இனி எல்லா பார்களிலும் பார்க்கலாம்.  

பழக்கதோஷத்தில், குடிக்காமலேயே பத்து மணிக்கு மப்பு ஏறி ரோட்டை அளந்துகொண்டு திரிவது போன்ற விநோதமான வியாதிகள் பலருக்கு ஏற்படும்!

- விக்கி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick