இப்படித்தான் எழுதினோம்!

தில் தெரியுதோ இல்லையோ... சின்ன வயசுல காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுனு எந்தத் தேர்வுகள் நடந்தாலும் ‘சிறுகுறிப்பு வரைக’னு கேட்கிற மூன்று மார்க் கேள்விகளுக்கு குந்தாங்கூறா எதையாச்சும் எழுதிவைப்போம்ல? அப்படி அடிச்சிவிட்ட சில ‘சிறு குறிப்பு’கள்!

சப்பாத்திக் கள்ளி: சப்பாத்திக்கள்ளி என்பது ஒரு செடி. சப்பாத்தி மாதிரி தட்டையாக இருப்பதால், இதற்கு சப்பாத்திக்கள்ளி என்று பெயர் வைத்துவிட்டார்கள். தவிர, இது முள் முள்ளாக இருக்கும் என்பதால், யாரும் கிட்ட நெருங்க மாட்டார்கள். கிரிக்கெட் விளையாடும்போது பந்து இதில் சிக்கிக்கொண்டால் தேடும்போது ‘இங்குதான் இருக்கிறது’ என்று தெரிந்தாலும் சொல்ல மாட்டோம். ஏனெனில், நம்மிடமே முள்ளுக்குள் கையைவிட்டு எடுக்கச் சொல்வார்கள். மொத்தத்தில் இது கொஞ்சம் மோசமான செடிவகை!

கற்றாழை: வழவழப்பாக இருக்கும். ஆனால் இதிலும் முள் இருக்கும் என்பதால், கிட்டே நெருங்க மாட்டோம். என் அம்மா இதை அடிக்கடி பிடுங்கிவந்து தலையில் தேய்த்துக் குளிப்பாட்டுவார்கள். வாசனை நன்றாக இருக்காது என்பதால், உடனே ஓடிப்போய் ஷாம்பூ போட்டுக் குளித்துவிடுவோம். இதனால் பல பயன்கள் இருக்கின்றன என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால், வீட்டிலேயே இதை வளர்ப்பார்கள்.

மகாகவி பாரதியார்: பாரதி யார்? என்று டீச்சர் கேட்கும்போது, ஃபர்ஸ்ட் பெஞ்சில் இருக்கும் ‘படித்த’ பொண்ணுங்க இதற்குப் பதில் சொல்வார்கள். நல்லவிதமாகவே சொல்வார்கள் என்பதால், இவர் உண்மையிலேயே ரொம்ப நல்ல கவிஞர். அதனால்தான், இவரை மகாகவி என்று அழைத்திருக்கிறார்கள். தவிர, இவருடைய அருமை, பெருமைகளைப் படமாகவே எடுத்திருக்கிறார்கள். அதை எங்களுடைய பள்ளியிலும் திரையிட்டிருக்கிறார்கள். அதில், இவருடைய அத்தனை குறிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.

இரண்டாம் உலகப் போர்: முதல் உலகப் போருக்குப் பிறகு நடந்தது, இரண்டாம் உலகப் போர் எனப்படும். இதில் இரண்டாம் உலக நாடுகள் பங்கேற்றன. போர் என்றாலே தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையேதான் நடக்கும். இதிலும் அப்படித்தான் நடந்தது. தவிர, நான் நேரில் பார்த்ததில்லை என்பதால், போரில் என்னென்ன கருவிகள் பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், துப்பாக்கிகள் எல்லாப் போரிலும் இருக்கும் என்பதால், இரண்டாம் உலகப் போரிலும் நிச்சயம் இருந்திருக்கும். அகிம்சை வழிதான் சிறந்தது என்று காந்தியடிகள் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தர்: போதி மரத்திற்கு அடியில் அமர்ந்திருப்பார். ‘போதி’ என்றால் ‘சொல்லிக்கொடுத்தல்’ என்று கோனார் தமிழ் உரையில் சொல்லியிருக்கிறார்கள். ஆக, புத்தர் அங்கு அமர்ந்ததே மற்றவர்களுக்கு நல்லதைச் சொல்லிக்கொடுக்கத்தான். இவர் அமைதியாக இருப்பார் என்பதால், எல்லோருக்கும் இவரைப் பிடிக்கும். ஆளாளுக்கு புத்தர் சிலையை வீட்டில், அலமாரியில் வைத்திருப்பார்கள். இதிலிருந்தே தெரிந்திருக்கும், இவர் ரொம்ப நல்ல மனிதர் என்று.

ஐம்பெருங் காப்பியங்கள்: ஐஞ்சிறு காப்பியங்களைவிட இவை அளவில் பெரியவை. ஒவ்வொரு காப்பியமும் டிக்‌ஷனரி சைஸில் இருக்கும் என்பதால், எங்கேயாவது சில இடங்களில்தான் இந்தப் புத்தகங்களைப் பார்க்க முடியும். ஐந்து பெரும் புலவர்கள்தான் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்க வேண்டும். அந்தக் காலத்திலேயே இது நல்ல வரவேற்பு பெற்றது. அதனால்தான், இதை தமிழின் ‘ஐம்பெரும் காப்பியங்கள்’ என்று அழைக்கிறார்கள்.

இக்ஸோரா காக்ஸினியா: பெயரே வாயில் நுழையவில்லை என்பதிலேயே தெரிகிறது, இது ஏதோ ஒரு தாவரத்தின் அறிவியல் பெயர் என்று. உச்சரிப்பைக் கவனிக்கும்போது ‘விக்ஸ்’ மிட்டாய்க்கும் இந்தப் பெயருக்கும் ஏதோ தொடர்பு இருப்பதுபோலத் தெரிகிறது. ஆகவே, இது நல்ல செடியாகத்தான் இருக்கும்!

-கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick