வீடு தேடும் படலம்

மெட்ராஸுக்கு வேலைக்குப் போறேன்னு சொந்தக்காரய்ங்ககிட்ட எல்லாம் பெருமையா சொல்லிட்டுப் பெட்டி, படுக்கையோடு கிளம்பி கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு வந்ததிலேர்ந்து ஆரம்பிக்கும் நம் வீடு தேடும் படலம். ‘மீன் வாங்கப் போனவன் கருவாடு வாங்கின’ கதைதான்.

‘மெட்ராஸ்ல இவரைப்போய் பாரு’னு டி.சி.எஸ் ஓனர் கணக்கா பில்டப் கொடுத்து ஒரு அட்ரஸ் தந்துருப்பாய்ங்க. வந்து விசாரிச்சா, அந்த ஆள் ஆந்திரா பார்டர்ல கும்மிடிப்பூண்டியில குடியிருப்பார். அம்புட்டு தூரத்துல இருந்து வேலைக்குப் போறதுக்கு கொட்டாம்பட்டிலேருந்து தினமும் ஆம்னி பஸ்லேயே வந்துருவேன்யா!

சீரியல்கள்ல வர்ற வீடு மாதிரி ஒன்னைப் பார்த்து வாடகைக்குப் பிடிச்சுடலாம்னுதான் முதல்ல நினைச்சுருப்போம். விசாரிக்க ஆரம்பிச்சா, நாம வாங்குற ஆறுமாச சம்பளத்தை வாடகைனு சொல்லிக் கண்ணுமுழியைப் பிதுங்க வைப்பாய்ங்க.

ஃபைவ் ஸ்டார் வேணாம். சரி, ஒரு த்ரீ ஸ்டார் ரேஞ்சுக்கு சின்னதா ஒரு வீடு பாக்கலாம்னு போனா, அப்போதான் வயித்தெரிச்சலைக் கிளப்புற மாதிரி அந்த வசனத்தை சொல்வாய்ங்க, ‘பேச்சிலர்ஸ்க்கு வீடு கொடுக்க மாட்டோம்’. அதுக்காக ஊர்லேருந்து வரும்போதே பக்கத்துவீட்டுப் புள்ளைக்குத் தாலி கட்டியா கூட்டிட்டு வர முடியும்?

அடுத்த ஒரு வாரம் முழுதும் வீட்டைத் தேடித்தேடிச் சோர்ந்துபோய் கடைசியில் கழுதை, குடிசையா இருந்தாலும் பரவாயில்லைனு முடிவு பண்ணி ஒரு மேன்ஷனில் ரூம் பார்க்கத் தொடங்குவோம். அப்போ மட்டும் ஈசியா கிடைச்சுடுமா என்ன? நாலஞ்சு நாள் நடுமண்டை கனக்க, சர்பத் குடித்துக்கொண்டே வெறித்தனமாகச் சுற்றித் தேடினால் ‘காதல்’ பட சுகுமார் நமக்குக் காட்டியதுபோல திருவல்லிக்கேணியில் பெருச்சாளி ஓடிக்கொண்டிருக்கும் மேன்ஷன் கண்ணில் சிக்கும். கதவைத் திறந்ததும் க்ரீச்சென காலிங்பெல் அடிக்கும் சின்டெக்ஸ் டேங்க் சைஸ் ரூம் ஒன்று நமக்கு வாய்க்கும். “நானெல்லாம் எங்க ஊர்லே எப்படி இருந்தவன் தெரியுமா?” எனப் புழுங்கிக்கொண்டு அங்கேயே காலத்தைத் தள்ள வேண்டியதுதான்.

- விக்கி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick